உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கிவிடக் கூடாது

உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கிவிடக் கூடாது

 

நாம் கற்ற கல்வி இந்த உடலுக்கல்ல. நாம் எதைக் கற்றாலும் உலகை அறிந்து கொள்ள உதவும்… இந்த ஆறாவது அறிவு அல்ல…! மெய் ஞானத்தின் உணர்வு கொண்டு தான் கற்ற கல்வியையும் சீராக்க முடியும்.

1.கற்றுணர்ந்தோர் அனைவரும் கரையேறுவதில்லை
2.அவர்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலையும் இல்லை.
3.கற்றவர்கள் பெரும்பகுதி மனக்குழப்பமும் சிந்தனை குறைந்தும் உள்ளனர்.

உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பொருள் தேடும் நிலைகளுக்குக் கற்ற கல்வியைப் பயன்படுத்துகின்றார்களே தவிர அந்தக் கல்வியின் நிலைகளில் வாழும் வாழ்க்கையைப் பண்படுத்த முடியவில்லை.

தேடிய செல்வம் சிறிதாக இருப்பினும் அதைப் பக்குவத்துடன் காத்து… பகைமை உணர்வு உடலுக்குள் சேராது அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வளர்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

1.ஆக… வெறும் கல்வி என்பது ஏட்டுச் சுரைக்காய் தான்.
2.கல்வி கற்றாலும் இந்த மெய் ஞானத்துடன் ஒன்றி மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலை வேண்டும்.

மனித உடலை உருவாக்கியது உயிர் தான். மனிதான பின் ஆறாவது அறிவை உருவாக்கியதும் உயிர் தான். இந்த ஆறாவது அறிவின் தன்மையால் தான் உயிரைப் போல் உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக நாம் வளர்க்கும் நிலை பெற முடியும்.

ஆகவே இதை நாம் சீராகப் பயன்படுத்துவோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் ஏங்கித் தியானியுங்கள்.

குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெறவேண்டும்,.. குழந்தைகள் ஞானிகளாக வளர வேண்டும்… விவசாயம் செழிக்க வேண்டும்… வியாபாரம் பெருகி எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் நலம் பெறவேண்டும்…! என்று நீங்கள் இப்படித் தியானித்துப் பாருங்கள்.

1.அமர்ந்த இடத்தில் வீட்டிலிருந்தே இவ்வாறு தியானித்து
2.எல்லா இடங்களுக்கும் அந்த அருள் சக்திகளைப் பரவச் செய்ய முடியும்… அந்த அலைகள் அங்கே படரும்
3.அதை நுகரும் மற்றவர்களுக்கும் சிந்திக்கும் ஆற்றல் வரும்.
4.உங்கள் வாழ்க்கையை உயர்த்தவும் முடியும்.
5.இருளை அகற்றும் நிலையும் பண்படும் உணர்வுகளும் நமக்குள் ஒன்றுபட்டு வாழும் அணுக்களும் நம் உடலில் வளரும்.

ஆகவே… இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நடசத்திரத்துடன் இணைந்து வாழ முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.

1.எந்த நிமிடம்… எந்த நிலைகள்… எதுவாக இருந்தாலும்… உடலை விட்டு உயிர் சென்றால்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.

மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டியிருக்கும்.

ஆகவே அதிலிருந்து விடுபட்டு அருள் உணர்வைப் பெருக்கி அருள் வாழ்க்கை வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு பெற்று என்றுமே ஏகாந்த நிலையை அடைந்திட “எம்முடைய அருளாசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்….”

Leave a Reply