மகரிஷிகள் சுவாசிக்கும் விண்ணின் ஆற்றலை நாமும் விண்ணிலிருந்தே சுவாசிக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகள் சுவாசிக்கும் விண்ணின் ஆற்றலை நாமும் விண்ணிலிருந்தே சுவாசிக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.

அது எந்த நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்துப் பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அதிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.பூமி ஈர்த்து வெளிக்கக்கும் நிலையைத் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம்.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அதிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.அதை எவ்வளவு உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் அழிக்கும் தன்மை என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!

Leave a Reply