பிறரை ஏமாற்றத் தந்திரமாக வேலை செய்து வாழ்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…?

Soul Alive

பிறரை ஏமாற்றத் தந்திரமாக வேலை செய்து வாழ்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…?

 

வாழ்க்கையில் சிலர் நரித் தந்திரம் எல்லாம் செய்வார்கள். பிறருடைய வேதனையை அறிய மாட்டார்கள் அவர்களைச் சுலபமாக எண்ணுவார்கள். ஆனால் இந்த நரித் தந்திரம் என்ன செய்யும் என்றால் அதற்குள் இருக்கக்கூடிய விஷம் மற்றொன்றை விழுங்கும் நிலைகள் கொண்டது.

மனித வாழ்க்கையில் நரித் தந்திரம் செய்தார்கள் என்றால் அதனால் வரப்படும் எதிர்மறையான வேதனைகளை… அந்த நஞ்சுகளை அது உணவாக உட்கொள்ளும் தன்மை பெறும்.

அதாவது காட்டில் உள்ள நரி தந்திரமாக மற்றதை எப்படிக் கொன்று புசிக்கின்றதோ இதைப்போல
1.அவர்கள் பிறருடன் (தன்னை) மெச்சிக் கொள்வார்கள்
2.கடைசியில் நான் ஒன்றுமே செய்யவில்லை…! என்று சொல்லி விடுவார்கள்.

ஆக… தந்திரமாகச் சொல்லிப் பிறரை மெச்சச் செய்துவிட்டு அவர்களைப் பல இம்சைகளுக்கு ஆளாக்குவார்கள். அப்படி அந்த வேதனையான உணர்வுகளுக்கு ஆளாக்கும் இந்த தந்திரத்தை அங்கே கற்பிக்கலாம்.

1.ஆனால் தன் உயிரான ஈசனிடம் இந்தத் தந்திரம் எல்லாம் ஒன்றும் செல்லாது.
2.எந்த வேதனையை அங்கே படச் செய்ததோ… அங்கே பதிவு செய்தது எதுவோ அந்த வித்து இங்கே நுகரத் தொடங்கும்.
3.வேதனையை ரசிக்கும்… வேதனையை ரசித்திடும்… உணர்வே இங்கே வளரும்.

அவனுக்கு இப்படித்தான் வேண்டும்.. அவன் இப்படித் தான் தொலைய வேண்டும்…! என்று சொல்வார்கள். இந்தப் பாசம்… இந்தக் கயிறு… அதே உணர்வின் தன்மை கொண்டு நம்மை எங்கே அழைத்து செல்லும்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நரியைப் போன்று தந்திரம் செய்து அவர்களுக்கு இம்சைகள் செய்திருந்தாலும்… பிறருடைய வேதனையை எந்த அளவுகோலுக்கு ரசித்ததோ அதே உணர்வின் தன்மை கொண்டு இன்னொரு உடலுக்குள் தந்திரமாக உள்ளுக்குள் செல்லும்

1.முதலில் உருவாக்கிய அந்த நஞ்சினை புகுந்த உடலிலும் அதிகமாக வளர்த்துக் கொள்ளும்
2.மனிதனையே (மனித உணர்வுகளையே) மறந்துவிடும்
3.நரியின் உணர்வுகளாகவே வளர்த்துவிடும்

அந்த உடலை விட்டு வெளியே வந்தபின் பரமாத்வில் (காற்று மண்டலத்தில்) கலந்துவிடும் பரமாத்மாவில் கலந்தபின்… பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நரியின் உணர்வாக… அதன் இனத்தை தேடி… அதற்குள் சென்று… அதனின் உணர்வின் தன்மையைக் கருவாக்கி “நரியாகத் தான் பிறக்கச் செய்யும் இந்த உயிர்…!”.

நாம் என்னமோ நினைக்கின்றோம்…! யாருக்கும் தெரியாமல் தானே செய்தோம்.. என்று…!

ஆனால் பிறருக்குத் தெரியாமல் ஏமாற்றி கொண்டிருந்தால் கடைசி நிலை அது தான்…! சொல்வது அர்த்தமாகின்றதா…?

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான். சிந்தனையில்லாமல் செய்தால் அது எருமையின் உணர்வுக்கொப்பானது. ஏனென்றால் எருமைக்குப் புத்தியில்லை.

எடுத்துக் கொண்ட சிந்தனையற்ற நிலைகள் அந்த அசுர உணர்வு கொண்டு நாம் செயல்படுவோமே என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளர்ந்து விடுகின்றது. அப்பொழுது இதனுடைய “பாசக்கயிறு” என்ன செய்கின்றது…?

எருமை என்ன செய்யும்…? வெயில் தாங்கவில்லை என்றால் சாக்கடைக்குள் போய் அல்லது ஏதோ ஒரு சேறுக்குள் பிரண்டு அந்த வெக்கையைத் தணித்து கொள்கின்றது.

இதைப் போன்ற சிந்தனையற்ற உடலுக்குள் தான் போகும்…! ஆகவே அதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்க வேண்டுமா இல்லையா…!

1.நம் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும்
2.நம் பாசம் அந்த மகரிஷிகளின் பால் தொடருமே என்றால்
3.நாம் அதனின் நிலைகள் கொண்டு.. அந்த மகரிஷிகளின் புத்திரனாக நாம் மாறுகின்றோம்.

ஏனென்றால் இந்த உடலை உருவாக்கியது “உயிரே…!” எடுத்துக் கொண்ட நல்ல உணர்வின் இணைப்பு எதுவோ அதற்குத்தக்க மனிதனாக உருவாக்கியது.

1.மனிதனானபின் வரும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டால்
2.உயிருடன் ஒன்றி நிலையான ஒளிச் சரீரமாக உருவாக்கும்
3.வரும் நஞ்சுகள எதுவாக இருந்தாலும் அதை அடக்கி… அதையே ஒளியாக மாற்ற வைக்கின்றது.

Leave a Reply