உடலில் உள்ள எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய அருள் சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

human skeletal power

உடலில் உள்ள எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய அருள் சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியின் இயக்கத்தில் எப்படி இருள் அதிகமாகவும் ஒளி குறைவாகவும் உள்ளதுவோ அதைப் போன்றுதான் மனிதனின் எண்ணச் செயலும் உள்ளது.

1.கடும் இருட்டிலும் சிறிது வெளிச்சம் ஊடுருவி ஒளி பாய்ச்ச முடியும்.
2.ஆனால் சிறிது வெளிச்சத்தையே மறைக்கக் கடும் இருட்டு தேவையாக உள்ளது.

நம் எண்ணத்தின் இருளை ஒளியாக்கும் ஆத்ம வலுவை நாம் பெற்றோமானால்
1.உடலின் எண்ண நிலைக்கொப்பச் செயல்படும் குணத்தையே
2.ஆத்மாவின் செயலாக உடலைச் செயல்படும் வகையில் செயலாக்கி
4.இருளில் இருந்து ஒளி பெறும் ஞான ஒளியாக
5.நம் ஆத்ம ஒளி பிரகாசிக்கும் சக்தியைப் பெறும்.

எண்ணத்தில் உள்ள இருள்கள் எவை…?

சலிப்பு… சோர்வு… பிறரிடம் உள்ள குறை காணல்.. புகழுக்காக ஏங்கும் ஏக்க நிலை… மரண பயம்…! போன்ற இருள் தன்மைகள் எல்லாவற்றையும் எண்ணத்தால் எடுக்கும் ஞான சக்தி கொண்டு நாம் மாய்க்க வேண்டும்.

குரோதம் வஞ்சனை என்ற தீய குணங்கள் வேறு. எண்ணத்தால் மறைத்துவிடும் இருள் குணங்கள் வேறு.

ஆத்ம ஞானத்தால் நாம் வளர்ந்து வரும் காலங்களில் சலிப்பின் சோர்வை அண்ட விடக் கூடாது.

சலிப்பின் ஏக்கத்தால் “உயர்வு கொள்வோம்” என்ற
1.உயர் ஞான வழிக்கு அந்த ஏக்க நிலையைச் செலுத்தி
2.அந்த ஏக்கத்திலேயே ஆத்ம வளர்ப்பை வளர்க்கவும் முடியும்.

ஆனால்… பிறர்பால் பொருளைப் பார்த்து ஏக்கப்படும் ஏக்கத்தால் மனித வாழ்க்கை அழிவிற்கும் செல்வதுண்டு.

குணங்களை வழிப்படுத்தும் ஞானத்தால் பெறவல்ல ஆத்ம பலத்தால் தான் இருள் என்ற நிலை நீங்கும். மேலும் ஒளியான ஆத்ம வலுவைப் பெற்ற ஆத்ம ஞானத்தால்… எண்ணிய எண்ண நிலைக்கொப்ப கடும் பசியையும்… உடல் சோர்வையும்… கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அதே போல் உடலின் எந்தப் பாகத்தில் எந்த வகையான உபாதைகள் ஏற்பட்டிருந்தாலும்… இவ்வுடலின் செயலுக்கும்…
1.இவ்வாத்ம ஞானத்தால் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் தொடர்பு கொண்டு
2.அவர்கள் ஈர்ப்பலை வரிசையில் எண்ணத்தைச் செலுத்தி சுவாசம் எடுக்கும் பொழுது
3.எதை எண்ணிச் சுவாசம் எடுக்கின்றோமோ… அவ்வலை அமில உணர்வு இந்த உடலில் சாடி ஏற்படும் எண்ண நிலைக்கொப்ப…
4.”ஆத்ம பலத்தைக் கொண்டு” இவ்வுடலின் செயலையும் சீராக்கிடும் வழியை வகுத்துக் கொள்ளலாம்.

இந்த உடல் ஒரு அடுப்பு தான். இந்த உடலில் சமைக்கும் அமில உணர்வின் ஆவி நிலையை ஆத்மா பெற்று அதன் வழியில் ஆத்மா வாழ்வது என்பது “சாதாரண வாழ்க்கை நிலை…!”

ஆனால் வாழ்க்கையின் ஞான ஈர்ப்பு நற்குணத் தியானச் செயலால்… எண்ணத்தின் சுவாசத்தில் ஆத்ம பலம் பெற்ற ஒரு ஞானியினால்…
1.உடல் சமைப்பிலிருந்து ஆத்மா பலம் பெறும் நிலை மாறி
2.ஆத்மாவின் செயலுக்குகந்த சமைப்பாக இந்த உடலை இயக்க முடியும்.

பசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தையே ஆத்ம வலுக்கூடிய ஞானியினால் ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும்.

அத்தகைய தன்மைக்கு… இச்சரீரக்கூறின் எலும்புகளை மின் காந்த வலுக் கொண்ட உறுப்புக்களாக உறுதி கொண்டிடும் செயலால்
1.சரீர உணர்வின் சாதாரண நிலையையே
2.எண்ணத்தின் இயக்க நிலைக்கொப்ப மாற்றியமைக்கும்
3.ஆத்ம வலுவைக் கொண்டு செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

Leave a Reply