சீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்

சீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்

 

அந்த மகரிஷிகளின் சக்திகளை எடுத்து நமக்குள் வலுவாக வளர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் அந்த உயர்ந்த சக்திகளின் இயக்கங்களை “அனுபவபூர்வமாக நமக்குள் பார்க்கலாம்…”

தீமை செய்யக் கூடியவர்கள் யாராவது… நமக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் கூட…
1.அது அவர்கள் உடலில்தான் வளரும். அவர்கள் உணர்வுகள் நம்மைப் பாதிக்காது.
2.எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்… தீமை செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால்
3.அந்த எண்ணம் அவர்களைப் பாதிக்கும்… பாதிக்கும் போது தான் நினைப்பார்கள்.

இந்த மனிதனை நாம் என்னவெல்லாம் பேசினோம்… என்று நினைப்பார்கள். இதை நிச்சயம் அங்கே உணர்த்தும்…!

ஏனென்றால் இந்த உணர்வுகள் போனவுடன் நினைவலைகள் முன்னுக்குப் போகும்… நம்மைப் பற்றிய நினைவுகள் வரும்.
1.இந்த மனிதனை நாம் தொந்திரவு செய்து விட்டோம் என்ற எண்ணம் வரும்.
2.நிச்சயம் இந்தத் திருப்பம் வரும்.

இதே போன்று குடும்பங்களில் அடிக்கடி சில குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகளுக்குக் காரணம் நாம் அல்ல. அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

அந்த நேரங்களில் எல்லாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

காரணம் இன்றைக்கு மட்டும் வந்ததல்ல இது. தாய் கருவில் இருக்கும் போதே இந்த வினைகள் தொடர்ந்து வந்தது.

அதே போல் ரோட்டிலே சாதாரணமாகச் சென்றாலும் கூட அங்கே இரண்டு பேர் சண்டையிடுவார்கள்.. ஒருவருக்கொருவர் சாபமிட்டுப் பேசியிருப்பார்கள். சும்மா வேடிக்கையாக நாம் காதிலே கேட்டாலும் கூட அதுவும் நமக்குள் அந்தச் சாபம் பதிவாகி விடுகிறது.

ஆனால் நாம் தவறு செய்து அது நமக்குள் வரவில்லை.
1.இந்த மாதிரிச் சாப அலைகள் நம் உடலில் எத்தனையோ விதமாக எத்தனையோ வகைகளில் பதிவாகியிருக்கும்.
2.அது எல்லாம் மிக சக்தி வாய்ந்தது.

எப்படி இருந்தாலும் உதாரணமாக ஒரு கேமராவில் படம் பிடிக்கிறோம் என்றால் குறுக்கே யாராவது வந்தால் படத்தில் அதுவும் அதில் சேர்ந்து பதிவாகத் தான் செய்யும். எடுத்த படமும் ஆடி இருக்கும் (BLURRED).

கேசட்டில் ஒரு இசையைப் பதிவு செய்கிறோம் என்றாலும் இடையில் யாராவது சத்தம் போட்டால் அதுவும் சேர்ந்து பதிவாகத் தான் செய்யும்.

இதே மாதிரித் தான் நம் உடலில் ஊழ்வினை என்ற நிலைகள் கொண்டு எத்தனையோ எண்ணங்கள் அதனுடன் சேர்ந்து சேர்ந்து பதிவாகிக் கொண்டே தான் இருக்கிறது.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது குறுக்கே பதிவான எண்ணங்களும் ஊடுருவி நமக்குத் தெரிய வரும். அதே சமயத்தில் அது நம் காரியங்களைத் தடைபடுத்தும் உணர்வாகவும் வந்து சேரும்.

ஒரு நல்ல காரியத்திற்காகச் சென்று கொண்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொண்டால் அவர்கள் சாபமிட்டுப் பேசியதும் இதிலே சேர்த்து (JOINED) இரண்டும் இணைந்து விடும்.

எப்படி எல்லாம் கெட்டுப் போக வேண்டும் நினைத்துச் சாபமிட்டார்களோ அந்த வேலையெல்லாம் நமக்குள்ளும் நடக்கும்.

1.இது எல்லாம் ஒரு உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது
2.அந்த மணம் வந்து உயிரில் பட்டு அதற்குத் தக்க மணமாகி “நமக்கே எதிரியாக வரும்…!”

இதை எல்லாம் துடைப்பது யார்…?

காரணம் இயற்கையின் நிலைகள் வளர்ச்சி அடைந்தது பலராம். பலருடைய எண்ணங்களை அறியும் சக்தியாக அந்த எண்ணங்கள் இயக்குவதை நமக்கு உணர்த்துகின்றது.

அதிலே வரும் தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றால் நரசிம்மா…! எப்பொழுது தீமை என்று அங்கே உணர்கிறோமோ… அது நம்து உடலுக்குள் போகாதபடி அங்கேயே பிளக்க வேண்டும்.

பிளக்க வேண்டுமென்றால் உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும். தீமையான உணர்வுகள் புகாதபடி பிளந்து தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதைத்தான் ஆத்ம சுத்தி என்று சொல்வது.

காவியத் தொகுப்புகள் இதை எல்லாம் தெளிவாக்குகின்றது. அதன் வழி நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்தாலே போதும். பின் தன்னிச்சையாக வேலை செய்யும்.

முந்திய பழக்கத்தில் எல்லாம்… யாராவது சொன்னால் அதிலேயே தான் நம் எண்ணத்தைச் செலுத்துவோம். ஆனால் இப்பொழுது
1.ஆத்ம சுத்தி செய்து வலுவாக்கிக் கொண்ட பின்
2.ஏதாவது இடைவெளியில் வந்து தடை செய்தாலும் கூட அதைக் கவனித்து மாற்ற முடியும்.

தீமை செய்யும் உணர்வுகள் குறுக்கிட்டால்…
1.உடனே அந்தத் தீமைகளைப் பிளக்க வேண்டும்
2.ஆத்ம சுத்தி செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வுகள் எல்லாம்
3.நமக்குள் தன்னிச்சையாகத் தோன்றும்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் சுத்தமான தண்ணீரை ஊற்ற ஊற்ற… அழுக்குத் தண்ணீர் எப்படிக் குறையுமோ அதைப் போன்று தான் ஆத்ம சுத்தி செய்யச் செய்ய… தூய்மைப்படுத்தும் சக்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் பெருகுவதைக் காணலாம்.

Leave a Reply