குருக்ஷேத்திரப் போர்

குருக்ஷேத்திரப் போர்

 

இந்த மனித வாழ்க்கையில் நம்மை இருள் சூழச் செய்யும் பிற உணர்வுகளைத் தாழ் பணியச் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும்.

1.மெய் உணர்வின் தன்மை பெற நம் நினைவை மேலே செலுத்தினால் “இமயமலை…”
2.உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய தகுதி பெற்றது நம் உயிர்.

ஆனால் கீழே நினைவுபடுத்தும் போது அந்தச் செயலின் இயக்கத்தில் வாழ்க்கையை ஓட்டலாம். ஆக வாழ்க்கைக்கு நம் உடலின் உணர்வு கொண்டு செயல்பட்டாலும்
1.இடர்கள் வந்து நம்மை ஆட்டிப் படைக்கும் சந்தர்ப்பம் எல்லாம்
2.ஈஸ்வரா… என்று நமக்குள் உச்சியிலிருக்கும் உயிரை நினைவு கொண்டு
3.அவனின் துணை கொண்டு நினைவை அங்கே செலுத்த வேண்டும்.

இது தான் கீதையின் தத்துவம் குருக்ஷேத்திரப் போர்.

வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள் மகாபாரதப் போராகப் பலருடைய எண்ணங்கள் நம்மிலே மோதுகிறது. அப்போது நம் நல்ல சிந்தனைகள் செயல்படாத நிலையில் நாம் சுவாசித்த உணர்வுகள் பதட்டமாகிறது.

அத்தகைய பதட்டம் ஏற்பட்டால் ஒன்றை அழிக்கக்கூடிய எண்ணம் உருவாகி நல்ல பொருள்களை அழிக்கும் நிலைகள் வருகின்றது.

ஆனால் ஞானிகளோ தீமை செய்யும் உணர்வைத்தான் அழிக்கச் சொன்னார்கள்.
1.நம்மை அறியாமல் வரும் தவறு செய்யும் உணர்வுகளை
2.அதைச் சுவாசிக்கும் நிலையை நாம் மாற்ற வேண்டும்.

பிறர் செய்யும் தவறான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்து நம்மை அறியாது இழி நிலையான செயல்களைச் செயல்படுத்த வைக்கும் அந்த உணர்வின் தன்மையை மாற்ற ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்.

கண்ணின் புலனறிவு கொண்டு நம் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வின் துணை கொண்டு அந்த உணர்வை நாம் எடுக்கும் பொழுது இது குருக்ஷேத்திரப் போர்.

புற நிலையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது பிறருடைய எண்ணங்கள் நம்மை வெறுப்போ பயமோ ஆத்திரமோ மற்ற நிலைகள் அதனுடைய செயலுக்கு ஆளாக்கிவிடுகிறது.

அக்கணமே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி இங்கே போர் நடத்த வேண்டும்.

நாம் எவ்வளவு பெரிய வல்லமை கொண்டவராக இருந்தாலும் ஒரு விஷத்தின் ஆற்றல் நம்மை ஆட்டிப் படைத்துவிடும்.

ஒரு சிறு எறும்பு கடித்து விட்டால் உடனே நாம் கை கால்களை உதறுகின்றோம். அதே போன்று அந்தக் கடுகடுப்பான விஷத்தின் ஆற்றல் நம் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் போது உடல் முழுவதும் பதட்டம் ஆகிறது. நல்ல சொல்களைச் சொல்ல முடியாதபடி செயலிழக்கக் கூடிய நிலையும் வந்து விடுகின்றது.

இதைத் தடுப்பதற்கு எந்த நிமிடம் ஆனாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்
2.மெய் ஞானிகளின் அருள் வழி நாங்கள் நடக்க வேண்டும்
3.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று
5.எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்போதெல்லாம் இத்தகைய குருக்ஷேத்திரப் போராக மாற்றுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் ஆற்றலை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம்.

Leave a Reply