வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் கூட அடுத்தவர்கள் நம் மீது ஏதாவது குறையாகச் சொல்லி விட்டால் அவர்கள் உணர்வுக்கொப்ப அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

நமக்குள் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… செய்தானே…!” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் எதிரியை வளர்த்துக் கொண்டே இருக்கின்றது. அப்பொழுது
1.நம் நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை
2.நம் நல்ல குணங்களை ஒடுக்க நாமே காரணமாகின்றோம்

அந்த நல்லதைக் காப்பதற்காகச் சாதாரண நிலைகளில் கொடுக்கப்பட்டது தான் விநாயகர் தத்துவம். அன்று மெய் ஞானியான அகஸ்தியனால் இது உருவாக்கப்பட்டது.

அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்தான்.
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின் ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
2.எத்தகைய தீமைகளையும் அகற்ற முடியும்… ஒடுக்க முடியும்… அதைப் பழக்கப்படுத்த வேண்டும்.

உதாரணமாக ஒருவர் நம்மைத் திட்டி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை உற்றுப் பார்த்த பின் நமது உயிர் அதை இழுத்து அந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றது.

அடுத்து உடலுக்குள் அதை அணுவாகவும் இதே உயிர் தான் உருவாக்குகின்றது. எவ்வளவு வேதனைப்படும்படி அவன் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது.

இதைத்தான் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. விஷ்ணுவுக்குப் பிறந்த குழந்தை (பிரம்மா) அந்த விஷத்தின் தன்மையாக உருவாகி விடுகின்றது.

ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான்… அது மீண்டும் தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக வேதனையாக இயக்கும்.

எந்த வேதனையை உருவாக்கும்படி முதலிலே சொன்னானோ அதனால் உருவான அந்த உணர்வுகள் பிரம்மமாகத் தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது.

1.வேதனைப்படச் செய்த அந்த அணு மீண்டும் அதே வேதனையை இங்கே உருவாக்குகிறது.
2.அந்த ஞானத்தின் வழிகளிலேயே அது செயல்படும் என்று
3.இவ்வளவு கருத்துடன் அந்த இயற்கையின் நிலைகளை நாம் கண்டுணர இதைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

ஒரு விஷமான வித்து காற்றில் இருந்து தன் விஷமான உணர்வின் சத்தை நுகர்ந்து தான் அது விஷச் செடியாக வளர்கின்றது.

அதே போல் தான்
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படச் செய்தானோ
2.அவனின்று வரும் இந்த உணர்வை அந்த அணு நமக்குள் அது கிளர்ந்து… சுவாசித்து
3.அதனின் மலத்தை உடலிலே இடும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த வேதனை தாங்காது
4.அதனுடய செயலைக் குறைக்கச் செய்கின்றது..
5.நம் உடலில் அது நோயாக வருகின்றது

ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்…!

நம்மை வேதனைப்படச் செய்தான்… அவனைச் சும்மா விடுவேனா…? என்று கோபத்துடன் எண்ணும் போது இந்த விஷத் தன்மையான அணுக்கள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது.

மீண்டும் அவர்களை எண்ண… எண்ண… நமக்குள் நோயாகவே விளைகின்றது… எதிரியாகின்றது…!
1.எதிரிக்கு நாம் இடம் கொடுத்து விடுகிறோம்…
2.நம்மை நாம் மறந்து விட்டோம்…! என்ற நிலைதான் இங்கே வருகின்றது.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் இதை எல்லாம் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார். அவர் கொடுத்த அதே வழியில் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளும் அந்த ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வைப் பெற நாம் தியானித்தல் வேண்டும்.

பிறர் நம்மை வேதனைப்படச் செய்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அவனிடம் வேண்டி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.

எத்தகைய நஞ்சான உணர்வும் நம் உடலுக்குள் உருவாகாதபடி நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply