“எல்லாம் அவன் செயல்” என்பதன் உட்பொருள் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“எல்லாம் அவன் செயல்” என்பதன் உட்பொருள் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எல்லாவற்றுடனும் எல்லாமாய்க் கலந்துள்ள அவ் எம்பெருமானின் நிலையில்
1.எல்லாச் செயலும் அவனால் நடக்கப் பெற்று செயல் கொள்ளக் கூடாதா…?
2.இவ் ஏற்றத் தாழ்வும் எண்ண மாற்றமும் எதற்கப்பா…?
3.எல்லாமும் அவனே…! என்றிருக்க எண்ணிய நிலை ஏன் நடப்பதில்லை…?
4.எண்ணமும் அவனே… செயலும் அவனே… எண்ணமும் செயலும் அவனாய் இருக்க
5.அவனே ஏன் செயல் கொள்ளலாகாது…? என்ற எண்ணம் “நமக்குள்ளே…!”

அனைத்துமே பரம்பொருள்தான். அப் பரம்பொருளின் பொருளாய் உள்ள அனைத்திற்கும் ஏற்றத்தாழ்வு நிலை ஏன்…? அன்பாயும் ஆசையுடனும் அறநெறியுடனும் வாழ்கின்றனர் ஒரு சிலர். வாழ்க்கையையே இன்னலில் மூழ்கவிட்டு நரகமாகவும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.

எல்லாரும் எல்லாமுமாய்க் கலந்துள்ள அப் பரம்பொருளுக்கு ஏன் இம்மாற்ற நிலை…?

பரம்பொருளினால் படைக்கப் பெற்ற எல்லாப் பரம்பொருளுமே அவன் படைப்பில் சக்தி பெறச் செய்கின்றான். அப்பரம் பொருளின் சக்தியில் சக்தி பெற்று… வழித்தொடர் பெறும் பரம் பொருள்கள்… அப்பரம் பொருளிடமே ஐக்கியப்பட்டு… அதன் தொடர்ச்சியில் பல பரம்பொருள்கள் சுழன்று கொண்டே செயல் கொள்கின்றன.

உயிரணுவாய் உதித்து பல மாற்றங்களில் அவ்வுயிரணு செயல்பட்டு அதன் தொடர்ச்சியிலிருந்து உயிர் ஜீவிதம் பெற்று இஜ்ஜீவிதத்தின் தொடரினால் ஜீவ ஆத்மாவாய் ஜீவ சக்தியுற்று இவ் ஆத்மா நிலைபெற்று ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவ்வாத்ம நிலையில் ஏழு சந்தர்ப்பங்களில்தான் அவ்வாத்மாவினால் நற்சக்தியான சூட்சுமம் கொள்ளும் வழித்தொடரை அடைய முடியும்.

உயிர் ஆத்மா பெற்ற நிலையிலிருந்து சேமிக்கும் அமிலத்தின் தொடர் இவ் ஏழு சந்தர்ப்பத்தைப் பெறும் வழித்தொடர் கொள்ளும் அமில சக்தியை…
1.இவ் ஏழு தொடரில் ஞானத் தொடர் வழியை அறிந்து
2.அத்தொடரையே தொடராக்கி சக்தி கொண்டிட்டால் அந்நிலையில் சித்து நிலை பெற்று
3.இவ்வாத்மாவைச் செயலாக்கும் சக்தியாய் மண்டல உருப்பெறும் நிலை கொண்டு
4.ஒவ்வோர் உயிராத்மாவின் வட்டத்திலும் ஒவ்வொரு மண்டலமாகிடும் பக்குவம் பெற்று
5.மண்டலத்துடனே வளர்ச்சியுற்று அம்மண்டலமே உலகாய்ச் சுழன்று
6.பல உயிரணுக்களை ஈர்த்து வளர விட்டுச் செயல் கொண்டிட முடியும்.

இவ்வுலகில் மட்டுமல்ல பலகோடி மண்டலங்களும் இப்பால் வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள எண்ணிலடங்கா ஜீவசக்திகளும் அப்பரம் பொருளினால் படரவிட்டவைதான்.
1.கொசுவாயும் சாக்கடைத் திரவமாயும் உள்ளவையும் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான்
2.ஜோதியுடன் ஜோதியாய் எரிந்திடும் கற்பூரமும் அப்பரம் பொருளின் ஐக்கியம்தான்.

அப்பரம்பொருளான அவ் ஆதி சக்தி அனுப்பிடும் உயிரணுக்களில் அவை அவை எடுக்கும் சுவாச சக்தியைக் கொண்டு தான் அவரவர்களுக்கு அமையும் வாழ்க்கை நிலையும்… செயல் முறையும்… வந்திடும்.

விருந்தில் உணவு படைக்கின்றார்கள். பல பதார்த்தங்கள் இருந்தாலும் நம் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசம் எதை ஈர்த்து நம் நாக்கு ருசிப்படுத்துகின்றதோ அவ்வுணவைத்தான் நம் எண்ணம் விரும்புகின்றது.

அதைப்போல் நாம் எடுக்கும் அமில சக்திக்குகந்த சுவாசத்தைக் கொண்டுதான் ஒவ்வோர் உயிராத்மாவிற்கும் அப்பரம் பொருளின் ஆசியும் கிட்டுகின்றது.

மண்டலமாகவும் சுழல்வது உயிராத்மாதான்… புழுவாக நெளிவதும் இவ்வுயிராத்மாதான். பரமாத்மாவின் வழி பெற்று வந்த இவ்வுயிரணு எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பதுதான் அனைத்துமே…!

மண்டலமாய்ச் சுழன்றாலும் மண்டலத்திற்கும் எண்ணமுண்டு சப்தரிஷிக்கும் எண்ணமுண்டு.

பரமாத்மாவின் நிலையுடன் ஐக்கியப்படும் நிலையென்ன…?

சப்தரிஷியாய் சகலத்திலும் ஒளிர்ந்து ஒளியாய்ச் செயல் கொண்டு சூரியனாய் ஒளி பெற்றாலும் அச் சூரியனுக்கும் “தான்…!” என்ற நிலை வந்து விட்டால் கோடி கோடி கோடி ஆண்டாகப் பெற்ற சக்தியும் இழக்க நேரிடும்.

மனித ஆத்மாவாய் இருந்துதான் ஒளியுடன் கலந்திட முடியும். அவ்வொளியின் ஈர்ப்பினால் மண்டலமாய்ச் சுழன்று செயல் கொண்டிட முடியும்.
1.செயலிலேயே வழித்தொடர் பெற்றுச் சூரியனாயும்
2.சூரியனுக்கு மேல் சக்தி பெற்ற பல சூரியனாயும் சுழன்றிட முடியும்.

அனைத்தையுமே செயல்படுத்திடும் அப்பரம்பொருளிடம் ஐக்கியப்படும் சக்தியைப் பெற்றிடும் சக்தியை அப் பரம்பொருளான அவ் ஆதிசக்திக்குத்தான் தெரிந்திடும் அனைத்துமே.

அவரவர்களுக்கு அளிக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டு பல கோடி ஆண்டுகள் வளர்ச்சியுறல் வேண்டும். இம்மனித ஆத்ம உடலிலேயே வளர்ச்சி பெற்றால்தான் நம் ஆத்மா ஒளியுடன் கலக்க முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் மிருக ஜெந்துவாகி மிருகத்திலிருந்து கொசுவாய் புழுவாய் பிறிதொரு உலக மாற்றத்திலிருந்து இவ்வுயிரணுக்கள் உயிராத்மா நிலை பெற எண்ணிலடங்கா ஆண்டுகளாகலாம்.

