குரு என்ற பெயரில் தனி மனிதனின் துதி தேவையில்லை – ஈஸ்வரபட்டர்

குரு என்ற பெயரில் தனி மனிதனின் துதி தேவையில்லை – ஈஸ்வரபட்டர்

 

மனிதன் தன்னாலே சிந்திக்கத் தலைப்பட்டுத் தன்னுள் எழுந்த வினாவாக “நான் என்பது யார்…?” என்றே தன்னைத் தான் அறிந்து கொள்ளும் முயற்சியாகத்
1.தான் கண்டுணர்ந்த வழி வகைகளை… மெய் உணர்வுகளை
2.மறை பொருளாக்குபவர்களும் உண்டு.

ஏனென்றால் மேன்மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள மனித எண்ணத்தின் செயல்பாட்டில்
1.“விதி முறைகள்…!” என்றே சூட்சமப்படுத்தி
2.அப்படி இருக்கக்கூடாது… இப்படிச் செய்யக் கூடாது…
3.அது தீட்டு… இது தோஷம்… இது பாவம்…! என்பார்கள்.

இப்படி உணர்த்திக் கொண்டு அவ்வாறு உபதேசிப்பவனையே (தன்னையே) எண்ணும்படியும்… தன்னையே ஜெபித்திடும் நிலைகளுக்கும்… ஏற்படுத்திக் கொண்டு
1.குரு என்ற பெயரில் குருவின் சரீரத்தையே எண்ணி ஜெபித்திடும்
2.பிற ஆத்மாக்களின் எண்ணத்தின் செயல்பாட்டின் வலுவைத் தான் ஒருவனே பெற்று
3.தன்னை உயர்த்திக் கொள்ளச் செயல்படும் புறச் செயல்களில் “உருவ வழிபாடும் ஒன்று…”

“நான் என்பது எண்ணத்தின் செயல்பாடு..” என்றால் அந்தச் செயல்பாட்டின் உந்துதல் கொண்டு எதை வளர்ச்சிப்படுத்துதல் வேண்டும்…?

பழி தீர்க்கும் உணர்வு கொண்டு மற்ற ஆன்மாக்களைத் தன்னுடன் இணைக்கும் செயலாக (மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்யும் சில சாமியார்கள்) தன் எண்ணத்தின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு உலவிடும் ஆவி ஆத்மாக்களின் தன்மைகளையும்… இறந்தபின் அதன் தன்மைகளையும் பல முறை விளக்கி வந்துள்ளேன்.

உடலுடன் உள்ள பொழுதே சரீர பக்தியெனும் போர்வையில் தான் கொண்ட எண்ணத்தையே ஊட்டி
1.தன் சரீர பிம்பத்தையே… தன் உருவத்தை எண்ணி ஜெபிப்போரிடம் பதிவு நிலைப்படுத்திக் கொண்டு
2.தன் ஆன்மாவிற்குப் பிற ஆன்மாக்களையும் அடிமையாக்கிக் கொண்டு
3.உபதேசிகன் ஒருவன் தன்னை உயர்த்திடும் செயல்… அன்றைய “பாஷாண்டகம்..!”
4.அந்த எண்ணத்தின் செயல்பாட்டில் இரு விதம் உண்டு.

பிறிதொன்றின் ஈர்ப்பில் ஒன்றுவது ஒன்று… மற்றொன்று தன் உயிராத்ம சக்தியை வலுக்கூட்டும் “தன் நல வளர்ப்பு…”

நான் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் பிறிதொருவன் சக்தியை ஈர்த்துக் கொண்டு தனக்களித்துத் தான் வளர்வது என்ற தன் எண்ணம் தன்னுள் வளர்ந்து விட்டால் அந்த எண்ண வளர்ச்சியின் முதிர்வே சூட்சமப் பொருள் பதிந்த பாஷாண்டகமாம்.

1.தன் ஆன்மாவைத் தான் வளர்க்க…
2.உயிர் கொண்ட உடலே கருவிகளாக..
3.உணர்வு கொண்ட தியானத்தின் வழியாக…
4.எண்ணத்தின் செயல்பாடே நான் என்று உணரும் பொழுது…
5.இரு விதச் செயல் நிலைகளை ஆங்கு தெளிந்து கொண்டால்
6.நான் என்பது உடலா…?
7.நான் என்பது உயிரா…?
8.நான் என்பது உணர்வா…?
9.நான் என்பது எண்ணமா…? ஆத்மாவா…? என்ற வினாக்களுக்கும்
10.தன்னுள் தெளிந்த தெளிவைப் பெற்றிடலாம்…!

ஆத்ம முலாமின் வலுவை வலுவாக்கிக் கொண்டு
1.“தான்..” என்பதே ஆத்மாவாக உயிருடன் ஒன்றியே.. உயர் நிலை பெற்றே…
2.எண்ணத்தின் செயல்பாட்டில் நானும் வேண்டுமப்பா…!

ஒவ்வொரு உயிராத்மாவும்… ஒன்றுடன் ஒன்று ஒன்றி…!
1.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றுடன் ஒன்றியே பல வளர்ந்து… சக்தி ஈர்த்தல்…! என்று கூறியதிலும்
2.அதற்குள் இருக்கும் உண்மைகளை அறிந்துணர்ந்து கொண்டால்
3.தன் உயிராத்மாவின் சுய வளர்ச்சி நிலை… “மிக மிகத் தெளிவு பெறும்…!”

Leave a Reply