நாம் இட வேண்டிய ஆக்கினை…! (ஆக்ஞை)

akkinai sixth chakra

நாம் இட வேண்டிய ஆக்கினை…! (ஆக்ஞை)

உயர்ந்த உணர்வுகளை அகஸ்தியன் பெற்றான். அவன் பெற்ற வழியிலேயே தான் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம்.

ஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குத்தான் காடுகளுக்குள் அழைத்துச் சென்றார் நம் குருநாதர்.

1.காட்டிற்குள் அகஸ்தியன் போன இடங்களில்…
2.எங்கேயெல்லாம் அவன் உணர்வுகள் பதிவாகியிருக்கின்றதோ
3.அங்கெல்லாம் போகச் சொன்னார் குருநாதர்.

அவன் எடுத்துக் கொண்ட நிலைகள் பார்த்தால் மலை உச்சியில் உட்கார்ந்து இருக்கின்றான் அகஸ்தியன். அந்த இடத்தில் பார்த்தால் மேகங்களைக் கூட்டிக் குவித்து நீராக மேலே உச்சியிலே உருவாகிறது.

அதனால் தான் அகஸ்தியருக்குக் கையிலே கமண்டலத்தைக் கொடுத்துக் காண்பித்தார்கள். “முதலில் ஜீவ சக்தி ஆனது இது மிகவும் முக்கியம்…!”

அந்த மாதிரி இடங்களை எல்லாம் குருநாதர் காண்பித்ததனால் யாம் தெரிந்து கொண்டு அவ்வப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.
1.சொல்வதோடு மட்டுமல்ல… உங்களிடம் இந்த கவனத்தைப் பதிவு செய்து
2.அந்த அகஸ்தியன் நிலைக்கே உங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

அந்த அகஸ்தியன் பெற்ற வழிகளிலேயே இந்தக் காற்றிலிருந்து “நல்லதைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்திகளை நீங்கள் பெற வேண்டும்…”

அப்படிப் பெறக் கூடிய தகுதியை நீங்கள் பெறுவதற்காக வேண்டித்தான் அடிக்கடி இதை உபதேசிப்பது. எம்முடைய (ஞானகுரு) பிரார்த்தனையும் இது தான்.

ஏனென்றால்… இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… இந்த உடலுக்கு நாம் சொந்தமல்ல…
1.உயிரை நாம் சொந்தமாக்கிக் கொண்டே போக வேண்டும்.
2.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையாக
3.நாம் என்றும் ஒளியான நிலைகளைச் சொந்தமாக்க வேண்டும்… அது தான் முக்கியம்.

ஆகையினால் இதே மாதிரி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளையும் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பம் எது வந்தாலும்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டு
2.”இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நாம் ஆணையிட வேண்டும்.

 

Leave a Reply