தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்

தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்

 

ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகத்துடன் ஒத்துத் தான் வாழுகிறோம். இதிலே பிரிந்து வாழ முடியாது.

1.நன்மை தீமைகளைக் கேட்டுணர்ந்து தான் செயல்படுகின்றோம்.
2.தீமையை நுகர்ந்து தீமை என்று அறிந்து கொள்கின்றோம்… ஆனால் அந்தத் தீமை நமக்குள் விளையாது தடுக்க வேண்டும்.

உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்து அந்தத் தீமையை நமக்குள் குறைத்துப் பழக வேண்டும்.

மிளகாயைத் தனியாகக் கடித்தால் காரமாகத் தான் இருக்கின்றது. விஷத்தைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகிறது.

1.ஆனால் அந்த விஷமான சக்தியை ஒரு மருந்துடன் சேர்த்து
2.அதனின் கலவையைச் சிறுக்கப் போகும் போது அந்த உணர்வுகள் மருந்தை நன்மையாக்குகின்றது.
3.உடலுக்குள் வேகமாக மருந்தை எடுத்துச் சென்று நோயை நீக்குகிறது.

இதைப் போன்று தான் தீமைகளை நாம் பார்த்தாலும் அல்லது கேட்டுணர்ந்தாலும் நுகர்ந்த பின் அது நம்மை இயக்குகின்றது. அந்த நேரத்தில் “அதை இடைமறித்து” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைக்க வேண்டும். நமக்குள் அது அணுவாக மாறும்.

மகரிஷிகளின் அருள் சக்தியைக் கலந்த அணுவாக மாறும் போது நமக்குள் அது தீமையை அடக்கும் சக்தியாக உருப் பெறுகின்றது… அப்படி வலுப் பெறும் போது தீமைகளைப் பிளக்கின்றது.

பார்த்துணர்ந்த உணர்வுகள் (எதுவாக இருந்தாலும்) கண்ணின் கரு விழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ ஆன்மாவாக மாற்றி அந்த உண்மையைச் சொல்லும்.

ஏனென்றால்…
1.நம் கண்கள் அது வழி காட்டும்.
2.நம் உயிரோ அதை இயக்கிக் காட்டும்.
3.உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும்.
4.மீண்டும் அதனின் நினைவு வரப்படும் போது அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.

இப்படி மற்ற தீமைகளை நாம் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதே போன்று தான் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்துப் பதிவாக்க வேண்டும். உடலில் உள்ள எல்லாவற்றிலும் இதைக் கலக்க வேண்டும்.

இதற்கு முன்னாடி இந்த மாதிரி நமக்குத் தூய்மைப்படுத்தத் தெரியாது. ஆகையினால் எத்தனையோ உணர்வுகள் பதிவாகி இருக்கின்றது.

ஒரு எதிரி நமக்கு எப்பொழுதோ இடைஞ்சல் செய்திருப்பான். திடீரென்று அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரும். பார்த்தவுடன் என்ன நடக்கிறது…?

1.அவனைப் பற்றிய பதிவு ஏற்கனவே நமக்குள் இருக்கிறது.
2.அந்த நினைவு வந்த பின் “அயோக்கியப் பயல்… போகின்றான் பார்…! என்ற எண்ணம் டக்… என்று அங்கே வரும்.

அந்தச் சமயத்தில் அவன் மீது வரும் வெறுப்போ கோபமோ பயமோ அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் விளையும். உடலில் ஏற்கனவே இதன் வழியில் ஏற்பட்ட அணுக்கள் தனக்கு வேண்டிய இரையை எடுக்கும்.

அதே போல் அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் அவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் போது அந்தத் தவறின் உணர்வை இந்த அணு சாப்பிட்டு வளர ஆரம்பிக்கும்.

1.இப்படி எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் இது வளரத் தொடங்கினாலும்
2.நாம் அவ்வப்போது ஈஸ்வரா… என்று உயிரிடமே வேண்ட வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் எதைப் பார்த்தோமோ அது ஆன்மாவாகி சுவாசித்து அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அணுவாக அது வளர்க்கப்பட்ட பின் அதற்கு இது உணவாகக் கொடுப்பது உயிரின் வேலை தான். நாம் எண்ணியதை ஜீவ அணுவாக மாற்றுவதும் உயிரின் வேலை தான்.

தாவர இனங்களுக்கு சூரியன் எப்படி அதனதன் சத்துகளைக் கொடுத்துச் செழித்து வளரச் செய்கிறதோ அதே மாதிரித் தான்
1.நம் உயிரும் சூரியனாக இருந்து உடலில் அணுக்களை உருவாக்குவதும்
2.அதற்கு வேண்டிய இரைகளைக் கொடுப்பதும்
3.அந்த நினைவைக் கவர்ந்து தனக்குள் அதைச் செயலாக்குவதும் போன்ற வேலையைச் செய்கிறது.

ஆனால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றிய உணர்வுகள் விளைந்து மனித உடலுக்குள் வரும் போது ஆறாவது அறிவாக வருகிறது… கார்த்திகேயா.

ஒவ்வொரு சரீரத்திலும் தனக்குள் அறிந்து உணர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்கள் மாற்றி இன்று மனித உடலாக உருவாக்கியது இந்த உயிர்.

நம் ஆறாவது அறிவால் எதனையும் அறிந்திடும் நிலைகள் வருகின்றது. ஆகவே அதை வைத்து இருளைப் போக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை இணைக்க இணைக்கத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும். அதற்காக வேண்டித் தான் திரும்பத் திரும்பச் சொல்லி உங்களுக்குள் அதை வளர்க்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் மாறும் போது அதைத் திருப்பி
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவரும் சக்தியாக மாற்ற வேண்டும்.

Leave a Reply