நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

 

உதாரணமாக நாம் வசிக்கும் இடத்தில் ஒரு வேப்பமரத்தின் வித்து கீழே விழுந்தால் அது முளைத்து வளர்ந்து மரமாகி விட்டால் பின் அதை வெட்டுவதற்கு அரிவாள் கோடாரி எல்லாமே தேவைப்படுகின்றது.

பந்தோபஸ்தாக அதை அப்புறப்படுத்துவதற்கு எத்தனையோ ஆள்களும் தேவைப்படுகின்றது. நம் வீட்டுப் பக்கம் விழுந்து சேதாரம் ஆகாதபடி அதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அப்போதுதான் அதை வெட்ட முடியும்.

இதைப் போன்றுதான்
1.நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்
2.தீமைகளை நமக்குள் வளரவிடக் கூடாது.
3.அதற்காக வேண்டித் தான் தியானத்தின் மூலம் உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம்.

நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது. அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் உங்களைக் காக்கும் சக்தியாக அது நிச்சயம வரும்.

உதாரணமாக… ஜோசியக்காரன் நம்மிடம் ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறது. அதனால் பணம் விரயமாகும் தொழில் நஷ்டமாகும் எதிரிகள் அதிகமாக வருவார்கள் என்று சொல்வார்கள். அதைப் பதிவு செய்து விட்டால் ஜோசியக்காரன் சொன்னபடி தான் இங்கே உணர்வின் இயக்கம் ஆகின்றது.

அந்த அடிப்படையில் தொழில் செய்தால் அது நஷ்டமாகி விடுகிறது… இடைஞ்சல் தான் வருகின்றது.

ஒரு சிலர் (ஜாதகம் பார்ப்பவர்கள்) இதையே குறிப்பாகப் பார்த்து எடுத்துக் கொள்வார்கள். இந்த உணர்வுகள் வளர்ச்சியாகிச் சொன்னவுடனே அதைக் கேட்டவுடன் நமக்குள் பதிவாகின்றது. இதெல்லாம் வாக்குவன்மை தான்…!

ஜோசியக்காரன் சொன்னதை நுகர்ந்தால் உடலில் பதிவாகிறது.
1.நல்லது சொன்னால் ஓரளவுக்குப் பலிக்கலாம்
2.ஆனால் கெட்டதை அதிகமாகச் சொல்லி விட்டால் அது அதிகமாகிறது.
3.(பெரும் பகுதி ஜோசியக்காரர்கள் நல்லதை அதிகம் சொல்வதில்லை).

கெட்டதை எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் சாங்கியத்தைச் செய்தால் நீக்கி விடலாம் என்று அதையும் சொல்வார்கள். அவன் சொன்னபடி காசைக் கொடுத்துத்தான் நீக்குவதற்குப் பார்க்கின்றோம்.

இருந்தாலும் அப்படி ஜாதகமும் ஜோதிடமும் பார்க்கும்போது
1.ஒரு விபரீத விளைவுகளைச் சொன்னார்கள் என்றால் அதனால் நாம் அதிர்ச்சி அடைந்து விடுகின்றோம்.
2.ஆக மொத்தம் காசு கொடுத்துத் தான் தீமைகளை நீக்க வேண்டும் என்ற நிலை வருகிறது.

ஆனால் நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதை ஏங்கிப் பெற்றால் உயிர் அதனின் கருவை உடலிலே உருவாக்குகின்றது.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்க்கத் தொடங்கினால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கலாம். ஞானிகள் காட்டிய வழிகள் இது தான். பல சரக்குகளைப் போட்டு ஒரு குழம்பை எப்படிச் சுவையாக வைக்கின்றோமோ அதைப் போல் நல்லதாக மாற்ற முடியும்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு பல உயிரினங்களின் அணு செல்களை எடுத்துப் புது விதமாக பல பல உயிரினங்களை விஞ்ஞானி மாற்றியமைக்கின்றான். விஞ்ஞானிகள் செய்வதை எல்லாம் இன்று நாமும் பார்க்கின்றோம்.

அதைப் போன்று தான் அந்த அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் பகைமை உணர்வுகளையும் தீமையான உணர்வுகளையும் மாற்றிவிட முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வெறுப்பு வேதனை கோபம் எல்லாம் நம்மை அறியாமலே வருகின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும். நம்மை நாம் அறிதல் வேண்டும்.

1.பிறிதொரு உணர்வு எப்படி இயக்குகின்றது…?
2.அந்தப் பிறிதொரு தீமையான உணர்வு நமக்குள் புகாது எப்படித் தடுக்க வேண்டும்…?
3.அதற்குண்டான உபாயங்களையும் சக்திகளையும் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசமாகக் கொடுக்கின்றோம்
4.அதை நீங்கள் எடுத்தால் நிச்சயம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Leave a Reply