விதையில்லாமல் தாவரங்கள் எப்படி முளைக்கிறது…? எண்ணிலடங்காத எறும்புகளும் பூச்சிகளும் எப்படித் தோன்றுகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Nature goddess.jpg

விதையில்லாமல் தாவரங்கள் எப்படி முளைக்கிறது…? எண்ணிலடங்காத எறும்புகளும் பூச்சிகளும் எப்படித் தோன்றுகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எல்லோரும் வணங்கிடும் அந்தக் கடவுளின் சக்தி ஒன்றே தான். அந்தச் சக்தியின் நிலைக்குப் பல ரூபங்களும் பல நாமங்களும் இட்டு அவரவர்கள் வழிக்கு அவரவர்கள் வணங்குகிறார்கள்.

ரூபமில்லா சக்தியின் நிலை என்னப்பா..? அந்த ரூபமில்லாத நிலை தான் காற்றும்… மழையும்… ஒளியும்…! இவற்றில் கலந்துள்ள அச்சக்தியின் நிலை இல்லாவிட்டால் இந்த உலகிலே தோன்றிடும் பல கோடி உயிரணுக்கள் எல்லாமே எப்படி உதித்து இந்நிலையில் உயிர் பெற்று வாழ்ந்திடுமப்பா…?

அவ் ஈசனின் சக்தியின் ஆற்றல் எல்லாம் அச்சூரியனின் சக்தியிலிருந்து தான் பல வழிகளில் நமக்கு அருள் தருகின்றது. எல்லா அருளையும் தன்னுள் ஏற்றிருக்கும் அச்சூரியனின் சக்தியிலிருந்து பல கோடி உயிரணுக்கள் தோன்றுகின்றன.

அந்த உயிரணுக்களின் உண்மை நிலைகளை எல்லாம் பலர் பல வழிகளில் அறிந்தும் அறியாமலும்… பல ஆராய்ச்சிகளிலும்… பல வகை விஞ்ஞான ரூபத்திலும்… கண்டு உணர்கின்றார்கள். கண்டு உணர்வதற்குப் பல வழிகளைக் கையாளுகிறார்கள்.

அந்த உயிரணுக்கள் உயிர் பெற அச்சக்தியின் அருள் கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் உயிர் பெறும் நிலையில் உள்ளது.

பல இடங்களில் பல வகைச் செடி கொடிகள் வளர்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகைச் செடிகளும் அந்த ஊரின் மண் நிலைக்கு ஏற்ப வளர்ந்து பயன் தருகின்றன.

1.நாம் பயிர் செய்து பலன் பெறும் செடி கொடிகள் பல.
2.நாம் பயிர் செய்யாமலேயே இப்படர்ந்த பூமியில் பல வகைச் செடி கொடிகளும் மரங்களும் வளர்கின்றன.

அவை எல்லாம் எந்நிலையில் அவ்விடத்தில் வளர்கின்றன…?

விதை விதைத்து வளர்கின்றனவா எல்லாமே என்று சிலர் எண்ணுகின்றார்கள். பறவைகளின் எச்சம் பட்டும் காற்றிலே பல விதைகள் பறந்து வந்தும் அந்நிலையிலிருந்து பல வகைச் செடிகள் வளர்கின்றன என்று..!

திடீர் திடீரென்று மழை பெய்து சூரிய ஒளி பட்டவுடன் ஈரம் உள்ள இடங்களில் எல்லாம் பல வகை புல் பூண்டு தாவரங்கள் எல்லாமே வளர்கின்றன. புல் பூண்டிற்குத்தான் விதையே இல்லாத பொழுது அவை எப்படி அந்நிலையில் எல்லாம் வளர்கின்றன…?

பல உயிரணுக்களின் உண்மைத் தத்துவங்களை இந்நிலையில் செப்புகின்றோம்.

