தவறு செய்யாமலேயே… தவறுகள் வளர்ந்து கொண்டு வருவதன் காரணம் என்ன…?

தவறு செய்யாமலேயே… தவறுகள் வளர்ந்து கொண்டு வருவதன் காரணம் என்ன…?

 

உதாரணமாக… ரோட்டிலே செல்கின்றோம் அல்லது அக்கம்பக்கத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்கள் படும் கோபமோ வெறுப்போ… ஒருத்தருக்கொருவர் சண்டையிடும் பகைமை உணர்வுகளையோ… அல்லது அவர்கள் வேதனைப்பட்டுத் துடித்துக் கொண்டிருப்பதையோ நாம் பார்த்து விட்டால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது.

இத்தகைய பதிவின் நிலைகள் நமக்குள் வரும் போது
1.நம் நல்ல குணங்களை இயக்க முடியாது போய் விடுகின்றது.
2.நல்லதைச் சிந்திக்கும் நிலையும் இழந்து விடுகிறோம்.

புதிதாக மருமகள் குடும்பத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மேலே சொன்னதை எல்லாம் வேடிக்கையாகப் பார்த்து அது பதிவாகி இந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் அடுத்து அந்த மருமகள் தன் காரியங்களைச் சீராக செயல்படுத்த முடியாதபடி போய் விடுகிறது.

இதற்குக் காரணம் யார்…?

மற்றவர்கள்… அதாவது தவறு செய்வதையும் கோபப்படுவதையும் சண்டையிடுவதையும் நோயுடன் வாடுபவர்களையும் உற்று நோக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் பதிவாகி விடுகிறது. நல்லதை எண்ணும் பொழுது அதைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது… சிந்தனை குறைகிறது.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு வந்த பின்…
1.அந்த மருமகள் ஒரு பொருளைக் கையில் எடுத்தால் அதைப் பலமாக பிடிப்பதற்கு மாறாக…
2.ஒரு கரண்டியோ அல்லது பொருளையோ அல்லது ஒரு கண்ணாடி டம்ளரையோ எடுத்தால்
3.தன்னை அறியாமலே அது நழுவிக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் “இவருடைய நினைவாற்றல்… அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளுடன் செல்லப்படும் பொழுது…” அந்தக் கரண்டியை வலுவாகப் பிடிக்க முடியாத நிலையில் கீழே விழுந்து விடுகிறது.

இந்த உணர்வு வரப்படும் பொழுது
1.“இப்படி விழுந்து விட்டதே…” என்று எண்ணப்படும் பொழுது
2.அடுத்த பொருளையும் தவறிக் கீழே போட்டு விடுவார்கள்.

சிந்தனை இழந்து இப்படிப்பட்ட செயல்கள் நடக்கப்படும் பொழுது… அந்த வீட்டிலே தன்னை அறியாமலே ஒருவருக்கொருவர் சண்டையிடும் நிலை வந்து விடுகின்றது.

ஏன் இப்படிக் கீழே போட்டாய்…? என்று கோபமாக அதைக் கேட்டுப் பதிவாக்கி விட்டால் அடுத்து ஒரு இரண்டு முறை இவ்வாறு நடந்து விட்டால் மருமகள் மீது மாமியாருக்குக் கோபம் வருகிறது.

அந்தக் கோபத்தின் உணர்வு பதிவாகி அது வளர்ந்து விட்டால் “நம்மை இப்படிப் பேசுகின்றார்களே…” என்று மருமகளுக்கு இந்த எண்ணங்கள் வருகின்றது.

அப்படி வந்து விட்டால் அடுத்தடுத்து மற்ற காரியங்களையும் சீராகச் செயல்படுத்த முடியாதபடி ஆகிவிடுகிறது.
1.தவறு செய்யாமலேயே தவறுகள் வளர்ந்து கொண்டே வருகின்றது.
2.இதைத்தான் கீதையிலே எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

இங்கே தான் மகிழ்ச்சியான நிலையில் இருக்கப்படும் பொழுது அதைப் போல் மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசைகள் இருந்தாலும் அடுத்தவர் குடும்பத்தில் நடக்கும் குறைகளைப் பார்த்து இப்படி நடக்கின்றதே…! என்று உற்றுப் பார்த்த உணர்வுகள் தனக்குள் வலுவாகி… அதுவாக இங்கேயும் மாறி விடுகின்றது.

1.அந்தக் குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் தான் குறைகள் ஏற்பட்டத
2.அதே சந்தர்ப்பம் இங்கேயும் வந்து இயக்கி விடுகின்றது.

இப்படி இது வரிசையில்… மகிழ்ச்சியாக வாழக்கூடிய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பகைமைகள் வந்து விடுகின்றது.

சிறிது காலம் எல்லாம் சந்தோஷமாக இருந்தோம்.. வர…வர… எங்கள் குடும்பத்திலே மகிழ்ச்சியே இல்லை…! என்ன ஆனதோ…? எந்தத் தோஷமானதோ…? யார் சாபமிட்டாரோ…? யார் செய்வினை செய்தார்களோ…? என்ற உணர்வுகள் வந்துவிடுகிறது.

இப்படி ஆன பின் அடுத்து ஒரு ஜோசியரிடம் சென்றால்… இவருடைய நினைவாற்றலை வைத்து “உங்களுக்கு ஆகாதவர்கள் செய்வினை செய்துள்ளார்கள்…! அதனால் தான் இப்படி நடக்கிறது…!” என்று நம் உணர்வைக் கவர்ந்து அவர்கள் அப்படிச் சொல்வார்கள்.

பின் நாம் அதை உறுதிப்படுத்துவதற்காக அவருக்குக் காசையும் கொடுப்போம். அதற்குப் பின் நமக்குக் கெடுதல் செய்தவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று இந்த உணர்வுகளைத் தூண்டி விடுகின்றது.

1.அவர்களைத் திருத்த வேண்டும் என்பதற்கு மாறாக
2.அந்தக் குடும்பத்திற்கு நாம் ஏதாவது தொல்லைகள் ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு அங்கே வந்து விடுகிறது.

ஆனால் நாம் அவர்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலும் நம் உடலுக்குள் “இங்கே ஒரு குடும்பம் இருக்கின்றதே….”

நம் உடலில் நல்ல உணர்வுகளால் உருவான அந்த நல்ல அணுக்களுக்கு நாம் தொல்லைப்படுத்த எண்ணும் உணர்வுகள் பாய்ந்து “உடலுக்குள்… இந்தக் குடும்பத்திற்குள் பெரும் போராகிவிடும்…!”

இப்படிப் பெரும் போராகி நமக்குள் வேதனை உருவாகி விடுகிறது.

இதையெல்லாம் என்றைக்கு நாம் நிவர்த்தி செய்வது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

1.துருவத்தின் ஆற்றலை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் கவர்ந்து உங்களுக்குள் அதைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தான்
3.அடிக்கடி யாம் இதைப் உபதேசிப்பதும்… உங்களுக்குள் பதிவாக்குவதும்…
4.உங்களைக் கூர்ந்து கவனிக்க வைப்பதும்… உபதேசத்தில் கவனம் செலுத்தும் படி செய்து
5.உங்கள் உடலில்… முன் இருக்கும் விலா எலும்புகளில் இதைப் பதிவாக்குகின்றோம்.

இதை உங்கள் கண்களால் உற்று நோக்கிக் கவரப்படும் போது அது உங்களுக்குள் ஊனாகப் பதிவாகி விடுகின்றது. இந்தப் பதிவை மீண்டும் நீங்கள் எண்ணினால்
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை நுகர்வதும்
2.அதற்குத் தக்க உயர்ந்த சிந்தனைகள் கொண்டு… தெளிவான நிலையில் தெளிவான வாழ்க்கை நடத்தவும் இது உதவும்.

அதற்குத்தான் உபதேசங்களைக் கொடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும்படி செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

Leave a Reply