செல்ஃபோன்களில் பதிவு செய்வது போல் அகஸ்தியர் உணர்வுகளை நம் ஊன்களுக்குள் பதிவாக்க வேண்டும்

செல்ஃபோன்களில் பதிவு செய்வது போல் அகஸ்தியர் உணர்வுகளை நம் ஊன்களுக்குள் பதிவாக்க வேண்டும்

 

பரிணாம வளர்ச்சியில் நாம் தீமைகளை நீக்கி வளர்ந்தோம். அகஸ்தியன் தீமைகளை நீக்கித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அதை நாம் எடுக்க வேண்டும்
2.அதை எடுத்து நம் உடலில் பதிவு செய்து நம் உடலில் உள்ள இரத்தங்களில் பரவச் செய்ய வேண்டும்.
3.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

உதாரணமாக விஞ்ஞான அறிவுப்படி செல்ஃபோன்களை (AIRCELL) வைத்திருக்கின்றார்கள் அதிலே எங்கிருந்து எல்லாம் பேசுகின்றார்களோ அந்த நம்பர் தெரிந்தால் பேசுகிறோம்.

வருகிறது… ரெக்கார்ட் செய்கிறோம்… மீண்டும் தொடர்பு கொள்கிறோம். திரும்பப் பேசும் போது யார்… யார்…? என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

செல்ஃபோன்களில் யாரிடம் எல்லாம் நாம் பேசுகின்றோமோ பதிவாக்குகின்றோமோ தெரிந்து கொள்கின்றோமோ இது அனைத்துமே பதிவாகி ஒரு ரெக்கார்டு போன்று ஆகிவிடுகின்றது. திரும்பி அவர்களுக்கு ஃபோன் செய்தோம் என்றால் அங்கே போகிறது.

இதே மாதிரித் தான் நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் (ஊனுக்குள்) அதைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றது – எலும்புக்குள்.

அதையெல்லாம் நாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
2.எலும்புகளுக்குள் இருக்கும் ஊனுக்குள் (செல்கள்) அங்கே செல்போன்களில் பதிவாக்குவது போன்று இப்பொழுது பதிவாக்கி
3.அதை கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

அதைப் பெருக்கிக் கொண்டு வந்தால் நமது வாழ்க்கையில் முந்தி இதற்கு முன்னாடி எத்தனை வகையான அறியாத நிலைகள் குறைகளை செய்தோமோ அதை எல்லாம் குறைக்க முடியும்.

இப்படிக் குறைத்துப் பழகுவதற்குத் தான் நாம் இருக்கக்கூடிய தியானம். சுவாமி செய்வார் சாமியார் செய்வார் ஜோதிடம் செய்யும் யாகம் செய்யும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

நாம் கண்களில் பார்க்கின்றோம்… கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் மற்றவரிடமிருந்து வெளி வருவதைக் கவர்ந்து இந்த நோய்… இந்த குறைபாடு… இந்தத் தவறு என்று அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

தெரிந்து கொள்கின்றோம்… கெட்டவன் என்றால் விலகிக் கொள்கிறோம். விலகினாலும் அந்தக் கெட்ட உணர்வுகள் கொண்டு “மோசமானவன்… மோசமானவன்” என்று பேசுகிறோம்.

1.அவன் உடலில் விளைந்த உணர்வுகள் இங்கே நம் எலும்புகளுக்குள் பதிவாகி
2.நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்தில் கலந்து அப்படிப் பேசக்கூடிய அளவிற்கு நம் உணர்வுகளைத் தூண்டி
3.அந்த அணுக்கள் விளைய ஆரம்பிக்கின்றது.

நாம் நினைக்கின்றோம் அவன் தான் தவறு செய்தான் என்று. ஆனால் உடனடியாக அதைத் துடைத்துப் பழகவில்லை என்றால் அவன் உடலில் விளைந்த தீமை நமக்குள் விளைந்த பின்… அவனைப் போன்று நாம் பல மடங்கு தவறு செய்யக்கூடியவர்களாகவே வந்து விடுகின்றது.

இதை நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.

கையிலே அழுக்குப்பட்டால் எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ உடலில் அழுக்குப்பட்டால் எப்படிக் குளிக்கின்றோமோ துணியில் அழுக்குப்பட்டால் எப்படித் துவைக்கின்றோமோ இது போன்று தான் ஆன்மாவில் படக்கூடிய அழுக்குகளை நாம் துடைத்து பழக வேண்டும்.

ஏற்கனவே நம் உடலில் ஜீவ அணுக்களாக அது இருக்கும் பொழுது அதற்கு அந்தத் தீய உணர்வு ஆன்மாவாக இருக்கும். நாம் எடுக்கக்கூடிய இந்த தியானத்தின் மூலம் அந்த ஆன்மாவையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே தியானம் எடுத்துப் பழகியிருக்கின்றோம். அதன் துணை கொண்டு நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்
1.நம் வாழ்க்கையைப் புனிதப்படுத்துவதற்கும்
2.சிந்தித்துச் செயல்படுத்துவதற்கும் அமைதிப்படுத்துவதற்கும்
3.அருள் ஞான வாழ்க்கை வாழ்வதற்கும் இது பயன்படும்.

இல்லையென்றால்…
1.நம் உடலில் உருவான அணுக்கள் அது சாப்பாடுக்கு ஏங்கத்தான் செய்யும்
2.உணர்ச்சியை உயிரிலே ஊட்டத்தான் செய்யும்
3.கண் வழி கவரத் தான் செய்யும்
4.உயிரிலே மோதத் தான் செய்யும்
5.அதே வேதனை உணர்வு நமக்குள் வரத்தான் செய்யும்.
6.அப்படியே விட்டு விட்டால் அதை மாற்றவும் முடியாது அந்த உணர்வு தான் வேலை செய்யும்

ஆகவே நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்குமே வாழ்க்கையை தியானம் என்று நாம் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

சிறிது காலம் தான் வாழுகின்றோம் நூறு வருடம் வாழ்ந்தாலே அதிகம் தான். சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டுகின்றார்கள் நாம் எதையெல்லாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ நம் உயிர் அதை எல்லாம் உருவாக்கிவிடும்… அந்தக் கணக்குகள் கூடிவிடும்

அதிலே எந்தக் குணத்தை இந்த வாழ்க்கையில் நாம் அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் வேதனை என்றால் அடுத்துப் பாம்பு… கோபம் என்றால் புலி… வெறி என்றால் நாய் நரி போன்ற நிலைகளுக்கு நமது உயிர் இந்த உடலை மாற்றிவிடும்.

நம் உடலில் எத்தனை குணங்கள் இருக்கின்றதோ அதைப் போல பரிணாம வளர்ச்சியில் குணங்கள் கொண்ட உயிரினங்கள் எத்தனையோ உண்டு.

எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த விஷம் இயக்குகின்றதோ அதனதன் வழி இயக்குகின்றது. இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ இன்று மனிதன் என்றாலும்… “இன்றைய செயல் நாளைய உடலாக மாறும்…!”

உயிர் மாறுவதில்லை.. உயிர் உணர்வுகளை மாற்றிக் கொண்டே இருக்கும்… உடலை மாற்றிக் கொண்டே இருக்கும்.

உயிரோடு ஒன்றி “ஒரே நிலையாக நிலை கொண்டு இருப்பது…” துருவ நட்சத்திரம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்து நம் உடலில் பெருக்கி
2.நாமும் இனி பிறவியில்லை என்ற நிலையை அடைந்து… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
3.எந்த வேதனையும் நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ளப் பழகுதல் வேண்டும்.

Leave a Reply