“சாதாரணமாக எண்ணினாலே…” அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத்தான் உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்

“சாதாரணமாக எண்ணினாலே…” அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத்தான் உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்

 

பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி அடைந்து… மனிதனாக உருவாக்கிய நம் உயிரை மதித்துப் பழகுதல் வேண்டும். இது அவனுடைய உடல்…!

1.நாம் புறத்திலிருந்து நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்…
2.பிறிதொரு அணுக்களின் மலமே இந்த உடல்
3.உயிரான ஈசனின் உணர்வின் இயக்கத்தில் இந்த அணுக்களின் இயக்கமாக இருக்கின்றது.

உயிரான ஈசன் வெளியே சென்று விட்டால் உங்களுக்கு ஏது மலம்…? உயிர் வெளியே சென்றால் இந்த உடலான சிவம் சவமாகி விடுகின்றது. சிறிது நேரம் இயக்கச் சக்தி இல்லை என்றால் உடல் நாற்றம் ஆகி விடுகின்றது.

நாற்றமாகும் பொழுது இந்த உடலை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் புழுக்களாக மாறுகின்றது. முதலில் ஜீவான்மாக்களாக இருக்கின்றது… உயிரான்மாவாக மாறுகின்றது.

எதன் எதன் உணர்வை எடுத்து இந்த உறுப்புகளில் எதை எதைச் சாப்பிட்டதோ அதற்குத்தக்க உறுப்பின் தன்மை கொண்டு “காற்றிலே சூட்சும இயக்க அணுக்களாக மாறுகின்றது…!

மற்றொரு உடலுக்குள் சென்றவுடன் அங்கே உறுப்புகளைச் சாப்பிடும் தன்மை வருகின்றது. நுரையீரல் கல்லீரல் என்று இப்படி மனித உடலுக்குள் சுவாசத்தின் வழி கூடி உள் சென்று அதை உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.

அதே சமயத்தில் உடல் அழுகும் நிலை வரும் பொழுது தோலை உருவாக்கிய அணுக்களுக்குள் சென்றால் தோல் வியாதியாக தோல் உறியும் தன்மை வருகிறது.

1.உடலை விட்டு உயிர் வெளியே சென்ற பின்
2.இந்த உடலை வளர்த்த அந்த அதனை அணுக்களும்
3.எத்தனை ரூபங்களாக மாறுகிறது…? என்ற நிலையை உணர்ந்தால் போதும்.

எனது உடல்… எனது சொத்து… எனது நிலை…! என்று வரப்படும் பொழுது
1.தான் எண்ணியது நடைபெறவில்லை என்றால் வேதனையை வளர்த்து விஷத்தின் தன்மையாக மாறி
2.அதற்குத் தக்க அடுத்த உடலாகப் பெறும் தகுதியையே இந்த உயிர் உருவாக்கி விடுகின்றது.

ஆக… கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்… உயிர் அவ்வாறு மாற்றி விடுகின்றது. இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.

இருபது வருடம் காடு மேடெல்லாம் அலையச் செய்து இயற்கையினுடைய இயக்கங்கள் எவ்வாறு…? என்ற உண்மைகளை குருநாதர் எனக்கு (ஞானகுரு) உணர்த்தினார்.

சாதாரண பாமர மக்களுக்கும் இந்த உண்மையின் உணர்வை ஊட்டித் தீமைகளை அகற்றிடும் வலிமை பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

உதாரணமாக… இங்கே திருடன் வந்தான்… பொருள்களைத் திருடினான்…! என்று பதிவு செய்தால் அதை “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்… பதிவாகும்.

சமயத்தில் ஒரு கஷ்டம் வந்தால்… “நாம் ஏன் திருடக்கூடாது…!” என்ற எண்ணம் தூண்டி நம்மையும் திருட வைத்துவிடும்.

அதே சமயத்தில் ஒருவன் அதைச் செய்தான்… இதைச் செய்தான்… ஆகையினால் பதிலுக்கு நான் அவனை உதைத்தேன்..! என்ற உணர்வை நுகர்ந்தால்… இந்த உணர்வுகள் திருத்தி வாழும் நிலைகளைச் செய்வதற்குப் பதிலாக உதைக்கும் நிலையே வருகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலைகள் வராதபடி தடுப்பதற்காக… அருள் ஞான உணர்வுகளை உங்களுக்குள் ஊட்டி அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம். அதை நீங்கள் பெற முடியும்… எளிதானது தான்…!

1.சாதாரணமாக நீங்கள் எண்ணினாலே அந்த அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத்தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றேன்.
2.இந்தத் தகுதியை நீங்கள் இழந்தால்… “உங்களுக்குத் தான் நஷ்டம் எனக்கு அல்ல…!”

நீங்கள் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஆசை எனக்குள் வலுவாக இருக்கிறது. உங்கள் உயிரை மதிக்க வேண்டும்… அவனால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை… உடலைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்…! என்ற நோக்கத்தில் தான் இதைச் சொல்கிறேன்.

ஒரு சிலர் ஆலயத்திற்குச் சென்று தெய்வத்திற்கு தங்கத்தில் காசு அபிஷேகம்… செய்வார்கள். இது அது போன்று அல்ல.

1.மனதைத் தங்கமாக்க வேண்டும்
2.மனதைத் தெளிவாக்க வேண்டும்
3.மனதைத் தெளிந்த நிலையாகப் பெறச் செய்ய வேண்டும்
4.தங்கத்தைப் போன்று மன உறுதி கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

Leave a Reply