அச் சந்தர்ப்பத்தில் நம் ஆத்மா எய்தும் நிலையைக் கொண்டுதான் நம் நிலை உயர்ந்திட முடியும். இதனை உணர்ந்தே…
1.பரம்பொருள் என்பது யாது…?
2.அப்பரம்பொருளுக்கென்ன ஏற்றத்தாழ்வு…? (ஓரவஞ்சனை)
3.ஆண்டவன் அளித்த கஷ்டம்…! என்று இந்த வாழ்க்கையை எண்ணாமல்
4.இன்று வாழும் நம் ஆத்மாவை நல் ஞானம் பெறும் நிலையை எய்திட
5.நம் ஆத்ம நிலை எப்படிச் செயல் கொண்டிடல் வேண்டும்…?
6.எப்படி நம் வாழ்க்கை முறை அமைய வேண்டும்…? என்பதனை உணர்ந்து
7.நம் சுவாசம் சத்தியத்துடன் கலக்கும் நிலையினைப் பெறுதல் வேண்டும்.

அதைப் பெறுவதற்குத் தான் இந்த உபதேசமே…!

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் அவ்வாத்மாவின் உடலில் பல உயிரணுக்கள் உள்ளன. எவ்வாத்மாவும் தனித்து வாழவில்லை என்பதனை முதல் பாடமாக உணரல் வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் உள்ள உயிரணுக்கள் அவ்வாத்மாவின் எண்ணத்தைப் பல திசைகளில் மாற்றிச் சென்று வாழச் செயல்படுத்துகின்றது.

அவ்வுயிரணுக்களின் ஆசைக்கும் அதனுடைய தூண்டுதலின் சோர்வுக்கும் நம்மை அறியாமலே நமக்குத் தெரியாமலே அடிமைப்பட்டு சிக்குண்டுள்ளோம்.

நம் ஆத்மா ஞானம் பெற்று ஒளி பெறும் நிலையினால் நம் உடலில் குடி புகுந்துள்ள பிற உயிர் அணுக்களுக்கும் நம்மால் விமோசனம் கிட்டும்.
1.நம் உடலிலுள்ள அமிலத்தை ஞானத்தின் அமிலமாக்கி
2.பரமாத்மாவின் சொத்துத் தான் நாம் என்பதனை உணர்ந்து
3.தீய எண்ணப் பேய்க்கு அடிமை கொண்டிடாமல் நம் ஆத்மா செயல்பட்டால்
4.நம்முள் உள்ள பல கோடி உயிரணுக்களும் இவ்வெண்ணத் தொடரின் சக்தியினால் ஒளிர்ந்திடும்.

ஒவ்வோர் உடலிலிருந்தும் ஒவ்வோர் ஆத்மா பிரியும் பொழுதும் அவ்வுடலுடன் கூடிய உயிரணுக்கள் அவ்வுடலில் எடுத்த சுவாசத்தின் வழித்தொடர் கொண்டே இக்காற்றினில் படர்ந்து சுற்றுகின்றது.

இப்பொழுது நாம் வாழும் இவ்வாழ்க்கை உடலில் உள்ள உயிரணுக்கள் இவ்வுடல் காலத்தில் மட்டும் நம் உடலில் ஏறவில்லை.

ஒவ்வோர் உயிரணுக்களுக்கும் எண்ணமுண்டு… சுவாசமுண்டு அமில சக்தியுண்டு…!
1.மனித ஆத்மாவின் உடலில் உள்ள இவ்வுயிரணுக்களினால்
2.இம்மனிதனின் எண்ணத்தை அதற்குகந்த ஆசையின் நிலைக்கொப்பத் திசை திருப்பிட முடிந்திடும்
3.நம் ஆத்மா செயல் கொள்ள முதலில் நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம் நம் வசப்படுத்திடல் வேண்டும்.

ஓம் ஈஸ்வரா… என்ற எண்ணத்துடன் புருவ மத்தியில் எண்ணி ரிஷிகள் ஞானியர்கள் வெளிப்படுத்தும் உணர்வலைகளை அங்கே ஈர்க்கும் பழக்கம் வந்து விட்டால் உயிருடன் இணையச் செய்ய முடியும். ஜோதி நிலை காண முடியும்… ஒளியுடன் ஒளியாகக் கலக்கலாம்.

Leave a Reply