சூரியனிலிருந்து கிளம்பி வரும் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் எந்தெந்த நிலையில் வந்து தாக்குகின்றனவோ அந்நிலையில் அப்பூமித் தாய் ஈர்க்கின்றாள்.

அந்நிலையில் உள்ள ஈரப்பசையின் மேல் அச்சூரிய ஒளி பட்டதும்
1.அப்பூமியின் நிலைக்கும் அந்நிலையில் உள்ள ஈரப்பசையின் நிலைக்கும் ஏற்ப சூரிய ஒளி பட்டவுடன்
2.அங்குள்ள உயிரணுக்கள் உயிர் பெற்று அம்மண்ணின் நிலை கொண்டு பல வகைத் தாவரங்கள் உண்டாகின்றன,

அந்நிலையிலே தான் பல கோடி உயிரணுக்கள் தன் தன் நிலைக்கு ஏற்ப தன் தன் சுவாச நிலைக்கேற்ப சேர்த்து
1.தன் ஆகாரம் உள்ள இடத்தில் படர்ந்து இருக்கும் பொழுது
2.அந்நிலையில் தன் ஆகாரத்தின் சுவாச நிலைக்கு ஏற்ப… “ஆகாரம் உள்ள இடத்தில் அச்சூரிய ஒளி பட்டதும்”
3.பல உயிரணுக்கள் உயிர் பெறுகின்றன.

இந்நிலையில் உயிர் பெறுபவை தான் பல வகைப் புழு… பூச்சிகள்… எறும்புகள்… கொசுக்கள்.. ஈக்கள்…! எல்லாமே. இவை எல்லாம் முட்டை இட்டு முட்டையிலிருந்து குஞ்சு பொரிப்பதில்லை.

இதன் நிலை எல்லாம் தன் சுவாச நிலைக்கேற்ப அழுகும் தன்மை நாற்றம் வாய்ந்த இடம் இப்படிப் பல பல இடங்களில் அந்தந்த இடத்திற்கு ஏற்பச் சுவாச நிலை கொண்டு தான் அந்த உயிரணுக்கள் எல்லாமே உற்பத்தியாகின்றன.

தன் சுவாச நிலைக்கேற்ற உணவுள்ள இடங்களில் தான் இந்த உயிரணுக்களும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

ஆடி மாதத்தில் பலாப்பழத்தில் ஈ மொய்க்கிறது என்கிறோம்.
1.அந்த ஆடி மாதத்தில் மட்டும் தான் அந்த ஈ உற்பத்தியாகின்றதா…?
2.திடீரென்று தோன்றி மறைய அந்த ஈக்களுக்கு முட்டை எங்கிருந்து வந்தது…?
3.பல ஈக்கள் ஒரே சமயத்தில் வருகின்றன. அந்த ஈக்கள் திடீரென்று தோன்றுவதெல்லாம் இந்நிலையிலிருந்து தான்.

அச்சூரியனின் சக்தியிலிருந்து பல உயிரணுக்கள் இந்தப் பூமியின் மீது படர்ந்துள்ளன. இந்நிலையில் அதற்கு ஏற்ற சுவாச நிலை கிடத்தவுடன் அந்தந்த நிலையிலேயே அந்த உயிரணுக்கள் எல்லாம் ஜீவன் பெற்று தன் ஆகாரத்தைத் தேடிக் கொள்ளச் சுற்றி வருகின்றன.

எவ்வளவு குறுகிய காலத்தில் ஜீவன் பெற்றதோ அந்நிலையிலேயே அந்த உடலை விட்டும் அது ஜீவன் பிரிகின்றது. பல உயிரணுக்களின் நிலை எல்லாம் அந்நிலையிலிருந்து தான் உற்பத்தியாகின்றன.

மரப்பொந்துகளிலும் வீட்டின் பல பகுதிகளிலும் திடீர் திடீரென்று எறும்புகள் படர்ந்து காணப்படுபவை எல்லாமே இந்நிலையிலிருந்து தான்…!

Leave a Reply