ஒரு மண்டலம்… “48 நாள்…” என்ற தியானத்தை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதை நாம் அறிந்துள்ளோமா…? – ஈஸ்வரபட்டர்

ஒரு மண்டலம்… “48 நாள்…” என்ற தியானத்தை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதை நாம் அறிந்துள்ளோமா…? – ஈஸ்வரபட்டர்

 

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள 48 மண்டலங்களிலிருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.

இந்தப் பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இந்தப் பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது. மனித ஆத்மாக்கள் அந்த 48 மண்டலங்களிலும் இல்லை.
1.ஆனால் இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான்
2.இந்தப் பூமியில் உள்ள மனிதர்களின் நிலையெல்லாமே உள்ளது.

நமக்கு முதலில் இருந்த சித்தர்களும் ஞானிகளும் கடும் தவமிருந்த நிலையில்
1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மணடலம் என்ற 48 நாளைத் தியானத்திற்குகந்ததாக எடுத்து
3.பேரண்டத்தின் பல உண்மைகளை அந்த ஜெபத்தினால் அறிந்தனர்
4.அதன் வழியில் வந்தது தான் நாம் இன்று சொல்லும் ஒரு மண்டலம் 48 நாள் என்ற முறையெல்லாம்.

நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்குப் புரிந்திடும்.

கண்ணில் நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுதே வானத்தில் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைக் காண்கின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியைக் காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன. நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்களும் உள்ளன.

புள்ளியாகத் தெரியும் அத்தகைய மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இந்த மனித உடல் பெற்ற ஜீவாத்மாக்கள் உள்ளன. பல மண்டலங்களில் நம்மைக் காட்டிலும் திறன் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.

ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த இந்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை,

இந்த உலகிலே நாம் மனிதனாகப் பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றோம். அந்தச் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் வழியில் ஜெபத்தின் அருளைப் பெற்று எண்ணத்தையும் நினைவையும் தூய்மையாக்கி நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தியாக்கிடல் வேண்டும்,

இந்த உலகில் உதித்துள்ள மனித உயிரணுக்களுக்கெல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையில்
1.நாம் வேறல்ல இந்த உலகம் வேறல்ல
2.இந்த உலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல
3.தனித்து நிற்பவை எவையுமில்லை
4.எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலந்துள்ள நாம்
5.நம் உயிராத்மாவைப் பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
6.இந்த உலகத்தின் உண்மையை மட்டுமல்ல சகல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.

ஏனென்றால் உங்கள் எல்லோருக்குமே அந்தத் தகுதி உண்டு…!

1.படைத்தவனின் படைப்பான நீங்கள்
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக… படைப்பின் படைப்பாக
3.படைக்கும் நிலைக்கு உருத் தாருங்கள்…!

Leave a Reply