துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற நாம் தியானிக்க வேண்டிய சரியான முறை

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற நாம் தியானிக்க வேண்டிய சரியான முறை

 

ஆதியிலே அகஸ்தியன் நம் பூமியின் துருவத்தை நுகர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி பெற்றவன். அதன் உணர்வே அவனுக்குள் ஒளியாக மாறும் நிலை பெறுகின்றது.

குருநாதர் அகஸ்தியனைப் பற்றி எனக்கு (ஞானகுரு) படிப்படியாக என்னென்ன சொன்னாரோ… அதே வழியில் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றேன். தியானிக்கும் போது அந்தச் சக்திகளை நீங்கள் பெற ஏதுவாகும்.

1.வானுலக ஆற்றலை துருவத்தின் வழியாக நம் பூமி பெறுவதை அகஸ்தியன் இடைமறித்து அந்த உணர்வின் தன்மை நுகர்கின்றான்
2.துருவ மகரிஷி தனக்குள் நுகர்ந்து உருவாக்கிய அந்த உணர்வுகளைப் பெற வேண்டும்…
3.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி
4.பூமியின் துருவப் பகுதியின் வழியாக நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நம் பூமி சுழல்வது தெரியும். பிரபஞ்சத்தில் உருவாகும் சக்திகள் நம் பூமி செல்லும் பாதையில் அது அணுக்களாக இருப்பதையும்… நம் பூமி அதை எவ்வாறு ஈர்க்கிறது…? என்பதும் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

இந்த உணர்வின் தன்மைகளை எல்லாம்
1.கண்கள் வழி கொண்டு… நினைவின் ஆற்றலை உயிருடன் ஒன்றி
2.அந்த அகக்கண் ஒளி கொண்டு உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

புறக்கண்களால் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். இருந்தாலும் அருள் ஞானியின் உணர்வுகளை குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். பதியச் செய்வதை நீங்கள் உங்கள் உயிருடன் ஒன்றி அகக்கண்ணுடன் இணைத்து ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

1.பூமி துருவப் பகுதியின் வழி கவரும் இடத்தில் நினைவைச் செலுத்தும் போது
2.அந்த எல்லையிலிருந்து அடுத்து… வானுலகப் பகுதியிலிருந்து பூமி கவரும் சத்து எப்படிப் பூமிக்குள் வருகிறது…? என்ற நிலையும் காட்சியாக வரும்.

பூமி சுழலும் பாதையில்… மற்ற நட்சத்திரங்களும் கோள்களும் உமிழ்த்தும் அந்த உணர்வலைகள் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவி வருவதையும்… அது மின்னிக் கொண்டு பல கலர்களாக மாறுவதையும்… நம் பூமியின் துருவ ஈர்ப்புக்குள் அது வருவதையும் உங்களால் நுகர முடியும்.

1.நுகரும் போது புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலிலே பரவும்
2.சில நொடிகளில் நெடி கலந்த நிலைகளும் சில நொடிகளில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்
3.நறுமணம் கொண்ட நிலைகளும் உங்களுக்குள் வந்து கொண்டே இருக்கும்.

உணர்வுகள் உயிருடன் ஒன்றி உள் செல்லும் போது… உடலில் உள்ள குணங்கள் ஒவ்வொன்றிலும் மோதி… உடலுக்குள் பல அதிசயங்களும்… பல பல மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்… ஆனந்த ஒளியும் உடலுக்குள் வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்… மாறிக் கொண்டே இருக்கும்.

சாதாரண எண்ணையில் ஒரு திரியைப் போட்டு எரிக்கும் போது அதிலே எரிச்சல் கலந்த நிலை வருகிறது. ஒரு பெட்ரமாக்ஸ் லைட்டை எரிக்கும் போது… அது எண்ணையின் சத்தினை மாற்றிவிட்டு ஆவியின் தன்மை கொண்டு ஒளியாக மாற்றுகின்றது.

அதைப் போல் இந்நேரம் வரை உபதேசித்த உணர்வுகள்…
1.அந்தத் துருவ மகரிஷி உணர்வுகளுடன் உங்கள் உணர்வுகள் படப்பட்டு
2.எண்ணையின் வாசனையை மாற்றிவிட்டு குளிர்ந்த ஒளியாகக் காணுவது போல்
3.மகிழ்ச்சி பெறும் ஒளியின் சுடராக உங்கள் உடலுக்குள் பரவும்.

ஒவ்வொரு அணுக்களிலும் இது மோதி… அந்த ஞானியின் உணர்வுகள் ஒவ்வொன்றும் உடலுக்குள் “பளீர்… பளீர்…” என்று மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக மாற்றிக் கொண்டே வரும்.

வெல்டிங் வைக்கும் போது பளீர்…பளீர்… என்று மின் ஒளிகள் வருகின்றது. அதே சமயத்தில் அதைக் கண்களால் பார்க்கும்போது அதிலே ஒரு எரிச்சல் கலந்ததாகவும் இருக்கும்.

1.ஆனால் பெட்ரமாக்ஸ் லைட்டை எரிக்கப்படும் போது அது கண்ணுக்கு எப்படிக் குளிர்ந்ததாகப் புலப்படுகின்றதோ
2.அதைப் போன்று உங்கள் உடலுக்குள் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் கலந்து
3.மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக உங்கள் உடலில் ஒளித் தன்மை பெறுவதைக் காணலாம்… உணரலாம்.

புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி உயிருடன் ஒன்றி… கண்ணின் நினைவைத் துருவ மகரிஷியின் பால் செலுத்தி… அவரின் ஆற்றல்கள் அனைத்தும் எங்கள் உடலில் பரவ வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்துங்கள்.

அப்படிச் செலுத்தும் போது…
1.ஒரு ஒளி விளக்கைக் காட்டினால் அதன் மூலம் பொருள்களைக் காண்பது போன்று
2.உங்கள் உடலுக்குள் அந்த வெளிச்சங்கள் ஊடுருவுவதையும்
3.அந்த உணர்வலைகள் மோதும் போது மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்களிலே தோன்றுவதும்
4.ஒளி கண்டபின் இருள் மறைவது போன்று உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இது இணையும்…
5.உட்பொருள் தெளிவாகும்…. ஆற்றல்மிக்க சக்தியாக வளரும்.

துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் உயிருடன் மோதும் போது
1.மெர்க்குரி போன்று புருவ மத்தியில் வெளிச்சம் வரும்
2.இளம் நீலமாகப் புருவ மத்தியில் ஒளி அலைகள் வரும்.

இந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நினைவைச் செலுத்தும் போது உங்கள் உடலில் மகிழ்ச்சி பெறும் உணர்ச்சிகள் வரும்.

இதற்கு முன் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் அனைத்தும் நீங்க இது உதவும். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் கலந்து மன பலம்… மன நலம்… பெறுவீர்கள்.

Leave a Reply