கதைகளிலும் காவியங்களிலும் வடித்த உருவம் தான் கடவுள்..! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்

கதைகளிலும் காவியங்களிலும் வடித்த உருவம் தான் கடவுள்..! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மக்களுக்கு… நன்மை தீமைகளை வழி வகுத்துச் சென்றிட… புரியாத நிலைகளில் தான் இன்றைய மதங்களும் மக்களும் உள்ளார்கள்.

ஆதியில் இருந்து…
1.இம் மனித ஆரம்ப காலத்திலிருந்தே… உதயத்திலிருந்தே வந்த பல சித்தர்கள் கொடுத்த உண்மை நிலைகளை எல்லாம்
2.அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பிரித்தும் சேர்த்தும் சிதற விட்டுவிட்டார்கள்.

பல உண்மை நிலைகளை மதம் என்ற அடிப்படையில் உலகில் பல பாகங்களில் பல சித்தர்களால் வெளியிட்டதை
1.அந்தந்த நிலையில் உள்ள மக்களுக்குப் புரியும்படியாக வெளியிட்டதை
2.காலத்தின் செயலால் ஒரே அடிப்படையில் ஒவ்வொருவரும் தன் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் எல்லோரும் சொல்லும் அடிப்படைக் கருத்து நம் ஆத்மாவிற்கு நாம் சேமித்து வைத்திடும் நிலை என்ன…? என்ற ஒன்றே தான்.

அதை வைத்துத்தான் பலர் பல வழிகளில் பல கதைகளைக் கட்டி… உண்மை இரகசியத்தை எல்லாமே மக்களுக்கு உண்மையாகப் போதிக்காமல் கதை வடிவில் அதை வடித்து
1.கதையையே கடவுளாகக் காட்டி…
2.மக்களுக்குக் கடவுள் என்றாலே “கதையில் வடித்த உருவம் தான்…!” என்ற எண்ணம் வரும்படிச் செய்துவிட்டார்கள்.

எல்லா மக்களுமே தான் உயர வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தைக் கொண்டு தான் வாழ்கின்றார்கள். ஆனாலும் அவ்வாழ்க்கையில் வரும் பேராசை நிலையில் தான் பல பாவங்களுக்கு உட்படுகின்றார்கள்.

நல்வழியில் நடத்திச் சென்றிடத்தான் அன்றையச் சித்தர்கள் பல அரும்பாடுபட்டுத் தவமிருந்து தான் பெற்ற சக்தி நிலைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இராமாவதாரத்தில் வந்த வான்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமாயணக் காவியத்தையே அதில் உள்ள உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

அதில் உள்ள குணா அம்சங்களை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படிக் குணா அம்சங்கள் அமைகிறது…? என்ற தத்துவ உண்மைகளை உணர்த்திடாமல்
1.அந்தக் கதையையே தன் தன் நிலைக்கு உகந்தபடி மாற்றியும் மறுத்தும்
2.இது தான் உண்மை… இது எல்லாம் தவறு…! என்று சுட்டிக் காட்டும் நிலையில் அன்றே சிலர் திருத்திவிட்டார்கள்.

அன்று எழுதிய இராமரின் கதை தான் இன்றும் பல கோணங்களில் திரித்துச் சிதறடித்தாலும் அந்த இராமரின் கதையே தான் உலவிக் கொண்டுள்ளது.

இராமாயணத்தின் மகத்துவத்தை அதிலுள்ள உண்மை நிலைகளை உலகிலுள்ள மக்கள் எல்லோரும் புரிந்து கொண்டால் இன்று உலகில் நடந்திடும் இக்குழப்ப நிலைகளும்… மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலையும் இருந்திடாதப்பா…!

எல்லோரும் என்னும் பொழுது ஒரு நற்செயலைச் செய்பவரும் நல்ல காரியத்தைச் செய்பவர்களும் பல நல்ல நிலைகளை எல்லாம் இப்பொழுது மதங்களின் வழியில் தன் தன் மதத்திற்கு உகந்தபடி சிதறடித்து விட்டார்கள்.

1.ஒருவனே தேவன் ஒன்றே குலம்…
2.அத்தேவனில் இருந்து பிரிந்து வந்த பிம்பங்கள் தான்… நாம் எல்லோருமே…
3.எந்த மதத்திற்கும் யாரும் அடிமையில்லை…! என்ற சொல்லெல்லாம் இந்த மனிதனின் மனதிலும் ஏறவில்லை.

ஏட்டிற்கும் எழுத்திற்கும் தான் அது எல்லாம் இப்பொழுது உகந்ததாக உள்ளது.

ஆண்டவனையே… “தனக்கு மட்டும் தான் சொந்தம்…!” என்ற எண்ணத்தில் கோவில்களுக்குச் செல்பவர் தான் பலர் உள்ளனர் இன்றும்.

Leave a Reply