எம்முடைய “ஒரு சொல்லை” ஆழமாகப் பதிவாக்கி அதன் வழி நடந்தாலே போதும்

எம்முடைய “ஒரு சொல்லை” ஆழமாகப் பதிவாக்கி அதன் வழி நடந்தாலே போதும்

 

இந்த வாழ்க்கையிலே நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனாலும் தவறு செய்தோர் நிறைய உண்டு. அவர்களைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் வந்தால் நம் நல்ல குணங்களை அது மறைத்து விடுகிறது.

அப்போது அவர்கள் விடும் சாபங்களோ ஏசிப் பேசும் உணர்வுகளோ அல்லது துன்பப்படும் உணர்வுகளோ வந்துவிடுகிறது.
1.அதை நுகர்ந்தால் நம்மையும் சாபமிடச் செய்யும்… ஏசிப் பேசும்படி செய்துவிடும்.
2.நம் குழந்தையாக இருந்தாலும் இரக்கமற்று அடிப்போம்.

ஒரு சிலர் வாழ்க்கையில் நன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்டு இப்படிச் செய்கிறான்… அப்படிச் செய்கிறான்… என்று பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டிருப்போம்.

இது எல்லாம் நம்மை அறியாமலே நடக்கும் நிலைகள்.

நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் உணர்வின் தன்மை மாறுபடப் போகும் போது பார்… இவன் பெரிதாக என்ன செய்து விட்டான்…? என்று பாவ வினைகளாகச் சேரும். அவர்களுக்கு இடையூறு செய்யும் தன்மையாக வேதனைப்படச் செய்து அதை இரசிக்கும் நிலையாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

உயிரின் வேலை என்ன…?

எதை நாம் எண்ணினாலும் உயிரிலே பட்ட பின் ஓ… என்று ஜீவனாகி ம்.. என்று உடலாக்கச் செய்யும்.
1.ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ..ம். ஆக உடலின் வேலை இதைத் தான் செய்யும்.
2.ஆனால் உயிரின் வேலை… நெருப்பிலே எந்தப் பொருளை இட்டாலும் அதன் மணத்தை அது வெளிப்படுத்திக் காட்டுவது போல்
3.உயிரான நெருப்பிலே நாம் சுவாசிப்பது பட்டவுடனே எண்ணம் சொல் செயல் என்று அதை இயக்கிக் காட்டும்.

எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதன் மணத்தின் தன்மை கொண்டு அதுவாகும். அதனின் இயக்கத்தின் தன்மை கொண்டு உணர்வாகும்.

ஒரு சிலர் செய்வதைப் பார்த்து உனக்குக் கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கின்றதா…? அறிவு இருக்கின்றதா…? அறியக் கூடிய திறன் இருக்கின்றதா…? என்றெல்லாம் நாம் வழக்கத்தில் பேசுவோம்.

ஒன்றைச் சொல்லப்படும் போது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… அப்போது… இப்படிச் சொல்லிவிட்டாயா…? இரு நான் பார்க்கின்றேன்… என்று இந்த உணர்வின் தன்மை எனக்குள் விளைகின்றது சொல்லின் தன்மை கேட்போருக்கும் உணர்ச்சியைத் தூண்டுகிறது.

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகள் எவ்வாறு வருகிறது…? என்று உணர்ந்து அந்தத் தீமைகள் நமக்குள் வராதபடி நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் சுமார் இருபது வருடம் காடு மேடு நகரம் எல்லாம் எம்மைச் (ஞானகுரு) சுற்றச் செய்து மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்து பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

அந்தக் குடும்பங்களை எல்லாம் சுட்டிக் காட்டி
1.தவறு செய்யாமலே தொல்லைகள் அவர்களுக்கு எப்படி வருகிறது…?
2.தவறு உள்ளவர்களாக எப்படி மாற்றுகின்றது…?
3.பாவ வினையாக எப்படி இயங்குகிறது…?
4.சாப வினைகளாக எப்படி வருகிறது…?
5.தீயவினைகளாக எப்படி உருவாக்குகிறது…? என்பதைக் காட்டி
6.அதிலிருந்து அவர்களை மீட்க எப்படிச் செய்யப் போகிறாய்…?
7.இது குருநாதர் எம்மிடம் கேட்ட கேள்வி.

அந்த அருள் ஞானி காட்டிய உண்மையின் இயக்கங்கள் அது எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையில் உபதேசத்தைக் கொடுத்து என்னை அறியும் ஆற்றலாகச் செயல்படுத்தினார் குருநாதர்.

அவர் கொடுத்த அருள் ஞானத்தைத் தான் உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு வருகின்றோம்.
1.உங்களை அறியாது வரும் தீமைகளை உங்களாலேயே அகற்ற முடியும்
2.அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொள்ளும் போது உயிரால் இயக்கப்பட்டு அதை ஜீவனாக்க முடியும்
3.அந்த உணர்வின் சக்தியாக… உங்கள் உடலாக ஆக்க முடியும்.

குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்கும் செயல்படுத்துகிறேன். காரணம் குருநாதரை உங்களிடம் பார்க்க விரும்புகின்றேன்.

தீமைகள் தன்னை அறியாமலே சாடுகின்றன. அதிலிருந்து ஒவ்வொருவரும் அகல வேண்டும் என்று நீ அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சு..!

1.எனக்குள் விளைய வைத்த வித்துக்களை உனக்குள்ளும் விளையச் செய்கின்றேன்.
2.அதை நீ விளைய வைத்து அந்த உணர்வை யார் யார் உற்று நோக்குகின்றார்களோ அவர்களுக்குள் பதியச் செய்.
3.அங்கே விளைந்த நிலைகள் அது வெளி வரும் போது என்னை அங்கே காண்.
4.அவர்கள் மகிழ்ச்சி பெறும் போது அங்கே என்னைப் பார்…! என்றார் குருநாதர்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… யாம் உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குத் தக்க சமயத்தில் வழி காட்டும்.

எத்தகைய சந்தர்ப்பத்திலும் ஞானத்தின் தொடர் கொண்டு உங்களை அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்று “குருவின் ஆணைப்படி…” இதைச் செயல்படுத்துகின்றோம்.

உங்களுக்குள் துன்பங்கள் வந்தாலும் அதை மாற்றி அமைக்கும் ஆற்றலாகவும் அருள் உணர்வை வளர்க்கும் தன்மையாகவும் வரும்.

ஒரு சிலர் நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் எங்களுக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை நீங்கள் சொல்வது எல்லாம் அர்த்தமாகவில்லை என்று எண்ணுவார்கள். அப்படி எண்ணினால் அது அர்த்தமாகாது.

1.எப்படியும் ஞானகுரு சொன்ன வழியில் நடக்க வேண்டும் என்று
2.அந்த ஒரு சொல்லை எண்ணினால் அது நிச்சயம் உண்மையை விளக்கிக் காட்டும்.

Leave a Reply