குருநாதர் காட்டிய அருள் வழியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் “நமது” என்று வருகின்றது

குருநாதர் காட்டிய அருள் வழியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் “நமது” என்று வருகின்றது

 

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் சரி… அதை வைத்து இந்த உடலை நாம் அழகு படுத்தினாலும் சரி…
1.இந்த உடலை நாம் காக்கப் போவதில்லை… இது நிலைத்திருக்கப் போவதும் இல்லை… இது நிலையனதும் இல்லை.
2.நிலையாக இல்லாத இந்த உடலுக்கும் நிலையற்ற சொத்துக்கும் தான் அது பயன்படுகிறது.

இதைக் காக்க எவரால் முடியும்…!

1.சொத்தை வைத்து என் பிள்ளையைக் காப்பேன்…! என்று யாராலும் உறுதி கூற முடியுமா..?
2.தேடிய சொத்தை என் பையன் வைத்துக் காப்பான் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா…?

அப்படி வைத்திருந்தாலும் வேதனையைத் தான் உருவாக்கும் நிலை வருகின்றது. செல்வத்தைத் தேடினாலும் பையன் குறும்புத்தனம் செய்தான் என்றால் “இப்படிச் செய்கிறானே…!” என்ற வேதனையை உங்களுக்குள் வளர்த்து உடலை விட்டுச் சென்ற பின் அவன் உடலுக்குள் சென்று அவனை அழிக்கத்தான் முடியுமே தவிர… அவனைக் காக்க முடியாது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மனிதன் விடுபட வேண்டும் என்பதற்குத் தான் முன்னோர்களை விண் செலுத்தும் தத்துவத்தைத் தெளிவாகக் கொடுத்தார்கள் ஞானிகள்.

ஆகவே… நம்மைச் சார்ந்த முன்னோர் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண்ணுக்குச் செலுத்தி அவர்களை முதலில் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

ஒரு தேரை இழுக்கிறோம் என்றால் ஒருவரால் இழுக்க முடியாது. பலரும் சேர்ந்து தான் அந்தத் தேரை இழுக்க வேண்டும்.

1.கூட்டுத் தியானத்தின் மூலம் பலரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் சக்தியை நுகர்ந்து வலுவாக்கிக் கொண்டு
2.நம் மூதாதையர்கள் ஆன்மாக்களை (இதற்கு முன் நம் செய்யத் தவறியதை) முறைப்படி நாம் விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலமே விஷத் தன்மையாகி விட்டது. அதை நுகரும் போது விஷ அணுக்கள் நமக்குள் உருவாக்கப்பட்டு… சிந்தித்துச் செயல்படும் திறன் இழக்கப்பட்டு… அசுர உணர்வு கொண்ட கொடூர செயல்களைச் செய்யும் தன்மை இன்று உருப்பெற்று வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

உயிர் மனிதனாக நம்மை உருவாக்கிய பின்… பௌர்ணமி எப்படி ஒளியாக… முழுமையாகப் பிரகாசிக்கின்றதோ அதைப் போல் அறிந்திடும் அறிவாற்றல் பெற்றவர்கள் தான் நாம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒளியின் சரீரமான அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை உபதேச வாயிலாக உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது… நினைவு கொண்டு நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீங்களே அகற்றும் சக்தியும் அருள் ஒளியை வளர்க்கும் சக்தியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

1.அந்த நிலை பெறச் செய்வதற்கே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
2,இல்லை… நமது குரு…!
3.ஏனென்றால் அவர் காட்டிய அருள் வழியை நீங்கள் ஏற்றுக் கொண்டால் “நமது” என்று வருகின்றது.
4.ஆனால் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை இல்லை என்றால் “எனது குரு…” என்று தான் வருகிறது.

அவர் காட்டிய முறைப்படி அந்த அண்டத்தின் சக்தியை இந்தப் பிண்டத்தில் சேர்த்து உணர்வின் சக்தி ஒளியாக ஆக்கும் சக்தியை உங்களுக்குள் பதியச் செய்கிறேன் (ஞானகுரு).
1.எமது குரு (ஈஸ்வரபட்டர்) ஒளியின் சரீரமாக இருக்கும் அவர் வழியில் செல்லப்படும் பொழுது
2.இந்த முறைபப்டி செய்தால் நமது குரு என்று வருகிறது.

இதன் வழியில் சென்றால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை உங்கள் எண்ணத்தால் போக்க முடியும்.

ஏனென்றால் இருளை நீக்கும் அந்த ஒளியின் தன்மையைப் பெற்று ஒளியின் சரீரமாக ஆக வேண்டும். பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்…!

Leave a Reply