இந்தக் காற்று மண்டலமே விஷமாக உள்ளதால் புதிய புதிய வியாதிகள் தாக்கத் தான் செய்யும் – ஈஸ்வரபட்டர்

polluted earth

இந்தக் காற்று மண்டலமே விஷமாக உள்ளதால் புதிய புதிய வியாதிகள் தாக்கத் தான் செய்யும் – ஈஸ்வரபட்டர்

 

சூரியனின் அணு சக்தியில்லாமல் இவ்வுலகில் உள்ள எந்தச் சக்தியும் இயங்கிட முடியாது. சூரியனிலிருந்து இப்பூமிக்கு வந்து படரும் சக்தியைக் கொண்டுதான் அனைத்து சக்தியுமே இன்று இயங்குகின்றன.

அதன் தொடரில் இருந்துதான் இன்றைய மனிதனால் செயலாக்கிய பல மின் அணுக்கதிர்களின் செயல் எல்லாமே.

1.இக்காற்றுடன் கலந்துள்ள சூரியனின் அணு சக்தியை
2.இன்று மனிதன் தன் செயற்கையின் நிலைக்காகப் பல அணுக்கதிர்களைப் பிரித்து எடுப்பதினால்
3.இக்காற்று மண்டலமே கடும் விஷமாகச் சுற்றிக் கொண்டுள்ளது.

மின்சாரம் எடுப்பதற்காக இக்காற்றில் கலந்துள்ள காந்த சக்திகளை ஈர்த்து எடுக்கின்றான். அதைப் போல் பல நிலைகளுக்காக இவ்வணு சக்திகளை காற்றிலிருந்து ஈர்த்து எடுக்கின்றார்கள்.

இன்றைய மனிதன் வாழ்வதற்குத் தானாகச் சூரியனில் இருந்து வரும் அணுப் பிளம்புகளைத் தன்னுள்ளேயே அச்சக்திதனைப் பெறும் வாய்ப்பினை இன்று வாழும் மனிதனே அதனைச் செயற்கை நிலைப்படுத்தி வாழப் பழகிக் கொண்டான்.

இனியும் அச்சூரியனின் சக்தியிலிருந்து மேன்மேலும் பல செயற்கை நிலைக்காக ஈர்த்தெடுத்து விஞ்ஞானம் கண்டே வாழ்ந்திட்டால் விஞ்ஞானத்தைத் தாங்கும் நிலை மெய் ஞானம் கொண்ட இப்பூமியினால் முடிந்திடாதப்பா.

காற்றையே கடும் விஷமாக்கி விட்டான் சக்தியின் சக்தி பெற்ற இன்று வாழும் இம்மனிதன்.

1.இவன் செய்த இவ்வினையினால் வருவதுதான் புதிய புதிய வியாதிகள்
2.இப்புதிய புதிய வியாதிகளுக்கு அதன் சக்திக்கும் மேம்பட்ட சக்தியைக் கொண்ட மருந்தையும்
3.இவன் சக்தி கொண்டு புதிய புதிய நிலைப்படுத்தித்தான் இவன் மருத்துவத்தில் இவனே கொண்டுவர வேண்டும்.

இன்று நாம் பெறும் சுவாசமே விஷ நிலைக்கொண்ட காற்றாக உள்ள பொழுது புதிய புதிய வியாதிகள் நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

மனிதனை மனிதனே அழித்து வாழும் நிலையில்தான் இன்றுள்ளார்கள் மனிதர்கள் எல்லாருமே.

ஆனால் இயற்கையுடன் கலந்து இயற்கையையே தெய்வமாகப் போற்றி இயற்கை அன்னைக்குச் சக்தி தந்த அச்சூரியனை தேவனாக்கி தெய்வமாக வாழ்ந்தார்கள் அன்று பல மக்கள்.

இன்று வாழும் நிலை எல்லாமே எப்படி இருக்கிறது என்றால்…
1.செயற்கைக்கு ஏங்கும்…
2.செயற்கையான மனமுடைய…
3.செயற்கையுடன் ஒன்றிய
4.செல்வந்த வாழ்க்கைதான் செழித்த வாழ்க்கை என்ற மன நிலையிலேயே
5.இவ்வுலகமே தன்னைத்தானே விஷமாக்கி
6.இவ்வுலகையும் விஷமாக்கிச் சுழன்று கொண்டே உள்ளார்கள்

இச்சுழற்சியிலிருந்து தப்புவதற்கு எந்நிலையும் யாரும் நாடவில்லை. காலத்துடன் வழிப்படுத்தி வந்த வினை இன்றுள்ள வினை.

இதிலிருந்து மீளும் நிலையை ஏற்க வருபவர்க்கு நம் தியான நிலையின் மகத்துவ நிலை புரியும். இவ்வுலகில் படர்ந்துள்ள பல உண்மை சக்தியினையும் புரிந்துணர்ந்து வாழ்ந்திட முடியும்.

1.நல்லுணர்வைப் புகட்டுகின்றோம்
2.புகட்டத்தான் நம் சக்தியில் சக்தியுண்டு.

அவரவர்கள் ஏற்கும் நிலைகொண்டு தான் அவரவர்களுக்கும் அச்சக்தி நிலை பெறும் பாக்கியமும் உண்டு.

1.அச்சக்தியினை ஏற்போர்க்கும் வழி நடத்தி வந்திடுவோம்
2.எண்ண நிலையை மாற்றுவோருக்கு நல்நிலை பெற்றிட நமக்குச் சக்தி தந்த அச்சக்தி தேவனையே வணங்கி
3.அவர்கள் நிலையை நல் சக்தியாக்கிட நாமும் வணங்கிடுவோம்.

Leave a Reply