வீட்டையும் ஊரையும் நாட்டையும் உலகையும் தூய்மைப்படுத்தும் சக்தி

வீட்டையும் ஊரையும் நாட்டையும் உலகையும் தூய்மைப்படுத்தும் சக்தி

 

தியானம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவருமே கூட்டுத் தியானம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கு பேர் சேர்ந்தாலும் கூட்டுத் தியானங்கள் அமைக்கலாம்.
1.ஏனென்றால் ஒருவர் கை தட்டுவதைக் காட்டிலும்
2.பலர் சேர்ந்து கை தட்டும் போது ஓசை அதிகரிக்கும்.

அதைப் போன்று தான் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… குடும்பத்தில் கணவன் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்… என்று எல்லோரும் சேர்ந்து எண்ணுதல் வேண்டும்.

அதே போல் அருள் ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளைக் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களையும் தியானத்தில் கலந்து கொள்ளும்படி பழக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்…! என்று இந்த உணர்வுகளைப் பாய்ச்சி… இந்த உணர்வுகளை கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

1.இதைப் போன்று எண்ணி எடுக்கும் இந்த உணர்வுகள் ஒவ்வொன்றும்
2.நமக்குள் தெளிந்த மனம் பெறச் செய்யும்…
3.அது நமக்குள் பேரருளாக மாறும்… பேரொளியாக மாறும்

இந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்லப்படும்போது அவர் மனதைத் தெளிவாக்கி… அவர்களையும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும்.

அந்தத் தெளிவான மனதையும் தெளிந்திடும் மனதையும் அங்கே உணர்த்தும். அதே சமயத்தில் நமக்குள்ளும் அந்த தெளிவான உணர்வும் தெளிந்த மனமும் உருவாகும்.

இதைப் போன்ற ஒரு பழக்கத்திற்கு வந்தால் மனிதன் என்ற முழுமையை நாம் அடையலாம். பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையலாம்.

வீட்டைப் புதிதாகக் கட்டினாலும் அதை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொண்டே தான் வருகின்றோம்.

இங்கே இந்தத் தியான மண்டபத்தையே அமைத்திருக்கிறோம் என்றாலும் சில காலம் அதைத் தூய்மைப்படுத்தவில்லை நெடி ஏறி விடும். பின் இங்கே வரும் போதே உள்ளுக்குள் நுழையும் போதே சங்கடம் வந்து விடும்.

அதே போல் தான் நம் வீட்டைச் சில காலம் திறந்து உபயோகப்படுத்தாதபடி விட்டு விட்டால் வீட்டிற்குள் நுழைந்தால் நெடி வரத் தான் செய்யும்.

அன்றாடம் நாம் குளிக்காமல் இருந்தால் உடம்பில் அரிப்பு வரும். நாம் அணிந்திருக்கும் துணியைத் துவைக்காமல் விட்டு விட்டால் அது இற்றுப் போகும். எல்லோருக்கும் இது தெரிந்தது தான்.

ஆகவே நம் ஆன்மாவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தூய்மைப்படுத்த வேண்டுமா இல்லையா…?
1.அருள் ஞானிகளின் அருள் உணர்வைக் கொண்டு
2.நமது ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்
3.நம் வாழ் நாள் முழுவதுமே தூய்மைப்படுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

இப்படி எந்த அளவிற்கு நாம் அதைத் தூய்மைப் படுத்துகின்றோமோ அது அனைத்தும் நமக்குள் பேரருளாக மாற்றும். எதனையுமே நல் சொல்லாகவும் நல் செயலாகவும் நாம் செயல்படுத்தும் அந்த அருளாக மாறும்.

1.நமது வாழ்க்கை பிறருடைய தீமைகளை அகற்ற உதவும்.
2.நம் சொல்லின் உணர்வுகள் நமக்கும் நன்மை செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும்.

பிறருடைய நிலைகளை மகிழச் செய்யும் பொழுது தான் அது பேரொளி ஆகின்றது. நமக்குள் பேரொளியின் அணுக்களாக விளைஉஅத் தொடங்குகின்றது.

ஒவ்வொருவரும் இதனை மனதில் வைத்து இந்த இல்லற வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழச் செய்யுங்கள். அதற்குண்டான உணர்வுகளையும் உபாயங்களையும் கூட்டுங்கள்.

நீங்கள் கணவன் மனைவி ஒன்றுபட்டு வாழ்ந்தால் வீட்டுக்கு மட்டுமல்ல… ஊருக்கு மட்டுமல்ல… எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

1.ஒரு பத்து குடும்பங்கள் இது போன்று ஒன்றுபட்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்தால் அந்தத் தெருவே சுத்தமாகும்
2அங்கு வசிக்கக்கூடிய மக்களும் தெளிவு அடைவார்கள்.
3.ஒருவருக்கொருவர் அறியாமல் வரும் பகைமை உணர்வையும் மாற்றிடும் அரும் பெரும் சக்தியாக இது மாறும்.
4.அந்த வீடோ தெருவோ ஒரு சொர்க்கலோகமாக மாறும்
5.மற்ற இடத்திலிருந்து அங்கே யார் வந்தாலும் அவர்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் சக்தியாக இது வரும்.

ஆகவே தெளிந்த மனதுடன் வாழ்ந்திடும் உணர்வினை முதலில் உங்கள் குடும்பங்களில் இத்தககைய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதனை அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற முயற்சிகளை நாம் ஒவொருவரும் அவசியம் கொண்டு வர வேண்டும்.

Leave a Reply