வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது

வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது

 

வேண்டாதவரைப் பார்க்கும் பொழுது எதிரி என்ற நிலையில் அவர் செய்வது தப்பு என்று நினைக்கின்றோம்… அடுத்தவரிடத்திலும் அதைத் தான் சொல்வோம்.

அவன் நல்லதையே செய்தாலும் கூட…
1.அவனை எந்தக் குறிக்கோளுடன் நாம் முதலில் பதிவு செய்திருக்கின்றோமோ
2.பார்த்தவுடனே ஊரை “ஏமாற்றுவதற்கு என்னவோ… அதைச் செய்கின்றான்…” என்று சொல்கிறோம்.

அவன் நல்லதைச் செய்வான். அவன் செய்வதை நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. அவனைப் பற்றிய தவறான உணர்வுகளையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அதே சமயம் நமக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தப்பு செய்து விட்டால்… அது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது… “அவர் தப்பே செய்ய மாட்டார்…!” என்று தான் நாம் சொல்கிறோம்.

1.இங்கே பாசத்தால் தவறை மறைக்கின்றோம்… தப்பை வளர்க்கின்றோம்
2.அங்கே வெறுப்பால் நியாயத்தையே மறைக்கின்றோம்… ஆனால் தவறை வளர்க்கின்றோம்

இதைப் போன்று நம்மை அறியாது வரக்கூடிய உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வந்து நமக்குள் இயக்குவதைத் தான் கூனி என்றும் சகுனி என்றும் காவியங்களில் காட்டுகிறார்கள்.

ஒருவர் மீது பற்று இல்லை என்றால் அந்த வெறுப்பின் தன்மை வரும் பொழுது கூனி… பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அது இணைத்து விடுகின்றது.

இவ்வாறு நமக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட…
1.என்ன பெரிதாகச் செய்து விட்டார்…!
2.ஏமாற்றுவதற்குத் தான் இதைச் செய்கிறார்..! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றோம்

இராமாயணத்தில் கூனி என்ன செய்கிறது…?

இராமன் உயர்ந்தவனாக இருந்தாலும் அது பிடிக்காதபடி அவனைப் பகைமையாக ஊட்டுவதற்கு சிற்றன்னையான கைகேயியிடம் அதை உருவாக்குகின்றது.

தசரதன் உன்னுடைய கணவன் தானே… அவனுக்குப் பிறந்த மகன் தானே பரதனும்…! அவனுக்கு ஏன் அந்த அரசில் உரிமை கிடையாது…? என்ற உணர்வை ஊட்டுகிறது.

இராமன் இருந்தால்தான் சாம்ராஜ்யத்தை ஆள முடியும். இங்கிருந்து அவனை அனுப்பி விட்டால் “பரதன் எளிதாக ஆட்சிக்கு வரலாம்…” என்று இந்த ஆசையின் உணர்வுகளைத் தூண்டுகிறது கூனி.

இராமனைப் பிடிக்கவில்லை… அதனால் பகைமையை ஊட்டி அவ்வாறு செயல்படுகிறது. ஏனென்றால்
1.நமக்குள் எதிரியான உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உடலுக்குள் அணுக்களாக விளைந்து விட்டால் அது எதைச் செய்கிறது..?
2.ஆசையினால் குற்றவாளிகளை எப்படி உருவாக்குகின்றது…? என்ற உணர்வைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

காவியங்களில் மகரிஷிகளால் காட்டப்பட்ட மூலக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.

பகைமைகளை அகற்றி ஒன்றி வாழும் உணர்வை நமக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்தமாக வாழும் வழியைத் தான் காவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

Leave a Reply