மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்… பொறுமையுடன் கையாளும் போது எல்லாமே நல்லதாகும்…!

Gnana peace and silence

மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்… பொறுமையுடன் கையாளும் போது எல்லாமே நல்லதாகும்…!

கோர்ட்டுகளில் கேஸ்கள் நடக்கும். பல பிரிவினைகள் நடக்கும். ஏமாற்றும் சக்தி கொண்டு… “மற்றவர்களை ஏமாற்றுபவர்கள்…” ஏராளம் அங்கே உண்டு.

இப்படி ஏராளமாக இருப்பினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்யும் செயல்களை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தறியப்படும் பொழுது நமக்குள் விஷத்தின் தன்மையே கூடுகின்றது.

எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள்…
1.மீண்டும் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பை உருவாக்கும் தன்மையை நமக்குள் வளர்க்கின்றது.
2.இதைப் போன்ற வெறுப்பு நமக்குள் வளரப்படும் பொழுது அதையே நினைத்துக் கொண்டு
3.அதைப் பற்றி யாரிடம் சொன்னாலும் ஒரு வெறுப்பான சொல்களையே சொல்வோம்.

ஆனால் அந்த வெறுப்பான சொல்களைச் சொல்லும் பொழுது வெறுக்கும் உணர்ச்சியைத் தூண்டி கேட்போர் உணர்வுக்குள்ளும் இது பதிவாகி அவர்களும் நமக்கு எதிரியாகத்தான் வருவார்கள்.

யாரை எண்ணி வெறுத்தோமோ… அவர்களுக்கும் இந்த உணர்வுகள் போகும். அங்கேயும் இது உருவாகும்… நமக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மையே உருவாகும்.

இத்தகைய வெறுப்பு நமக்குள் உருவாகாதபடி தடைப்படுத்த வேண்டுமல்லவா…! அப்படித் தடைப்படுத்த வேண்டும் என்றால் நாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

“ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அந்த வெறுப்பு வளராதபடி தடைப்படுத்த வேண்டும்.

பொதுவாக நாம் யாரை யாரை எல்லாம் நாம் பார்க்கின்றோமோ “அவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற பொது விதிப்படி…” நமக்குள் அவரைப் பற்றிப் பதிவான உணர்வுகளைத் தடைப்படுத்திவிட வேண்டும்.

பின் யார் நமக்கு தீங்கினைச் செய்தாரோ.. அவரை எண்ணி
1.என் பார்வை அவரை நலலவராக்க வேண்டும்
2.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் நல்ல எண்ணம் உதயமாக வேண்டும்
3.அவர்கள் தவறுகளை அவர்கள் உணரும் சக்தி பெறவேண்டும்
4.தவறான நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று
5.இத்தகைய உணர்வுகளை எடுத்து அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது நமக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் வரும் பொழுதெல்லாம் அவர்களும் இதை நுகர்வார்கள். தனக்குள் உணர்வின் ஒலி அலைகளை மாற்றுவார்கள்.

உதாரணமாக… இராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின் இதற்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும்
1.இராக்கெட் பழுதானால் இங்கே தரையிலிருந்து லேசர் இயக்கமாக இயக்கி
2.அந்த இயந்திரத்தைப் பூமியிலிருந்தே சீர் செய்கிறார்கள்.

இதே போல ஒரு பழுதடைந்த மனதைச் சீர் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அவர்களுக்குப் பாய்ச்சி நம்மைக் காக்க முடியும்.

தொழில் நிமித்தங்களோ அல்லது குடும்ப நிலைகளிலோ அல்லது பற்று கொண்ட சொந்தத்தில் தொழில் நடத்தும் பொழுதோ சில வித்தியாசமான உணர்வுகள் வந்த பின் ஒருவருக்கொருவர் பகைமையகின்றது.

பகைமையானபின்… அது நம்முடைய பொருள் தான் என்று தெரிந்தாலும் அந்தப் பகைமை உணர்வுகள் தான் அவர்களைச் செயல்படுத்தும்
1.பொருள் அவர்களுடையது…! என்று கொடுக்காத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
2அதாவது நம்முடைய பொருளை எடுத்துக் கொண்டு அது என்னுடையது தான்…! என்று சொல்வார்கள்.

இத்தகைய தன்மை தான் இன்று உலகில் பெரும்பகுதி நடக்கின்றது.

இதைப் போன்ற தீமைகள் நடக்கும் நிலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடல் அழுக்கைப் போக்க குளிக்கின்றோம். துணியில் உள்ள அழுக்கைப் போக்கச் சோப்பைப் போட்டுத் துவைக்கின்றோம்.

இதைப் போல் நம் ஆன்மாவில் பட்ட அழுக்கினைப் போக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.நாம் எந்த வெறுப்பினை அடைந்தோமோ அவர்களை எண்ணி
2.அவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று எண்ணினால்
3.அந்த உணர்வின் தன்மை நமக்குள் இருந்து அவர்கள் மீது வெறுப்பில்லாத நிலைகளை உருவாக்கும்.

அறிந்துணர்ந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்… பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் அவருக்குள் வரக்கூடாது… என்று இந்த உணர்வை நாம் எண்ணினோம் என்றால் அவர்கள் நம்மைப் பகைமையாக எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகளை அவர்கள் நுகரப்பட்டு
1.பகைமையை மறக்கச் செய்து
2.அங்கே சிந்திக்கும் திறனை உருவாக்கச் செய்யலாம்.

ஏனென்றால் அவ்வளவு பெரிய உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம். அதை நீங்கள் “பொறுமையுடன்…” கையாள வேண்டும்.

Leave a Reply