ஞானிகளின் உணர்வை ஏன் பற்ற வேண்டும்…? மற்றவைகளைப் பற்றற்றதாக ஏன் மாற்ற வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஞானிகளின் உணர்வை ஏன் பற்ற வேண்டும்…? மற்றவைகளைப் பற்றற்றதாக ஏன் மாற்ற வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

 

ஒரு தெருவில் வளர்ந்த நாய் அடுத்த தெருப் பக்கம் வரும்போது அந்தத் தெருவில் இருக்கக்கூடிய நாய்கள் இதை விடுவதில்லை. பார்த்தோமென்றால் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

காடுகளிலே வாழும் புலிகளை எடுத்துக் கொண்டாலும் ஒரு பக்கம் உருவான புலிகள் அடுத்த பக்கம் வாழும் புலிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றால் அங்கிருக்கும் புலிகள் எல்லாம் சேர்ந்து அதைக் கொல்லப் பார்க்கும்.

கூட்டமாக வாழும் மான் இனங்களும் ஒரு பகுதியில் உள்ளது அனைத்தும் இணைந்து வாழ்ந்தாலும் இன்னொரு பகுதிக்கு அவைகள் சென்றால் அங்கிருக்கும் மான்கள் எல்லாம் சேர்ந்து இதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால்…
1.இங்கே வந்து விட்டால் தனக்குக் கிடைக்கும் உணவு பங்கு போய்விடுமே…! என்று தான்
2.இந்தப் போர் நிலை வருகின்றது… இயற்கையிலிருந்தே இந்த நிலை தான் வருகிறது.

இதைப் போன்றே மனிதனும் மாறுபட்டு வந்தான் என்ற நிலைகள் வரும் பொழுது அன்று வாழ்ந்த காட்டுவாசிகளும் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

அதற்குப் பின் நாட்டுக்கு நாடு ஆளும் அரசர்கள் என்று வந்தாலும் அடுத்த நாட்டுக்காரன் இங்கே வந்தால் நம்மை அடிமைப்படுத்தி விடுவான் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலையும் அதன் வழியில் மற்றவரை அடிமைப்படுத்தும் தன்மை வந்தது.

இது வளர்ந்து வளர்ந்து உலகமெங்கும் இந்த உணர்வுகள் பரவி…
1.தன் இனத்தைத் தவிர மற்றது வந்தாலே
2.எதிர்த்துத் தாக்கும் நிலையே உள்ளது.

ஒருவன் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தவறு செய்பவன் வெளிப்படுத்தும் உணர்வை ஒரு நல்ல மனிதன் நுகர்ந்தான் என்றால் அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வருகிறது.

நல்ல மனிதன் அதை நுகரும்பொழுது “அவன் தவறு செய்கிறான்…” என்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது. தவறு செய்கிறான் என்று சுட்டிக் காட்டிச் சொன்னால் தவறு செய்தவனுக்கு நம்மைப் பற்றி இவன் தவறாகச் சொல்கிறான் என்ற பழி உணர்ச்சி வருகின்றது.

1.தவறு செய்கிறான் என்று சொன்னால்
2.என்னைப் பற்றித் தவறாகப் பேசுகிறார் என்று அவனை எதிரியாகப் பார்க்கின்றான்.
3.அவனுக்கு எப்படியும் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.

இப்படித்தான் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளை மற்றவர்கள் நுகர்ந்தால் அந்த நுகரந்த உணர்வு அவர்களை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

நண்பர்களாகப் பழகுகின்றோம்… அன்பாகப் பழகுகிறோம் என்றும் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் பழகிய அந்த நண்பன் இன்னொரு பக்கம் தவறு செய்கிறான்.. பெரிய குற்றங்களை அவன் செய்து விட்டான்.

சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இப்படிச் செய்கிறாய்…? என்று கேட்கின்றார்கள். நண்பன் என்ற பற்று இருக்கும் போது
1.பாசத்தால் அவன் தவறை மறந்து
2.தவறு செய்ததை மற்றவர் கேட்கப்படும் பொழுது அவர்களைத் தாக்க ஆரம்பிக்கின்றோம்.

இது தான் இன்று இருக்கக்கூடிய உணர்வுகளின் இயக்கங்கள்.

காரணம்… பற்று எதன் மீது இருக்கின்றதா அவன் உணர்வும் இங்கே வந்து விடுகின்றது. அந்த உணர்வின் வழிப்படியே இவருடைய செயலும் மாறுகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை நாம் உணர முடியும்… பகைமை இல்லாது துன்பம் இல்லாது உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

Leave a Reply