மின்னலுக்குள் இருக்கும் இரகசியங்களும் அதனின் ஆற்றல்களும்

மின்னலுக்குள் இருக்கும் இரகசியங்களும் அதனின் ஆற்றல்களும்

 

மின்னல் பூமியிலே ஊடுருவிப் பாயும் பொழுது ஒரு கர்ப்பிணிப் பெண் அதை நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய குழந்தை சிதைந்து விடும்…! இது சாதாரண நிலைகள் கொண்டது.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியன்…
1.தாய் கருவிலேயே அந்த மின்னலைத் தணிக்கும் சக்தியைப் பெற்றதனால்
2.பிறந்த பின் அவன் மின்னலின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்தான்
3.தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அந்த நஞ்சினை அடக்கிடும் அந்த உணர்வின் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது…? என்பதைத் தான் அகஸ்தியன் பெற்ற அந்த நிலைகளை குருநாதர் அனுபவபூர்வமாக எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.

அகஸ்தியன் பிறந்த பிற்பாடு அவனின் வளர்ச்சியில் எந்தெந்தச் செடிகளில் அந்த நட்சத்திரத்தின் தன்மைகள் (மின்னல்) இருந்தது என்பதை அந்தப் பல கோடி தாவர இனங்களையும் அறிந்து கொள்கின்றான்.

மின்னல் வரும் பொழுது பார்த்தோம் என்றால் சில செடிகள் அபூர்வமாக விளையும்… அவைகளின் வளர்ச்சி வீரியத் தன்மை கொண்டதாக இருக்கும்.

எந்த நட்சத்திரத்தின் உணர்வு அந்தச் செடியில் இருந்ததோ அந்த மின் கதிர்களை இழுத்துச் சத்தாக உரமாக எடுத்து அதன் இயக்கமாக வளரும்.

ஆனால் இரண்டு நட்சத்திரங்களின் சக்தி உராய்ந்து மின்னலாகப் பரவி மோதப்படும் பொழுது செடிகளில் பட்டால் அது கருகி விடுகின்றது.

அதாவது
1.மின் கதிர்களை நுகரப்படும் பொழுது செடிகளுக்கு அது உரமாகிறது
2.மின்னலின் தன்மை அந்த செடியிலே அழுத்தமாக மோதி ஊடுருவும் போது செடிகள் கருகி விடுகின்றது.

ஏனென்றால் இரண்டு மின் அலைகள் அது மோதும் போது அதனின் அழுத்தம் வரும் பொழுது இந்தச் செடியோ மரமோ கருகி விடுகின்றது

ஆனால் மின் கதிர்கள் பாயும்போது
1.எந்தெந்த நட்சத்திரத்தின் மின் கதிர்களை அந்தச் செடி உட்கொண்டதோ அந்தச் செடி செழிப்பாக வளர்கிறது.
2.அதனால்தான் குருநாதர் அடிக்கடி “மின்னலைப் பார்…” என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அந்த மின்னலின் இரகசியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்த மாதிரி எத்தனை வழிமுறைகளில் தெரியப்படுத்துகின்றார்.

மின்னல்கள் சில பேர் உடலில் பாயும்போது சூறாவளி போன்று மோதிய பின் அவர்களுக்குத் தெரியாதபடியே காக்கா வலிப்பு போன்ற நோய்கள் எல்லாம் வந்து விடுகின்றது. இது எல்லாம் சுழற்சியின் தன்மையால் வருவது.

ஆனால் குருநாதர் என்னை மின்னலைப் பார்க்கச் சொல்லும் போது இது எப்படி எல்லாம் வளருகிறது…? அது எந்த நிலை…? என்ன செய்கிறது…? என்கிற வகையில் தெளிவாக எனக்குக் காட்டினார்.

அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் போது தாய் உடலில் பல விதமான உணர்வுகள் தாக்கப்பட்டு அவன் பிறந்த பின் அந்த மின் கதிர்களை நுகர்ந்து வளர்த்துக் கொண்டான்.
1.ஒரு மின்னெட்டாம்பூச்சி எப்படி உருவாகி வந்ததோ… எலக்ட்ரிக் மீன் எப்படி உருவாகி வந்ததோ…
2.அதே மாதிரி உணர்வுகள் இவன் உடலுக்குள் உணர்ச்சிகளாக ஆகி விளையத் தொடங்கியது.

இது அவனுடைய சந்தர்ப்பம்.

அப்படி விளைந்த பின் தான் இவனுடைய உணர்வுகள் கொண்டு எந்தெந்தச் செடிகளிலிருந்து என்னென்ன சக்திகள் வருகிறது…? என்று அவனால் நேரடியாகப் பார்க்க முடிகின்றது.

அதே சமயத்தில் ஒரு நட்சத்திரத்தின் சக்தி இன்னொரு நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதி அந்த மின் கதிர்கள் போகும்போது அதை எந்தெந்தச் செடிகள் உட்கொள்கிறது…? அது எதனால் உரமாகிறது…? என்பதையும் காணுகின்றான்.

இரண்டு நட்சத்திரங்களின் சக்திகள் மோதுவது போல்… அதிலே உருவான செடிகளிலிருந்து வரக்கூடிய மணத்தைச் சூரியன் கவரப்படும் பொழுது அது இரண்டும் மோதலாகி புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது…? என்று அது அனைத்தையும் காணுகின்றான்.

தாய் கருவில் வளர்ந்து பிறந்த பிற்பாடு அகஸ்தியனுடைய வளர்ச்சியில் இதையெல்லாம் அறிந்து கொள்கின்றான் தன் அனுபவத்தில்.

காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் குருநாதர் நேரடியாக என்னைக் காணும்படி செய்தார். நேரடியாகப் பார்த்ததைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.

ஆனால் குருநாதர் சொல்லும் போது கொஞ்சம் கவனம் பிசகினாலும் உண்மையை அறிய முடியாது. அதைப் போன்று யாம் இப்பொழுது உபதேசிக்கும் போது நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்தான் உங்களால் மீண்டும் இதை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த உண்மைகளை அறிய முடியும்.

1.ஆகவே இதை உற்றுக் கவனித்து
2.அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் இருளை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன்
3.நீங்கள் எடுத்துப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

விஞ்ஞான உலகில் இன்று பரவிக் கொண்டிருக்கும் கதிரியக்கச் சக்திகளிலிருந்து விடுபடுவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குள் உணர்த்துகின்றேன்.

Leave a Reply