இரவு உறக்கத்தின் போது வரும் கனவுகள் பற்றிய உண்மை நிலைகள் – ஈஸ்வரபட்டர்

இரவு உறக்கத்தின் போது வரும் கனவுகள் பற்றிய உண்மை நிலைகள் – ஈஸ்வரபட்டர்

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்த நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் அந்த உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இப்படிக் காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் காணும் வண்ணம் “நம் சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகையை எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்த நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அதே போல் தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது.
1.இது எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று நாம் புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருக்க வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply