குருநாதர் எமக்கு இட்ட பணி

குருநாதர் எமக்கு இட்ட பணி

 

மகரிஷிகள் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி ஒளியான வித்த்துக்களாக விளைய வைத்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி இன்றும் அழியாத நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.

நம் பூமியில் உயிரினம் தோன்றிய நிலைகளிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனித வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி ஒளி காணும் நிலைகள் பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகள் இன்றும் இந்தப் பூமியில் படர்ந்துள்ளது. அதை எவ்வாறெல்லாம் பருக வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) உணர்த்தினார்.

அந்த அருள் ஞான வித்தை வளர்ப்பதற்கு
1.எங்கெங்கெல்லாம் அந்த அருள் ஞான சக்தி தொடர்ந்துள்ளதோ
2.அங்கெல்லாம் கால்நடையாகவும் மற்ற வழிகளிலும் நடக்கச் செய்து
3.ஆங்காங்கு பூமியிலே அந்த ஞானிகள் உணர்வு பதிந்து இருப்பதையும்
4.அவர்கள் உடலில் விளைந்த சக்திகள் படர்ந்திருப்பதையும் நுகரும்படி செய்தார்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் இந்த உலகம் அனைத்தும் எம்மை அழைத்துச் சென்று அவர் உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்த மெய் ஞானிகள் உணர்வின் ஆற்றலைப் பருகும் முறையைக் காட்டினார்.

அந்த மகரிஷிகளின் உடலில் விளைந்த உணர்வலைகள் பூமியில் பதிந்து இருந்தாலும்
1.அந்த அலைகள் அங்கே படர்ந்திருப்பதை நீ நுகரு
2.அந்த ஆனந்த சக்தியான வித்தை உனக்குள் வளர்த்துக் கொள்…! என்றார்.

குரு காட்டிய நிலைகள் கொண்டு அதனை இந்தப் பூமி முழுவதும் சுழன்று வந்து அந்த அருள் ஞான வித்துக்களை வளர்த்துக் கொண்டேன்.

விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்தில் வெளிப்படுத்திய அந்த அருள் ஞான வித்துக்களைத் தான் குருநாதர் காட்டிய வழிப்படி உங்கள் உள்ளங்களில் இப்போது ஆழமாகப் பதிவு செய்கிறோம்.

1.பதித்த அந்த உணர்வின் சத்தை… குரு வழியில் திரு அருளாக நீங்கள் பெற வேண்டும்
2.அருள் ஞானிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.அருள் ஞானப் பசியை உங்களுக்குள் அது ஆற்றிட வேண்டும்
3.பேரானந்தப் பெருநிலை நீங்கள் பெற்றிட வேண்டும் என்பதற்கே மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

ஒவ்வொரு நிமிடத்திலும் ஞானிகள் அருள் சக்திகளை எடுத்து ஒளியான அணுக்களை உடலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply