மகரிஷிகளுடன் நாம் என்றுமே இணைந்த நிலையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்

மகரிஷிகளுடன் நாம் என்றுமே இணைந்த நிலையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்

 

பால் எவ்வளவு சுவையாக இருந்தாலும் அதிலே காரம் விழுந்து விட்டால் அதனின் சுவையை அது எப்படி மாற்றுகின்றதோ அதைப் போல் தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் பண்புள்ளவர்களாக இருந்தாலும் பிறருடைய தீமையின் நிலைகளை நுகரப்படும் போது இயக்கங்கள் மாறி அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகிறது…

காரணம்…
1.மனிதர்களான நாம் எவரும் எவரிடமிருந்து பிரிந்து இல்லை.
2.அனைவருடன் சேர்ந்து தான் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒருவரின் தீமையான செயல்களைப் பார்த்தாலும் கேட்டுணர்ந்தாலும் அவருக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்று. எண்ணலாம்.

ஆனால் அவருக்குள் விளைய வைத்த தீமையின் தன்மை கொண்டு “தீயவன்…” என்று அவரை எண்ணினாலும் அதனுடைய தொடர்பு கொண்டு அந்தத் தீய உணர்வுகள் நமக்குள் விளைந்து
1.அவனை எண்ணும் போதெல்லாம் நம்மைத் தீய வழிகளுக்கு இட்டுச் செல்லும்
2.தீய சொல்களைச் சொல்ல வைத்துவிடும்
3.தீயதையே நமக்குள் விளையச் செய்து தீயவனாக நம்மையும் மாற்றும் நிலை வந்து விடுகிறது.

ஆகவே எதிலேயும் நாம் தொடர்பு கொண்டவர்கள் தான். யாரிடமிருந்தும் பிரிந்து சென்றவர்கள் இல்லை.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி… மனிதனாகப் படைத்த நம் உயிரை நாம் மதித்து நடக்க வேண்டும்.

விநாயகர் தத்துவத்தை உணர்த்திச் சென்ற அகஸ்தியனின் வழிப்படி ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்க்கையில் எந்தக் குறைகள் வந்தாலும் அதை நிவர்த்திக்க வேண்டும்.

நாம் செய்யும் தொழில் நஷ்டமானாலும் வீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து தியானமிருந்து மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

பின்… எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்வில் நலம் பெற வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்து அந்த அருள் உணர்வுகளை வளர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகள் பெருகும். வியாபாரம் சீராகும். நமக்குள் வரும் துயரங்களையும் நோய்களையும் மாற்ற முடியும். நம் சொல்லின் நிலைகள் பிறரின் இருளைப் போக்கிடும் சக்தியாக வரும். மெய் உணர்வின் தன்மையை நாம் பெற முடியும்.

அத்தகைய நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறேன்.

1.நான் (ஞானகுரு) படிப்பறிவில்லாதவன் தான்.
2.மூடனாக இருந்த என்னைக் குருநாதர் பக்குவப்படுத்தி அறியும் ஆற்றலைக் கொடுத்தார்
3.அவர் கொடுத்ததை எல்லாம் இப்போது உங்களுக்கு உப்தேசமாகவும் கொடுக்க முடிகிறது.
4.அந்த மேய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து சொல்லாகவும் செயல்படுத்த முடிகிறது.
5.என் வாக்கினைக் கேட்போர் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கவும் முடிகிறது.

அவர்கள் இருள்கள் எப்படிப் போகிறதோ அதைப் போல் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்து அதைப் பின்பற்றுவோர் நீங்களும் வளர முடியும். உங்கள் சொல்லினைக் கேட்போருக்கும் அது இருளைப் போக்கும் சக்தியாக வளரும்.

இன்றைய உலகில் நாம் அறியாதபடியே
1.இருள் சூழும் தன்மைகள் உருவாகி நஞ்சுகள் பரவி நல்லவனையும் தீயவனாக ஆக்கி
2.ஒன்றும் அறியாத பாமர மக்களையும் அழித்திடும் உணர்வுகளாக வெளிப்பட்டு
3.உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எத்தனையோ வெறித் தன்மையான நிலைகளும் செயல்பட்டு
4.உலகிலே படர்ந்து கொண்டிருக்கும் அத்தகைய தீய விளைவுகளை
5.நீங்கள் விடும் மூச்சலைகள் இதை மாற்றி அனைவரையும் நல்வழிப்படுத்தும் சக்தியாகப் படரும்.

உலகைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

Leave a Reply