அரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்

அரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்

 

பல கோடிச் சரீரங்களின் வளர்ச்சியில் மனிதனாக உருவாக்கிய நிலைகள் வரப்படும் பொழுது நாம் எண்ணியது எதுவோ அது “பிரம்மகுருவாக” மாற்றுகின்றது.

அகஸ்தியன் தன் உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலை நுகர்ந்து நஞ்சினை வென்றிடும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்து கொண்டதனால்… அவன் எந்த உண்மையின் உணர்வைக் கவர்ந்து கொண்டானோ அது பிரம்மகுருவாக இருந்து ஒளியின் சரீரமாக அவனை உருவாக்கியது.

அவன் தனக்குள் எடுத்துக் கொண்ட தீமைகளை அகற்றிடும் அருள் சக்திகளைத் தன் மனைவிக்கும் பெறச் செய்து தனக்குள் இணைத்துக் கொண்டான்.

1.அவர்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ்ந்து…
2.நளாயினி போன்று கணவன் மனைவியை மதிப்பதும் மனைவி கணவனை மதிப்பதும்
3.சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் என்ற நிலையாக இரு உணர்வும் ஒன்றி வாழ்ந்த பின்
4.இரு உயிரும் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது…
5.துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.

கணவனும் மனைவியும் இப்படி இரண்டறக் கலந்து… இன்னொரு பிறவிக்குப் போகாது… தன்னுடன் இணைத்துக் கொண்டு… உயிர் எப்படியோ அதைப் போல் உணர்வின் அணுக்களை உருவாக்கிப் “பிறவி இல்லா நிலைகள் அடைவது தான் கடைசி நிலை…!” என்று இராமாயணக் காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

நுகரும் உணர்வுகள் எவ்வாறு எண்ணமாகின்றது…? என்றும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு உருவாக்குகிறது… உருவாகிறது…? என்றும் உருவத்தை அமைத்து
1.நாம் கவரும் நிலைகளும் நாம் நுகர்ந்த உணர்வுகளும் உடலுக்குள் சென்ற பின்
2.அதனால் உடலுக்குள் மாற்றங்களும் போர் முறைகளும் அது எவ்வாறு வருகிறது என்றும்
3.நம் உடலுக்குள் எவ்வாறு போர் முறைகள் நடக்கிறது என்றும்
4.அந்த உணர்வுகளால் நமக்குள் எப்படித் தீமைகள் விளைவிக்கிறது…? என்றும்
5.இதிலிருந்து நாம் எவ்வாறு விடுபட வேண்டும்…? என்ற நிலையையும் இராமாயணத்தில் சித்தரித்துக் காட்டினார்கள்.

சீதா… துருவ நட்சத்திரத்திலிருந்து மகிழ்ச்சி பெறும் உணர்வை (அந்தச் சத்தினை) நாம் நுகர்ந்தால் நமக்குள் பகைமை உணர்வை மாற்றிக் கல்யாணராமனாக மகிழ்ந்து வாழும் நிலைகளையும் நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் தன்மைகளும் வருகிறது.

1.அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்து (வசிஷ்டர்) கொண்டால்
2.அதனின் சுவை சீதா (சத்து) தனக்குள் அருந்ததியாக இருந்து
3.நம்மை என்றுமே பிறவி இல்லா நிலை என்ற நிலையை அடையச் செய்யும் அந்த அருள் சக்திகளை நாம் பெற முடியும்.

அத்தகைய தகுதியை உங்களுக்குள் ஏற்படுத்தும் நிலையாகத் தான் அன்று அகஸ்தியன் கண்ட உணர்வின் உண்மைகளையும் அவனில் இருந்து வெளிப்பட்ட நஞ்சை வென்றிடும் உணர்வுகளையும் நீங்கள் பெற இந்த உபதேசம் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அதன் மூலம் இந்த உலகையும் உலக இயக்கத்தையும் உங்கள் உயிரின் இயக்கத்தையும் உடலுக்குள் அது எப்படி இயக்குகிறது என்ற நிலையும் நீங்கள் அறிய முடியும்.

அகண்ட அண்டத்தையும் பேரண்டத்தையும் உணர்ந்த அகஸ்தியன் அவனில் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
1.அகண்ட அண்டத்தில் விளையும் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்ய முடியும்
2.அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சான நிலைகளை வென்றிடும் உணர்வுகளையும் பெற முடியும்.

இந்நேரம் வரை உங்களுக்குள் பதிவாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
1.அந்த உணர்வை எடுத்தால்… அது சீதாராமனாக உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் நிலையாக
2.இணைந்து வாழும் சக்தியாக (அரவணைக்கும் சக்தி)
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாகப் பெற முடியும்.

அதை நீங்கள் ஒவ்வொருவரும் பெறவேண்டும்… உங்களுக்குள் அந்த அரும் பெரும் சக்திகள் விளைந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply