ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஈசனின் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

lord eswaran god

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஈசனின் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.

பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!

இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? இவ்வாவிகளின் வேலை தான்.

அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.

அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.

ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.

1.குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
2.ஆவி உலகில் உள்ள பொழுது எந்நிலையில் பிறக்கலாம் என்று தான் தெரியும்.
3.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பது தெரிந்திடாது.
4.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.
5.இந்நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.

பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.

அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ண காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று தான் போகரின் நிலை எல்லாம் வந்ததப்பா…!

உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!

எப்படி ஈர்ப்பது என்கிறாய்…? கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.
1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…
2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…!

கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?

சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!

தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம் புரிந்ததா…?

ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!

1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?

இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!
3.அந்நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!

Leave a Reply