மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகள் அனைத்தும் இங்கே சுழன்று கொண்டுள்ளது… அதைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்

மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகள் அனைத்தும் இங்கே சுழன்று கொண்டுள்ளது… அதைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்

 

நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.
1.இப்படிச் செய்தால் அது உண்மையான தவமாக மாறுகின்றது
2.ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.

வெளியிலே எல்லோருக்கும் சொல்லி விடலாம். தன் குடும்பம் என்று வரும் போது தான் இதிலே பெரிய சிக்கலே வரும்.

ஏனென்றால் அடிக்கடி சந்திக்கும் நிலையும்… வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்வதாலும்… உடனே அந்த உணர்வைத் தூண்டிக் கோபமாகப் பேசச் சொல்லும்.

ஆகவே…. முதலில் வாரத்தில் ஒரு நாளாவது நம் குடும்பத்தில் எல்லோரும் ஒருங்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எண்ணிக் கூட்டுக் குடும்ப தியானம் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும். எங்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும். எங்கள் பார்வையால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். பொருளறிந்து செயல்படும் திறன் அனைவரும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது வளர வளர குடும்பத்திலே மகிழ்ச்சி பெருகும். நம் பார்வையும் சொல்லும் உலக மக்களின் தீமைகளை அகற்றும். நாம் இவ்வாறு எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் நாம் வாழும் பூமியிலேயும் படருகின்றது.

எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்…
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக அணுக்களாக இருப்பினும்
2.அதைப் பருகி தனக்குள் வளர்க்கும் நிலை இல்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு தான் இப்பொழுது அதைக் கவர்ந்து வளர்ப்பதற்குண்டான வழிகளை ஏற்படுத்துகின்றோம்.

அன்று அகஸ்தியனும் அவரைப் பின்பற்றிய வியாசரும் மற்ற ஏனைய ரிஷிகளும் எடுத்து அவர்கள் விளைய வைத்த ஒளியான உணர்வுகள் இங்கே மறைந்துள்ளது.

அதை நுகர்ந்து நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் மீண்டும் அதைப் பெருக்கும் நிலை வருகின்றது.
1.ஆனால் இதற்கு முன் அதைப் பெருக்கும் நிலை இல்லை
2.மகரிஷிகள் விண்ணிலே ஒளியின் சரீரமாக இருந்தாலும் அவர்கள் உமிழ்த்தும் உணர்வின் தன்மையை இங்கே பருகும் நிலை இல்லை

நாம் விண்ணை நோக்கி ஏங்கித் தியானித்து அந்த மகரிஷிகளின் அருளைப் பருகி எல்லோருக்குள்ளும் அது பெருக வேண்டும் என்று அந்த அலைகளை நாம் பரப்ப வேண்டும்.
1.முன்னாடி அந்த நிலை இல்லை
2.ஆனால் அதை இப்பொழுது நாம் உருவாக்குகின்றோம்

ஒவ்வொரு உணர்வுகளிலும் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது எத்தனையே லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு விளைய வைத்த அந்த அருள் உணர்வுகள் நமக்குள் விளைந்து
1.ஞானத்தையும் மெய்ப்பொருளைக் கண்டுணரும் உணர்வுகளும் நமக்குள் கருவாக உருப்பெறும்.
2.அதை குரு அருளால் உரு பெறச் செய்ய வேண்டும்
3.இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அவசியம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

Leave a Reply