ஒரு வட்டிக் கடைக்காரருக்கு… அவர் மற்றவருக்குச் செய்த தீங்குகளுக்குக் கிடைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

om-eswara-gurudev-judge

ஒரு வட்டிக் கடைக்காரருக்கு… அவர் மற்றவருக்குச் செய்த தீங்குகளுக்குக் கிடைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

 

வட்டிக் கடைக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பலருக்கும் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தார்.

என் (ஞானகுரு) மகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் பொழுது எனக்கே அவர் தீங்கு செய்தார்.

திருமணத்திற்குப் பணம் தேவை…! என்ற நிலையில் அவரிடம் கேட்கும் பொழுது உங்கள் வீட்டை வைத்துக் கொடுங்கள்… திருமணச் செலவுக்குப் பணம் தருகின்றேன்…! என்றார்.

திருமண நாள் அருகிலே வந்த பின்… உங்கள் வீடு ஆறாயிரம் கூடப் பெறாது நீங்கள் பத்தாயிரம் கேட்கிறீர்களே…! என்று என்னிடம் மாற்றிப் பேசுகிறார் அந்த வட்டிக் கடைக்காரர்.

அதற்கு நான் சொன்னேன். அப்பா…! உன்னுடைய சொத்தாக இருந்தால் அதற்கு எப்படி விலை தருவாயோ அதைப் போல் நினைத்துப் பார்…! என்றேன்.

நினைத்துப் பார்ப்பது என்ன…? முதலில் “பத்தாயிரம் தருகிறேன்” என்று சொன்னேன். இப்பொழுது மற்றவர்களிடம் கேட்கும் பொழுது குறைந்து போய்விட்டது. நான் என்ன செய்வது…? என்று கல்யாணத்திற்கு மூன்று நாள் முன்னாடி இப்படிப் பேசுகிறார்.

நானோ குருநாதர் காட்டிய வழியில் ஊரை எல்லாம் சுற்றிக் கொண்டிருக்கின்றேன். என் மனைவியோ… “கடைசி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே…” என்று பதறுகின்றது.

கல்யாணத்திற்காக முன் பணம் கொடுத்து வேலைச் செய்பவர்கள் எல்லாம் வந்து நிற்கின்றார்கள். கடைசியில் திருமண நாள் அன்று தாலி எப்படிக் கட்டுவது…? என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த நேரத்தில் சுற்றுப் பயணத்தில் கோயம்புத்தூரில் இருக்கின்றேன். கல்யாண நேரத்திற்கு வந்து நீங்கள் ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள்.

நான் வந்தேன். ஆனால் கல்யாணம் நடக்கப் போகும் பொழுது என்ன நடந்தது…?

ஒரு அம்மாளுக்கு அருள் வந்துவிட்டது. மாரியம்மன் என்று சொல்லி அருளாடிக் கொண்டு “தாலி கட்டக் கூடாது… இந்தப் பெண் ஆகாது…” என்று சொல்கிறது.

பையன் வீட்டுக்காரர்கள் எல்லாம் அதை ஏற்றுக் கொண்டு ஐயோ.. “அம்மா” இந்த மாதிரிச் சொல்லிவிட்டதே..! கல்யாணம் செய்தால் குடும்பத்தில் கஷ்டம் வந்துவிடுமே…! என்று சொல்கிறார்கள்.

அருளாடிச் சொன்ன அந்த அமமாவுக்கு வயது தொண்ணூறு… பக்கத்துக் கிராமம்.

நான் வந்த நேரத்தில் தான் இது நடக்கிறது. அப்பொழுது நான் குருநாதரை நினைத்து
1.இந்த மாதிரிச் சொல்கிறார்களே…
2.இதற்கு என்ன விடை…? என்று கேட்டேன்.

குருநாதர் உணர்வுகள் இயக்கப்பட்ட பின் திடீர்… என்று அந்த முகூர்த்த நேரத்தில் வேப்ப மரத்தில் ஏறுகின்றது. அங்கிருந்து குதித்துக் கீழே வந்து… என்னைப் பார்த்து “வாடா மகனே…!” என்றது.

நான் தான்டா தாலியை எடுத்துக் கொடுப்பேன். தாலியைக் கொடுத்துக் கட்டுடா…! என்று சொல்லியது… கல்யாணம் முடிந்தது.

சடக் என்று இப்படி முடிந்ததும் சமையல் எல்லாமே மிச்சம். யாரும் சாப்பிடவில்லை…! ஏனென்றால் வந்ததும் தாலியைக் கட்டியதால் பொருள் எல்லாம் மிச்சமாகி விட்டது.

இங்கே பகுதி தான் செலவு… மாப்பிள்ளை வீட்டிலும் பகுதிதான் செலவு…! இரண்டு பேருக்குமே அன்றைக்குச் செலவு இல்லாமல் போய்விட்டது. நடந்த நிகழ்ச்சி.

என் பெண்ணும் வீட்டுக்காரரும் மைசூரில் இருக்கின்றார்கள். தியானத்தைச் செய்து கொண்டு நன்றாக இருக்கின்றார்கள். தபோவனத்திற்கு அவர்கள் ஒரு இலட்சம் வரை பணம் கொடுத்து உதவியும் இருக்கின்றார்கள்.

பிறகு அந்தச் செட்டியாருடைய நிலைகள் என்ன ஆனது…? ஒரு சமயம் அவர் காலையில் காபி சாப்பிடுவதற்காக வீட்டை விட்டு வெளியிலே சென்றிருக்கின்றார்.

அந்த நேரம் சரியாகத் திருடர்கள் வந்து அவர் வீட்டில் வைத்திருந்த நகைகள் காசு எல்லாவற்றையும் பூட்டைக் கூட உடைக்காமல் அதற்கென்று சாவியும் தயார் செய்து அலுங்காமல் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

எடுத்துச் சென்ற பொருளின் மதிப்பு குறைந்தது ஒரு கோடி ரூபாய் பக்கம் இருக்கும். என் மனைவி போட்டிருந்த ஒரு கம்மலும் அதிலே இருக்கின்றது. ஏற்கனவே அங்கே அடகு வைத்திருந்தது தான்.

சந்தேகக் கேசில் பிடிபட்ட அந்தத் திருடன் கோர்ட்டில் என்ன சொல்கிறான்…? உன் நகை தான் என்று நிரூபித்து எடுத்துக் கொள்…! என்கிறான். அதைத் திருப்ப முடியவில்லை. கொள்ளை அடித்தவன் ரசீது இருந்தால் கொண்டு வா…! என்று கேட்கின்றான். இது நடந்த நிகழ்ச்சி.

இப்படி நடந்து கொண்டிருக்கும் பொழுது நான் சேலத்தில் இருக்கின்றேன்.

அந்த வட்டிக்காரருடைய எண்ணங்கள் குறுகிய நோக்கில் இருந்ததால் பணம் எல்லாம் இப்படிப் போய்விட்டது. அப்பொழுது அந்த நேரத்தில் அதிகமாகச் சொத்து வைத்திருப்போர் சம்பந்தமாக மத்திய அரசாங்கம் (இந்திரா காந்தி அரசு) ஒரு சட்டம் போட்டிருந்தது.

போலீஸ் இவரைப் பிடித்துக் கொண்டு போய் உன்னுடைய நகைகளையும் பணத்தையும்… நீயே எங்கேயோ ஒளித்து வைத்திருக்கின்றாய்..! என்று சொல்லி அடி…அடி… என்று அடிக்கின்றார்கள்.

ஐயா… நான் அப்படிச் செய்யவில்லை… எவனோ எடுத்துக் கொண்டு போய்விட்டான்…! என்று சொல்கிறார்.

நீ சொல்வதை யார் நம்புவது…? என்று மீண்டும் அடிக்கின்றார்கள். பின் அவர்கள் இனங்கள் எல்லம ஒன்றாகச் சேர்ந்து அவரை (அந்த வட்டிக் கடைக்காரரை) ஒரு வழியாக விடுவித்துக் கொண்டு வந்தார்கள்.

அந்த மட்டுடன் நேராக சேலத்தில் இருக்கும் என்னைப் பார்க்க வந்தார். ஐயா…!! என்று நடு ரோட்டில் சொத்… என்று என் காலில் விழுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்…! என்றார்.

நான் எந்த நகையையும் திருடவில்லை.
1.உங்கள் குடும்பத்திற்கு அன்றைக்கு என்ன செய்தேனோ தெரியவில்லை…!
2.என்னை அப்படியே அலேக்காக அள்ளிக் கொண்டு போனார்கள். உதைக்கவும் செய்தார்கள்.
3.நான் சத்தியமாக ஒன்றுமே செய்யவில்லை… என்னை அடிக்கின்றார்கள்
4.எப்படியாவது அந்தத் திருடு போன பொருள் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று
5.என்னைக் குறுக்காட்டி இப்படிச் சொல்கிறார் அந்த வட்டிக் கடைக்காரர்.

என்னைத் தேடி அலைந்து கடைசியில் கண்டுபிடித்து சேலத்திற்கு வந்திருக்கின்றார்.

இனிமேல் பட்டு யாருக்கும் இந்த மாதிரித் தீங்கு செய்யாதே…! என்றேன். (ஆரம்பத்திலேயே சில புத்திமதிகளைச் சொல்லுயிருந்தேன்.. அதை அவர் கேட்கவில்லை).

இனிமேல் யாருக்கும் நான் தீங்கே செய்ய மாட்டேன். நான் உணர்ந்து விட்டேன். போலீஸ் அடியை நான் பார்த்துவிட்டேன். ஆனால் நான் உண்மையிலேயே திருடவில்லை என்றார்.

நீ திருடவில்லை என்று சொல்கிறாய். ஆனால்
1.எத்தனையோ பேருக்கு வட்டி என்ற பெயரில் கொடுமை செய்தாய் அல்லவா
2.அந்தச் சாபம் எல்லாம் உன்னைச் சாடும் அல்லவா.. நீ இனிமேல் இந்தத் தவறைச் செய்யாதே என்றேன்.

இந்த வட்டிக் கடையே எனக்கு வேண்டாம்  நான் தவறு செய்ய மாட்டேன் என்று சொன்னார். இது நடந்த நிகழ்ச்சி..!

Leave a Reply