கூட்டுத் தியானத்தின் மிக முக்கியமான பலன்

கூட்டுத் தியானத்தின் மிக முக்கியமான பலன்

 

நாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் ஒன்று சேர்த்த உணர்வு கொண்டு வெளிப்படுத்துகின்றோம்.
1.எல்லோருடைய செவிகளிலும் இந்த உணர்வின் ஒலிகள் படுகின்றது
2.அந்த உணர்வுகள் கண்களால் கவரப்படுகின்றது… அதே சமயத்தில் உயிரிலே மோதுகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.

அந்த அருள் சக்தியைப் பெற்று “எல்லோரும் பெற வேண்டும்…” என்று அதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளை மாற்றும் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

கூட்டுத் தியானத்தின் மூலம் இந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது பூமியில் உள்ள காற்று மண்டலத்திலிம் இது அடர்த்தியாகப் பரவுகின்றது.

உதாரணமாக ஒரு நோயாளியை நீங்கள் பார்க்க நேர்ந்தாலும் அடுத்தகணம் ஆத்ம சுத்தி செய்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து… நோயிலிருந்து விடுபட்டு அவர்கள் குடும்பமும் தொழிலும் நலமாக வேண்டும்…! என்று சொல்லுங்கள்.

இப்படிச் சொல்லப்படும் பொழுது அவர்கள் நோய்களை மாற்றியமைக்கக் கூடிய திறனும் உங்களுக்குக் கிடைக்கின்றது. அவர்கள் நோய் உங்களுக்குள் வராது தடுக்கும் சக்தியாகவும் உங்களுக்குள் இது வருகின்றது.

ஏனென்றால் பிறர் படும் துயரங்கள் வேதனைகளை எல்லாம் நாம் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதே வேதனைப்படும் அணுக்களை நமக்குள்ளும் வளர்த்து விடுகின்றது. அதனால் நம் உடலிலும் நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.

கோபப்படுவோரை அடிக்கடி உற்று நோக்கினால் அந்த உணர்வுகள் நமக்குள் இரத்தக் கொதிப்பாக மாற்றி விடுகின்றது. ஆஸ்த்மா நோயால் அவதிப்படுவோர் சொல்வதைக் கேட்டு உணர்ந்தால் நமக்குள்ளும் அந்த ஆஸ்மா நோய் வந்துவிடுகின்றது.

சர்க்கரைச் சத்து உள்ளோர் நிலைகளைக் கேட்டறிந்தால் அவர்களிடம் பேச நேர்ந்தால் அதே சர்க்கரை நோய் உங்களுக்குள் மாறி வந்து விடுகின்றது.

வாத நோய் முடக்குவாதம் போன்றவர் உணர்வுகளைக் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்பட்டு அதே தீமை இங்கேயும் வந்து விடுகின்றது.

அதைப் போன்ற தீமைகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் அவசியம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

பின்…
1.நாம் மொத்தமாக ஒரே உணர்வுடன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் பெற வேண்டும் என்று சேர்ந்து சொல்லும் பொழுது
3.எல்லோர் செவிகளில் பட்டு இந்த உணர்வலைகள் எல்லோர் உயிர்களிலும் மோதப்பட்டு
4.உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது தீமைகளைப் போக்கிடும் சக்திகளாக நாம் பரப்ப முடிகின்றது.

இப்படிப் பரப்பபடும் இந்த உணர்வலைகள் காற்று மண்டலத்தில் பரவும் போது அந்த உணர்வுகளை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் பெறலாம்.

அந்த வலுக் கொண்ட உணர்வுகள் மூலம்
1.பிறருடைய தீமைகளை போக்கும் வல்லமையும் நீங்கள் பெறலாம்.
2.பிறருடைய தீமைகள் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் அந்த ஆற்றலையும் நீங்கள் பெறலாம்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாருடைய நோய்களையும் நீங்கள் கவர்ந்து விடாதீர்கள். அவர்கள் நோயைப் போக்கிடும் சக்தியாகவே நீங்கள் செயல்படுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… குடும்பத்தில் பற்றுடன் பாசத்துடன் பண்புடன் வளர வேண்டும்… அவர்கள் உணர்வுகள் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்… தொழில்கள் வளம் பெற வேண்டும்…! என்று நாம் இப்படித்தான் எண்ணிச் செயல்படுதல் வேண்டும்

மாறாக… பிறரைப் பழித்துப் பேசுவதோ தவறு செய்வோரை உற்று நோக்கித் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான் என்ற உணர்வுகளை அடிக்கடி எடுத்துக் கொண்டாலோ… நாமும் தவறு செய்வோராக மாறி விடுகின்றோம்.

அந்தத் தவறு செய்வோர் உணர்வுகள் நமக்குள் வராது அருள் உணர்வு கொண்டு நாம் தூய்மைப்படுத்தி அவர்களும் தவறிலிருந்து விடுபட்டு மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணி விட்டால்
2.அந்த மனிதனை நாம் எண்ணுவதில்லை…. அந்த உயிரை ஆண்டவனாக எண்ணுகின்றோம்.
3.அவனால் உருவாக்கப்பட்ட நல்ல குணங்களைத் தெய்வமாக எண்ணுகின்றோம்.

நல்லது எண்ணும் பொழுது நல்லது செய்கின்றோம். தக்க சமயத்தில் நண்பன் நமக்கு நன்மை செய்தான் என்றால் அவனைத் தெய்வமாகக் கருதுகின்றோம்.

ஆனால் தொழிலிலோ மற்ற நிலைகளிலோ நண்பருக்குள் குறையானால் துரோகி என்று பழித்துப் பேசி ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகின்றது.

இருவருடைய உணர்வும் இங்கே தான் உள்ளது…!

நல்லது செய்கிறான் என்று எண்ணினால் நல்லவனாக மாற்றுகின்றது. தீமை செய்கிறான் என்ற உணர்வாக மாற்றினால் இருவருடைய உணர்விலும் பகையாகி விடுகின்றது.

நண்பன் எதிரியாக மாறுகின்றான். எதிரியான உணர்வே வளர்க்கின்றது. நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற பகைமையை அகற்றிட ஒவ்வொரு நொடியிலும் அருள் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் அது விஷ்ணு தனுசு. எல்லாவற்றிலும் முழுமையாக அந்த அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் வேகா நிலை அடைகின்றோம். இதைத் தான் தனுசுகோடி என்று சொல்வது.

1.நம் உடலில் எல்லா குணங்களிலும் மற்ற எல்லாருடைய உணர்வுகளிலும்
2.அருள் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக மாற்றிடும் போது எல்லா குணங்களையும் மாற்றி
3.உயிருடன் ஒன்றிடச் செய்யும் போது ஒன்று என்ற நிலையை அடைகின்றது.

அதை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு). அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தான் உங்களிலே தொடர்ந்து பாய்ச்சுகின்றேன்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தீமையிலிருந்து விடுபட்டுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இருளை அகற்றும் வல்லமை பெற வேண்டும்.

Leave a Reply