தியானத்தின் மூலம் பலனைப் பெற்றால் தான் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் உணர முடியும்

தியானத்தின் மூலம் பலனைப் பெற்றால் தான் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் உணர முடியும்

 

கேள்வி:
ஈஸ்வரபட்டர் உங்களுக்கு எல்லாச் சக்திகளும் கொடுத்தார்… நீங்கள் அதை எல்லாம் பெற்றீர்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கொடுக்கவில்லையே… உபதேசமாகத் தான் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்…!

யாருக்காவது நீங்கள் கொடுத்து அதைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நாங்களும் ஆர்வமாகச் செய்வோம். இது எங்களுக்குச் சந்தேகமாகவும் ஒரு யோசனையாகவும் இருக்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சாமி.

ஞானகுருவின் பதில்:
நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். “நன்றாகத்தான் இருக்கின்றது…” என்று நான் சொல்லிவிட்டால் மட்டும் போறுமா…?

நல்ல சுவையான சாப்பாடை நான் சாப்பிட்டால்தான் எனக்கு நல்லது. ஆகையினால் போடும் சாப்பாட்டைச் சரியான முறையில் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் அந்த ருசியின் தன்மை தெரியும்

1.இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருந்தது” என்று சொல்கிறார்.
2.எப்படி இருந்தது…? என்று கேட்கும் போது நன்றாக இருந்தது… நன்றாக இருந்தது… என்றே சொன்னால்
3.அது எப்படி நன்றாக இருந்தது…? என்று திரும்பவும் கேட்டால் சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்…!

உதாரணமாக… உடலில் ஒரு இடத்தில் புண்ணாகி விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது நம்மை வேதனைப்படுத்தினாலும் மருந்தைப் போட்டு குணப்படுத்த விரும்புகின்றோம்.

ஆனால் அப்போதும் சிறிது வேதனை இருக்கிறது. ஆற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தால் புண்ணுக்கு அந்த மருந்தை போட்டுக் கொள்கிறோம்.

ஆனால் மருந்தைப் போட்டுக் கடுகடுப்பாகி விட்டால் என்ன…! இப்படி ஆகி விட்டதே…? என்று மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமா…?

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிலையில் நமக்குள் எத்தனையோ விதமான வேதனைகளைத் தோற்றுவிக்கும்.
1.எத்தனை விதமான வேதனைகளைத் தோற்றுவித்தாலும்
2.அதை மாற்றியமைத்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் அடிக்கடி நுகர்தல் வேண்டும்.

அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது

1.இப்பொழுது என்ன தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுத்தாலும்
2.நீங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில்தான் அது இருக்கின்றது.

உங்களுக்குத் தெரியாமலே எவ்வளவோ மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு அது தெரியாது.

ஆனால் அது எப்படி இருக்கிறது…? என்று உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? “ஜீபூம்பா…” வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

அப்படி நடந்ததுதான் முந்திய கால நிலைகள்.
1.எனக்கே சக்தி இருக்கின்றது…
2.சாமி தயவு என்ன வேண்டிக்கிடக்கிறது…? என்று
3.பிய்த்துக் கொண்டு போனவர்கள் தான் பெரும்பகுதியான நிலைகள்.

குருநாதர் மூலம் பெற்ற அரும் பெரும் சக்திகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த அற்புதமான நிலைகளைத் தெரிந்து கொண்டால் “உலகத்திற்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…” என்றும் நினைத்தேன்.

கடைசியில் எல்லோருக்கும் அது ஆசையைத் தூண்டி விடும் நிலையில் தான் முடிந்துவிட்டது. ஆக மொத்தம்
1.ஒருவருக்கு புரியக் கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அடுத்தவர்கள் புரிந்து விடக் கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
3.எல்லாம் தெரிந்த பின் அவர்கள் குருவாகவே மாறிவிட்டார்கள்.

நான் கொடுப்பதை விட நீங்கள் எந்த அளவுக்கு அந்தச் சக்திகளை எடுக்கின்றீர்களோ… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிக்கின்றீர்களோ… அதை மற்றவர்களுக்கு அப்படியே பெறச் செய்கிறீர்களோ… அதிலே நீங்கள் இந்தச் சக்திகளைக் காண முடியும்.

Leave a Reply