திரும்பத் திரும்ப ஒன்றையே பேசிக் கொண்டிருந்தால் நம் ஆன்மாவிலே என்ன நடக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

திரும்பத் திரும்ப ஒன்றையே பேசிக் கொண்டிருந்தால் நம் ஆன்மாவிலே என்ன நடக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

ஒருவர் நம்மைத் திட்டிவிட்டால் என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்றெல்லாம் சொல்கிறோம்.

இந்த உணர்வின் தன்மை திரும்பத் திரும்ப ஜெபிக்கப்படும் பொழுது
1.சூரியனுடைய காந்தப் புலன்கள் சும்மா இருப்பதில்லை
2.நாம் பேசுவதை எல்லாம் எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

என்னைப் பேசினார்கள்… பேசினார்கள்… என்றே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் யார் திட்டினாரோ அவர்கள் காதிலும் இது விழுந்தால் நம்முடன் சண்டைக்கு வருவார்கள்.

கேட்கவில்லை என்றாலும்… இந்த உணர்வின் சத்து காந்த அலைகளை இழுத்து நமக்குள் அதை விளைய வைத்துக் கொண்டிருக்கும்.
1.அந்த உணர்வினை எண்ண… எண்ண… எண்ண…
2.விளைய வைத்ததை உடல் இழுத்து வைத்துக் கொண்டே இருக்கும்.
3.நமக்குப் பின்னாடியும் முன்னாடியும் (ஆன்மாவிலே) அது தான் நிற்கும்.

அதனின் இயக்கமாக என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… அவன் மோசமானவன்… என்று சொல்லி நாம் பாட்டுக்குப் பேசினாலும் “வேறு என்னென்னமோ… நம்மிடமிருந்து கிளம்பும்…”

பேச்சின் தொடர்கள் அனைத்தும் வெறுப்பை ஊட்டும் உணர்வாகவே வரும். அப்படிப் வெறுப்பாகப் பேசுவது அனைத்தையும் இந்தக் காந்த அலைகள் கவர்ந்து கொண்டு நாம் பேசப் பேசப் பேச நம் உடலின் முன் பக்கமாகவே நிறுத்திவிடும்.
1.முன்னாடி நின்றவுடன் மீண்டும் அந்த நினைவுகள் வரும் பொழுது
2.எங்கே பார்த்தாலும் இந்த நினைவுதான் வரும்.
3.ஏதாவது ஒரு நல்ல பொருளைச் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் அது சீராக நடக்காது.

வெறுப்பான நிலையில் நாம் வேலை செய்யும் போது பார்க்கலாம். எந்தக் குணத்தின் அடிப்படையில் வெறுப்பாக இருக்கின்றீர்களோ நீங்கள் எரிச்சலாக இருந்தால் குழம்பு வைக்கும்போது மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.

என்னை இப்படியே பேசிக் கொண்டிருந்தான் என்ற வேதனை அதிகமாகி விட்டால் உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். உங்களை அறியாமலே உப்பை அதிகமாகக் கையில் அள்ளிப் போட வைக்கும்.

வேண்டும் என்றால் சங்கடமாக இருக்கும் போது பார்க்கலாம். குழம்பு வைக்கும்போது உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். குழ்ம்பிலே உப்பு அதிகமாக இருக்கிறது…! என்று வீட்டில் சண்டை வரும்.

கோபமாக இருந்தீர்கள் என்றால் குறைந்தது இரண்டு மிளகாயாவது சேர்த்து அதிகமாகப் போட்டு விடுவீர்கள்… அப்புறம் எரிச்சலாகும். சலிப்பு சங்கடம் அதிகமாயிருந்தால் சீரகம் அதிகமாகிவிடும். சீரக வாசனை அதிகமாகி விட்டால் உமட்டலாகும்.

அந்தந்தக் குணத்திற்குத் தக்கவாறு தான் குழம்பு வைக்கச் சொல்லும்.
1,சலிப்பான எண்ணத்துடன் அதிகமாகப் பேசியிருந்தால் புளிக்குழம்பைத் தான் வைக்க வேண்டும் என்று சாதிப்போம்.
2.புளியை அதிகமாகக் கரைத்து விட்டு விடுவோம்… உப்பைக் குறைத்து விடுவோம்.
3.குழம்பிலே புளிப்பு அதிகமாகிவிடும்.

அனுபவத்தில் நீங்கள் இதை எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

அதே மாதிரி இட்லிக்காக மாவை அரைத்து உப்பைப் போட்டுக் கரைத்து வைத்தால் மறு நாள் காலையில் இட்லியைச் சுட்டால் அதிகமாகப் புளித்துவிடும். இட்லி கல் மாதிரி ஆகிவிடும்.

ஐய்யய்யோ… நான் நன்றாகத் தானே செய்தேன்…! என்று சொல்லலாம். ஆனால் அந்தக் குணத்திற்குத் தக்கவாறு உணர்வின் தன்மை இயக்கிவிடும். மனிதனுடைய ஆற்றல் அந்த அளவிற்கு இருக்கின்றது.

வாழ்க்கையிலே ஒவ்வொன்றும் இவ்வாறு நம்மை இயக்குகிறது. திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப… பிறரின் குறைகளைப் பேசும்போது இத்தகைய உணர்வெல்லாம் வந்துவிடுகிறது.

இதை எல்லாம் அகற்றுவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடனுக்குடன் எடுத்து உடலுக்குள் சேர்த்து தீமைகள் உருவாகாதபடி மாற்றி அமைக்க வேண்டும் என்று அடிக்கடி யாம் (ஞானகுரு) சொல்கிறோம்.

Leave a Reply