முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவது தான் நம் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்

முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவது தான் நம் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானப் பயிற்சி கொடுக்கின்றோம் (ஞானகுரு).

இந்தப் பயிற்சி மூலம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுப்படுத்திக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிர் ஆன்மாக்களை விண் செலுத்துவது தான் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நம்மைக் காக்க… நம்மை வளர்க்க… அவர்கள் எத்தனையோ வேதனைப்பட்டு இருக்கின்றார்கள். அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் கூட்டி அந்த ஆன்மாக்களின் விண் செலுத்துவதே முறை…!

நம்முடைய முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில்
1.சந்தர்ப்ப பேதத்தால் விபத்துக்களில் சிக்கி இருப்பார்கள்…
2.ஒரு சிலர் தற்கொலை கொலை கூடச் செய்திருப்பார்கள்…
3.எத்தனையோ வகையான சாபங்கள் இட்டும் அவர்கள் மடிந்து இருக்கலாம்.

இதைப் போன்ற உணர்வுகள் குல வழி என்று தொடரப்படும் போது குடும்பங்களில் கர்ப்பமுறும் தாய் கருவிலே இது இணைந்து பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

அப்படிப் பிறக்கும் குழந்தைகளின் குடும்பங்களில் ஏராளமான இன்னல்கள் வந்து விடுகின்றது. பிறக்கும் குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் இது போன்று இயக்கமாகின்றது.

ஆகவே எந்த வழியில் முன்னோர்கள் உயிரான்மாக்கள் உடலை விட்டுச் சென்றிருந்தாலும் அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால்
1.அவர்களை அறியாது இயக்கிய விஷத்தன்மைகள்…
2.அவர்களை மாய்க்கச் செய்த அந்த விஷத்தின் தன்மைகளை
3.கூட்டுத் தியானங்கள் மூலம் விண் செலுத்த முடியும்… சப்தரிஷி மண்டலத்தில் இணைக்க முடியும்.
4.ஏனென்றால் அவர்கள் கடும் விஷத்தையும் முறித்தவர்கள்.

குடும்பத்தில் இருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பாகத் தியானித்து எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளி அங்கே அனுப்பப்படும் பொழுது அந்த அலைகளுடன் கலந்து விஷத்தின் தன்மை குறைந்து விடுகின்றது.

முன்னோர்கள் துர்மரணமடைந்திருந்தாலும் கூட அவர்கள் ஒளி உடல் பெறுகின்றனர். துர்மரணத்திற்குக் காரணமான அந்த உணர்வுகளும் மடிந்து விடுகின்றது. அவர்கள் ஒளி உடல் பெற்றுச் சப்தரிஷி என்ற நிலை அடைகின்றனர்.

இப்படி அடையச் செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் (துயரப்பட்டது நோய்வாய்ப்பட்டது) நம்மிடத்தில் பதிந்திருந்தாலும் இருளை நீக்கிப் பொருள் காணும் உணர்வாக அது செயல்படுத்தும்.

குடும்பத்தில் நமக்குத் தெரியாமல் அறியாமலே சூட்சமத்தில் எத்தனையோ வகையில் தீமைகள் நடக்கின்றது.

காரணம் பாசமும் பற்றும் கொண்டு இருந்தாலும் நம்முடன் வாழும் போது நோய்வாய்ப்பட்டிருந்தார் என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் உடலை விட்டுப் பிரிந்த பின் யார் மீது பற்று உள்ளதோ அந்த உடலுக்குள் வந்து அவர் உடலில் இருந்த தீமைகளும் இங்கே இயக்கத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலை ஆகாதபடி நாம் தடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்தவர்கள் எந்த நேரம் உடலை விட்டுச் சென்றாலும் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையாக அவர்களை ஒளியின் தன்மை பெறச் செய்ய வேண்டும்.

நம் தூதுவராக அங்கே விண்ணுக்கு அனுப்பினால் அவர்கள் முதலில் ஒளி உடல் பெறுகின்றனர். அடுத்து நாமும் பிறவியில்லா நிலை அடையலாம். வழி வழி நாம் இதைச் செய்தால் இதன் வழி சீராக வருகின்றது.

ஆனால் “எங்களுடன் வாழ்ந்தீர்கள்… சம்பாதித்துக் கொடுத்தீர்களே… இப்படி எங்களை விட்டுப் போய்விட்டீர்களே…!” என்று பாசத்துடன் எண்ணினால் அந்த ஆன்மா நமக்குள் வந்து அவர் பட்ட கஷ்டத்தை நமக்குள்ளும் இயக்கும்.

இந்த உடலுக்குள் வந்து மீண்டும் வேதனையைத் தான் வளர்க்கும். இந்த உடலை விட்டு வெளியிலே செல்லும் போது கடைசியில் மனிதனல்லாத உயிரினமாகத் தான் பிறக்கும்… நம்மையும் அதே வழியிலே வீழ்த்திவிடும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மூதாதையர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம். அதற்கு அந்த அருளைப் பெறுவோம்.

1.இதைச் செய்வதற்குக் காசு பணம் எதுவும் தேவையில்லை
2.எல்லோருக்கும் அனுமதி கொடுக்கின்றோம்… தாராளமாகச் சொல்கின்றோம்
3.உங்களால் முன்னோரை விண் செலுத்த முடியும்
4.தீமைகளை நீக்க முடியும்… நன்மைகளைப் பெற முடியும்
5.ஆகவே நன்மை பெறும் சக்தியைத்தான் கொடுக்கின்றோம்.

திட்டியவனை எண்ண்ணும் பொழுது… அது தீமைகளைத் தான் செயல்படுத்தும். வேதனைப்படுவோரை எண்ணும்போது அது வேதனைப்படுத்தும் உணர்வாக வருகின்றது… மற்றவர்களையும் வேதனைப்படுத்தும் நிலைதான் வருகின்றது.

அதே போன்று
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால்
2.தீமையை நீக்கும் அருள் சக்தியாக நிச்சயம் வளரும்.

கடலிலே செல்லப்படும் பொழுது அதிலே எத்தனையோ அலைகள் வருகின்றது. அதிலே ஒரு தீவிற்குப் போக வேண்டுமென்றாலும் அந்த அலைகளைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் பெரிய அலை வந்து விட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்.

ஆக… உங்கள் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் கோபமும் போன்ற கடினமான அலைகள் வரும் போது அதிலே நீங்கள் கவிழ்ந்து விட்டால் கோபப்பட்ட உடலுக்குள்ளோ அல்லது வெறுப்படைந்த வேதனை அடைந்த உடலுக்குள்ளோ சென்று அங்கே அதே தீமைகளைத் தான் வளர்க்க முடியும்.

இதையெல்லாம் கடந்து வர வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தைத் துடுப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த மனித உடலில் பெற்ற பாவங்களை நீக்க முடியும். பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

ஆகவே தீமையை நீக்கும் ஒன்பதாவது நிலையிலிருந்து பத்தாவது நிலையான கல்கி ஒளி நிலை அடையக்கூடிய தகுதி பெற்றால் விஜய தசமி.

1.விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் வந்து
2.ஒளியின் உணர்வாக மாறி விண்ணிலே மீண்டும் ஐக்கியமாகி
3.என்றும் ஏகாந்த நிலைகள் பெறுவதுதான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த மார்க்கம்…!

Leave a Reply