சித்தர்களால் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சித்தர்களால் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலக்கும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் அதிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்… உந்தல்கள்…!
2.தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவர்கள் பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள். பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி நான் என்றால் என்ன…? என்பதை அன்றே உணர்ந்தார்கள். பின் வரும் மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.

அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்… வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் உடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமிக்க வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்துப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அதே போல் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

Leave a Reply