நம் சித்தம் தெளிவாக வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

manrdra 100

நம் சித்தம் தெளிவாக வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
அழகான தடாகத்தில் அன்னப்பட்சி நீரில் நீந்துவதைப் போன்றும்… படகில் மனிதர்கள் அமர்ந்து செல்வதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
மனிதனுடைய ஞானம் “ஒன்றைப் பார்த்தவுடன்…” அதனைத் தன்னுடைய செயலுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சிந்தனையில் அதைச் செயலாக்குகின்றான்.

நீரில் மிதக்கக்கூடிய அன்னப்பட்சியின் நிலையைப் பார்த்துத் தானும் அதைப் போன்று செயல்படுத்திக் கொள்ளும் அமைப்பாக (படகை) உருவாக்குகின்றான்.
1.இப்படிப்பட்ட சிந்தனையின் செயலுக்கு வலுப்படுத்தும் மனிதர்கள்
2.வாழ்க்கைத் தொடரில் வெற்றி பெறுகின்றார்கள்.

ஆனால் கற்பனையில் எண்ணக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை
1.சஞ்சலம்… சோர்வு… பிணி… என்று
2.தன் ஞானத்தின் வலுவைத் தான் எண்ணிய கற்பனை உணர்வுடன்
3.வாழ்க்கையை ஒப்பிடும் சிந்தனையற்ற செயலாக்கம் இல்லாத நிலையினால் அவ்வாறு ஏற்பட்டு விடுகின்றது.

கற்பனையின் உணர்வில் தான் எண்ணியதை… கவுரவத்தின் உணர்வாகச் செயலாக்குபவன் வாழ்க்கையில் தான் முன்னேறுவதில்லை.

ஆக்கத்தின் ஆக்கமாய் உணர்வின் எண்ணத்தைச் சிந்தனையில் சீர்படுத்தும் மனிதனின் குணம்… வாழ்க்கையின் செயல்பாட்டில் வெற்றி காணும் நிலை ஏற்படுகிறது

ஒவ்வொரு பொருளிலுமே அப்பொருளின் மாற்றம் எப்படி ஏற்படுகின்றது…? அதனுடைய “உஷ்ண அலையின் மாறுபாடு நிலை… சமைப்புநிலை… ஏற்படும் தன்மை கொண்டுதான்…” ஒவ்வொரு கருவின் உருவும் வளர்கின்றது.

வளர்ச்சியில் வெளி கக்கும் கழிவு நிலை கொண்டு தான்… அதனின் சத்து நிலையை ஒவ்வொரு செயலிலும் அச்செயல் நிலையின் “உன்னத நிலை” உருவாகின்றது.

பூமியின் ஈர்ப்பில்… உயர்ந்த ஒவ்வொரு கனி வளங்களும் வளரக்கூடிய நிலையில் அவ்வளர்ச்சியின் உயர்ந்த தன்மையான உலோகங்களை நாம் பிரித்து எடுக்கின்றோம்

சாதாரணமாகத் தங்கப் படிவங்கள் வளர்ந்துள்ள மண்ணில் உள்ள தங்கப் பாளங்களை வெட்டி எடுத்து… அதைப் புடம் போட்டுத் தங்கமாக்குகின்றோம். இதைப் போன்றே பூமியில் உள்ள கனி வளங்களை நமக்கு வேண்டிய பக்குவத்திற்கு பல நிலைகளைச் செய்வித்துச் செயல்படுத்துகின்றோம்.

இதைப்போன்று இச்சரீரத்தின் உண்மை நிலையையும் நாம் உணரல் வேண்டும்.

நாம் எடுக்கக் கூடிய எண்ணத்தின் உணர்வின் உஷ்ண ஓட்டத்தால் நாசி எடுக்கும் சுவாசம் கொண்டு
1.நாசியில் (மூக்கில்) சளியும்
2.பார்க்கும் பார்வையின் ஒளி ஈர்ப்பைக் கொண்டு கண்ணெடுக்கும் ஒளி ஈர்ப்பால் கண்ணின் பீழையும்
3.செவி கேட்கும் ஒலி ஈர்ப்பால் காதில் அழுக்கும்
4.வாய் பேசும் ஒலி அலையால் வாயில் உமிழ் நீரும்
5;உண்ணும் உணவால் மலமும் சிறு நீரும்
6.பால் உணர்வின் உஷ்ண அலையின் தொடர்பால் பெண்ணிற்கு மாதவிடாயும் ஆணிற்கு விந்து நிலையும்
7.உடல் உறுப்பின் செயலில் வேர்வையும்
8.அந்தந்த உறுப்பின் அவயவங்களின் செயலுக்கொப்ப வெளிப்படும் கழிவுகள் நம் உடல் உறுப்பிலேயே செயல் கொள்கின்றதல்லவா…!

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் எண்ணத்தின் உணர்வில் மோதப் பெறும்… நடந்தது… நடக்க வேண்டியது… நடப்பது எதுவாகிலும்… உணர்வின் ஜீவித எண்ணமுடன் ஓடக் கூடிய எல்லாமே இவ்வுயிர் ஆத்மாவின் சரீர வாழ்க்கையில் எலும்பில் ஊனாகப் பதிந்து விடுகின்றது.

ஊன் நிலைக்கொப்பத்தான் ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும்… இருக்கும்.

1.எதை அதிகமாக எடுத்து மனித உணர்வின் எண்ணம் பேசிச் செயல்படுகின்றதோ
2.அந்த நிலைக்கொப்ப ஊனின் பதிவு வினையாக வாழ்க்கையில் வெளிப்படுகின்றது.

கண் பார்த்துப் பொருளறியும் நிலையால் கண்ணில் எப்படிப் பீழை ஏற்படுகின்றதோ அதைப் போன்று
1.உணர்வெடுத்து நாம் பேசியது.. பேசப் போவது என்ற எண்ண உணர்வே ஊனாகி…
2.ஊனே வினையாகி… வினையே வாழ்க்கையாக… அந்த வாழும் நிலையை மாற்றுவது என்றால்
3.இச்சரீர உணர்வின் விதியால் மதி கொண்ட உயர் ஞானத்தால் மெய் ஞானம் பெறும் ஏழாம் நிலையில்
4.இது நாள் வரை இங்கே சொன்ன வழி முறைக்கொப்ப விண்ணிலிருந்து பெறும் மின் காந்த ஒளி சக்தியைக் கவர்ந்து
5.சரீர உணர்வுடன் இவ் ஊனில் பதிவாகி உள்ள பதிவு நிலையை மாற்றக்கூடிய அந்தச் செயல் தன்மைக்கு
6.ஐம்புலனின் செயலின் வீரியத்தைக் கண் காது மூக்கு வாய் உணர்வு என்ற
7.ஐம்புலனின் செயலையும் ஒரு நிலையாக்கி… மதி கொண்டு மெய் ஞானம் பெற வேண்டும்.

மெய் உணரும் உண்மையால் பரந்து கிடக்கின்ற இயற்கையில் உண்மையின் உணர்வைச் சித்தத்தின் செயலாகச் சீர்படுத்துதல் வேண்டும்.

கற்பனைக் கோலம்… கலங்கிடும் காலம்…
அனுபவ ஆற்றல்… ஆக்கத்தின் ஆக்கம்…!

சஞ்சலத்தில் சச்சரவை… சங்கடத்தில் சிக்கலின்றி சிந்தனையில் சீர்தூக்கினால்…
சிந்தைதனில் சீர்படுத்த… சிந்தையின் செயலே சீர்படும் சிகரமாகுமே…!

Leave a Reply