நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக வளரக்கூடிய சந்தர்ப்பம் எது…?

great bliss

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக வளரக்கூடிய சந்தர்ப்பம் எது…?

மெய் ஞானியின் அருள் உணர்வை செவி வழியாக உங்களுக்குள் ஈர்க்கச் செய்து அந்த மெய் ஒளி பெறும் சந்தர்ப்பத்தை இந்த உபதேச வாயிலாக உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்திக் கொண்டு
1.நாம் மெய் ஒளி பெறுவேன்…
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவேன்…
3.நான் அழியா ஒளி நிலை பெறுவேன்…
4.என் மூச்சும் பேச்சும் இருளை மாய்த்து ஒளியாகக் கூட்டும் அலைகளாகப் பெறுவேன்…! என்ற நிலைக்கு வளர வேண்டும்

தன்னம்பிக்கையுடன் நீங்கள் வளர வேண்டுமென்ற அந்த ஆசையில் தான் இதை உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு). ஒவ்வொரு நிமிடமும் நமது குருநாதர் அருள் ஒளி கொண்டு அவர் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று அதை நீங்கள் பெறுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் சொல்வது போல “என்னத்த…!” என்று சோர்வை ஊட்டி கொடுக்கும் நல்ல உணர்வை அழித்துவிடாதீர்கள்.

இந்த மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றிவிட்டு நிச்சயம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்திந்தாலும்…
1.அந்தத் துன்பம் வரும் நேரம் தான்
2.மெய் ஒளியின் உணர்வைக் கூட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

எப்பொழுது துன்பம் உங்களைத் தாக்குகின்றதோ அப்பொழுது ஈஸ்வரா……..! என்று உயிருடன் தொடர்பு கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெற வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
3.இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்தும் போது
4.நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடனே அதில் உள்ள விஷத்தை மாய்ப்பது போல்
5.துன்பத்தை ஊட்டும் உணர்வுகளை அது ஒடுக்கி விடுகின்றது.

பாலுக்குள் விஷத்தைப் போட்டால் அதைக் குடிப்போரை மயங்கச் செய்கின்றது. மகிழ்ச்சியான நிலைகளில் நாம் இருக்கும்போது வேதனைப்படும் நிகழ்ச்சிகள் நடந்தால் அது நம்மைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது… நல்லதைச் சிந்திக்கும் செயலை இழந்துவிடுகின்றோம்.

ஆனால் நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடன் விஷத்தின் தன்மை மாய்ந்து… நெருப்பின் சுடர் பெருகி… ஏகமாக அங்கே ஒளியாகக் காண முடிகின்றது.

அதைப் போன்று தான் எத்தகைய துன்பம் வந்தாலும் அந்த விஷத்தின் தன்மையை அந்த மெய் ஞானியின் அருள் ஒளி கொண்டு… அந்த நெருப்பான சக்தியை நமக்குள் கூட்டும்போது…
1.அந்த விஷத்தின் தன்மை மாய்ந்து
2.நம் எண்ணங்கள் தெளிவாகி சிந்திக்கும் நிலை பெருகி
3.மறைந்த பொருளை அறிந்துணர்ந்திடும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கவும் இது உதவும்.

ஆகவே வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை மறந்து அந்த மெய் ஞானியின் அருளைப் பெறுவோம். அந்த அருள் ஒளியாலே நம் சொல்லும் செயலும் நம் பேச்சும் மூச்சும் உலகிற்கு ஒளிச் சுடராக்கும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்படிப்பட்ட உறுதியான நிலைகளை நீங்கள் பெறுவதற்கு
1.எந்த மகரிஷிகள் அந்த ஆற்றலை அவர்களுக்குள் விளைய வைத்தார்களோ
2.அந்த உணர்வின் சக்திகளை எல்லாம் உங்களுக்குள் அந்த சிலிகன்களாகப் பதிவு செய்திருக்கின்றோம்.
3.அதை உங்களுக்குள் கூட்டிப் பெருக்குவது இனி உங்கள் கையில் தான் இருக்கின்றது.

நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. அதை நான் (ஞானகுரு) பதிவு செய்கின்றேன். என் மூச்சும் பேச்சும் உலக நன்மை பெற வேண்டுமென்று எண்ணத்தைச் செலுத்தி அதையே உங்களிடம் பரப்புகின்றேன்.

அதே போல் நீங்களும் எடுத்து உங்கள் உடலுக்குள் பெருக்கும்போது உங்கள் மூச்சின் நிலைகள் பிறரை நன்மை பெறச் செய்யும் சக்தியாக மலரத் தொடங்குகின்றது.

குருநாதர் காட்டிய அருள்வழிப்படி இதைப் பெறுவோம்…! விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்…! என்று உறுதி கொள்ளுங்கள்.
1.உடலை விட்டு எப்போது சென்றாலும் அந்த மகரிஷிகளின் ஒளி அலைகளுடன் கலந்து
2.ஒளியுடன் ஒளியாக நாம் பேரொளியாகக் கலப்போம்.

Leave a Reply