கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் சூட்சமம்

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் சூட்சமம்

 

மாயவரத்தில் ஒரு டாக்டர் இருக்கின்றார். அவருடைய தாயாருக்கு வயது எண்பது இருக்கும் அவருடைய கணவர் உடலை விட்டுப் பிரிந்து விட்டார்.

அந்தத் தாய் “என் கணவர் என்னுடன் தான் இருக்கின்றார்…” என்ற நிலையிலே அது வாழ்ந்தது. மற்றவர்கள் பொட்டையும் தாலியை நீக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

என் கணவர் என்னுடன் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் அதை நீக்கஸ் சொல்கிறீர்கள்…? என்று மற்றவர்கள் சொல்வதை ஏற்காதபடி வீட்டிற்குள்ளேயே அடங்கி இருந்தது…. வெளியே சென்றால் அதையே கேட்கிறார்கள் என்று…!

அந்த அம்மா உபதேச வாயிலாக யாம் வெளிப்படுத்திய புத்தகங்களை இதற்கு முன்னாடி படித்திருக்கின்றார்கள். அதை மனதில் எண்ணிக் கொண்டு
1.இந்த மாதிரி ஒரு சாமி (ஞானகுரு) வருகின்றார்… அவரை நான் பார்க்க வேண்டும்
2.அவரை பார்த்து அவர் என்ன சொல்கிறார் என்ற விளக்கங்களைக் கேட்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருந்தது.

ஆனால் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

நான் (ஞானகுரு) அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அப்போது
1.தெரிந்தோ தெரியாமலோ அந்த எண்ணம் (என்னுடன் தான் கணவர் இருக்கிறார்) எனக்கு வந்தது
2.சாஸ்திரங்களைப் பற்றி படிக்கும் பொழுது எனக்கு அந்த உள் உணர்வு ஒன்று தோன்றியது என்று
3.விபரங்களை எல்லாம் அந்த அம்மா சொல்லியது.

கணவனுடன் இணைந்து வாழ்கின்றோம். இருவரும் ஒன்றாகி விட்டால் மனைவி இறந்தால் கணவனும் உடனே இறக்கின்றான்… கணவன் இறந்தால் மனைவி இறந்து விடுகிறாள்…!
1.இப்படி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்து ஒரே உணர்வோடு சென்றால்
2.அந்த ஆன்மாக்கள் எங்கே செல்கிறது…? என்று இந்த ரகசியத்தை எல்லாம் நான் எடுத்துச் சொன்னேன்.

எனக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…? என்று அந்த அம்மா என்னிடம் கேட்கின்றது.

உங்களுடைய தாய் கருவிலே நீங்கள் விளையப்படும் பொழுது
1.இந்த உணர்வைப் பற்றி நீங்கள் கேட்டதால் உங்கள் உடலில் விளைந்திருக்கின்றது
2.அந்த உணர்வு தான் உங்களை இயக்குகின்றது என்று விபரத்தைச் சொன்னேன்.

கணவர் என்னுடன் தான் இருக்கின்றார் என்று தான் அறியாதபடியே அவர்கள் எண்ணிச் செயல்பட்டார்கள். ஆனால் சாங்கியம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை… சாங்கியம் செய்யவும் விடவில்லை

இருந்தாலும்… உன்னுடைய கணவருடைய ஆன்மா வேறு எங்கேயும் செல்லாதபடி உன் உடலைச் சுற்றிக் கொண்டே இருப்பதே நீ பார்க்கலாம் அம்மா…! என்று சொன்னேன்

அப்போது கணவனின் உணர்வலைகள் தனக்குள் இருந்து அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருந்ததோ அதை எல்லாம் அந்த அம்மா கண்களில் பார்க்கின்றது.

அந்த மகிழ்ச்சியான நிலையினை அந்தத் தாயும் மகனும் (டாக்டர்) காணுகின்றனர். பின் இன்றைக்குத்தான் இந்த உண்மைகளை நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது… உணர முடிந்தது…! என்று என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள்

என் தாயின் அருள் கிடைக்க வேண்டும்… என் குடும்பத்திலும் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட பின் டாக்டரும் வேண்டி நிற்கின்றார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் காலையில் நான்கு மணிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாவை உந்தி “விண்ணுக்குச் செலுத்துங்கள்…” என்று சொன்னேன்.

அந்த ஆன்மா இவர்கள் உடலுக்குள் செல்லவில்லை வெளியே தான் இருந்தது. உடலைச் சுற்றிக் கொண்டிருப்பதை அந்த உண்மைகளை அவர்கள் உணர்கின்றார்கள்.

யாம் சொன்ன முறைப்படி அவர்கள் செய்த பின் அவர் ஒளிச் சரீரம் பெறுகின்றார்.

ஏனென்றால் முன்னாடி அவர்கள் ஒரு பெரிய சாதுவைச் சந்தித்து இருக்கின்றார்கள். அவர் சில உபதேசங்களைக் கொடுத்திருக்கின்றார். இராமாயணம் மகாபாரதத்தை பற்றிச் சொல்லி இருக்கின்றார்.

ஆனால் சாங்கியங்கள் மட்டும் நீ செய்ய வேண்டாம்…! என்று ஒன்றை மட்டும் சொன்னார்… மற்ற விவரங்களை அவர் சொல்லவில்லை என்று அந்த அம்மா சொல்கிறது.

அவர் சொன்ன முறைப்படி என் கணவர் என்னுடன் தான் இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.
1.அவர் கட்டிய தாலி என்னுடன் இருந்தாலும்
2.அவருடன் ஒன்றி முழு மாங்கல்யக்காரியாகத்தான் நான் செல்ல வேண்டும் என்ற
3.அந்த எண்ணத்தில் தான் நான் வாழுகின்றேன்… என்று அந்த அம்மா சொன்னது.

ஏனென்றால் இந்த உண்மைகளை அறிந்தும் அறியாதபடி சில இடங்களில் சில நிலைகள் இருக்கின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்று லட்சம் பேரை நான் சந்தித்ததில் “எப்படி எல்லாம் இந்த உலகம் இயங்குகின்றது…?” என்பதைக் கண்டுணர முடிந்த்து.

ஆகவே… மனிதரான பின் இனி நமக்கு என்ன இருக்கின்றது…?

1.இந்த உடலுக்குப் பின் நான் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உறுதியை வைத்து விட்டால்
2.நாம் நிச்சயம் அந்த எல்லை அடைகின்றோம்…!

அதை அடைவதற்கு தான் இந்த உபதேசம்…!

Leave a Reply