போற்றலில் எந்தப் பலனும் இல்லை… ஏங்கிப் பெற்றால் தான் வளர்ச்சி கிடைக்கும்

போற்றலில் எந்தப் பலனும் இல்லை… ஏங்கிப் பெற்றால் தான் வளர்ச்சி கிடைக்கும்

 

அந்த அருள் ஞானிகளின் வித்தினை உரமாக இடப்பட்டு உயர்ந்த சக்தியினை அவர்கள் பெற்ற நிலையினை உங்களுக்குள் உபதேச வாயிலாக இணைத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
1.நான் இணைத்தாலும் நீங்கள் உங்கள் நினைவு கொண்டு
2.உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால்தான் அது பதிவாகி முளைக்கும்.

நிலத்தில் விதைகளை மேலெழுந்தவாரியாகப் போட்டு விட்டால் எறும்புகள் தின்று விட்டுப் போய்விடும். அது போல் இங்கே கேட்ட உபதேசத்தை மேல் மட்டத்தில் ஆகா…! என்று போற்றி விட்டால் இது முளைக்காது.

போற்றலை விட்டுவிட்டு அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வினைக் கொண்டால் அது உங்களுக்குள் முளைக்கும்.
1.போற்றுதல் என்பது புறத்தால் தள்ளுவது…!
2.ஏங்குவது என்பது அகத்திற்குள் விளையச் செய்வது…!

இந்த இரண்டு நிலைகளில் உள்ளோரும் எந்த அளவுகோல் கொண்டு இதை ஏற்றுக் கொள்கின்றனரோ அதற்குத் தக்கவாறு வித்தின் தன்மை இணைந்து மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவரும் நிலையும் வருகின்றது.

ஆனால் இங்கே பெரும் பகுதி போற்றித் துதிப்போர் தான் பலரும் உண்டு. சாமியைப் (ஞானகுரு) பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால்
1.புகழ்ந்த நிலையில் கொண்டு ஏற்றுக் கொள்ளும் நிலை இழந்து
2.அருள் மகரிஷிகளின் சக்திகளைக் கவர்ந்திடும் நிலை அற்றுப் போய்விடும்.

அதுவே தனக்குள் கவர்ந்திடும் அந்த ஏக்க நிலை இருந்தால்தான் அது ஆழப் பதிந்து அதனின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அது கவர்ந்து விடும்.

இந்த உடலின் ஈர்ப்புக்குள் நாம் பதிந்து கொண்ட உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அதனின் நிலைகள் விளையச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே…!

அந்த மகரிஷிகளின் உணர்வைச் சிறிது காலம் இணைத்துக் கொண்டே இருந்தால் அது தன்னிச்சையாக வளரும் தன்மை வரும். உடலை விட்டு நாம் அகன்ற பின் அந்த உணர்வின் வித்துக்கள் தீமையை அகற்றி மெய் உணர்வின் தன்மையாக என்றும் ஒளியின் நிலையாக நம்மை அடையச் செய்யும்.

இந்த உடலிலிருந்து தான் அதைச் செய்ய வேண்டும்.

உங்களுக்கு உபதேசித்ததை இரவு முழுவதும் எண்ணத்தால் எண்ணி
1.அந்த மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும்
2.அறியாது வந்த தீமைகள் விலக வேண்டும்
3.தூய்மைப்படுத்தும் உணர்வுகள் வளர வேண்டும் என்று
4.தியானத்தின் மூலம் ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

நாம் தொழில் செய்யும் பொழுது அல்லது மற்ற வேலைகள் செய்யும் பொழுதோ உடலில் பட்ட அழுக்கை உடனுக்குடன் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோமோ இதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி கொண்டு எண்ணத்தால் நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதனின் சக்தியை நாம் இப்படிக் கூட்டினால் தான் இது விளையும். அது அல்லாது
1.சாமி செய்வார்… சாமி தான் செய்வார்…! என்ற எண்ணத்தில் இருக்கக் கூடாது.
2.ஒரு தடவை எண்ணினேன் பதிவு செய்து கொண்டேன் என்ற எண்ணத்தில் விட்டுவிடக் கூடாது.
3.மீண்டும் மீண்டும் நம் எண்ணத்தால் அதைக் கவர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு வித்து செடியாக முளைத்த பின் தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து இணைத்துக் கொண்டு அது தன்னிச்சையாக எப்படி எடுத்து வளர்கின்றதோ அதைப் போல
1.நமது உடலில் அந்த விளையும் பருவத்தை எட்டும் வரையிலும்
2.நம் எண்ணத்தால் மகரிஷிகளின் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்
3.அந்த வித்திற்கு உணவை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்

அது உருவாகித் தன் இனத்தைப் பெருக்கி விட்டால்… பின் உங்களுடைய எண்ணம் தேவையில்லை. அது தன்னிச்சையாக எடுத்து வளரும்…!

உடலில் வந்த தீமைகளை அகற்றி விட்டுத் தீமையை அகற்றிடும் உணர்வாக விளைந்து உடலை விட்டு வெளியே சென்றாலும் தூய்மையான ஒளியின் உணர்வாக இது விளையும். உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply