தான் வேறு.. தன் ஆத்மா வேறு…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

soul and body.jpg

தான் வேறு.. தன் ஆத்மா வேறு…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனாகப் பிறந்து வளர்ந்து சகல சம்பத்தும் பெற்று சௌபாக்கியமுடன் வாழ வேண்டும்… சகல சுகங்களையும் அனுபவிக்க வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு மனிதனும் வளரும் நிலையிலேயே எண்ணுகின்றான்.

1.அந்நிலையிலேயே பேராசை கொண்டும் எண்ணிவிடுகின்றான்.
2.அந்தப் பேராசையினால் வருவது தான் சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்.
3.அவன் எண்ணத்திலேயே தான் அவனுக்கு எல்லாமே வருகிறது.

தான் வாழ வேண்டும்… தன் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்… வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டும்… தன்னை ஒட்டியுள்ள தன் சந்ததிகள் என்றும் இன்பமுடன் வாழ வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் பல கஷ்டங்கள் பட்டு பல செல்வங்கள் சம்பாதித்து தான் இறந்த பிறகும் தான் குடும்பத்தார் நல்ல நிலையில் வாழ வேண்டும்…! என்று சொத்து சுகத்தைச் சேர்த்து விட்டுச் செல்கின்றான் மனிதன்,

1.ஆனால் தான் பிறந்து தன் ஆத்மாவிற்கு என்ன நிலையைத் தேடிக் கொள்கிறான்…?
2.தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை.

தன் ஆத்மாவிற்கு நல்ல நிலை ஏற்படுத்திவிட்டால்… நல்ல நிலை என்பது இன்று தான் வாழும் வாழ்க்கையில் பல ஜெப நிலைகளைப் பெற்று இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்ற நிலை தெரிந்து இந்த உடலிலேயே தன் ஆத்மாவுக்குண்டான சகல சக்தியையும் தன் ஜெப நிலையில் ஏற்றச் செய்தால்
1.உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.ஆவி நிலையில் அல்லல்படாமல் பெரும் “தெய்வீக நிலையை” அந்த ஆத்மா பெற்றுவிடும்.

இந்த உடலுடன் உள்ள பொழுதே அந்த ஆத்மாவிற்கு அந்தச் சக்தி நிலையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமப்பா…!

1.நம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தானப்பா
2.நம் ஆத்மாவிற்கு நாம் வழங்கும் ஜெப நிலையை ஏற்றுக் கொள்ளும் தன்மை பெற முடிகின்றதப்பா..!

உடலுடன் உள்ள பொழுது எந்தக் கெட்ட அணுவும் அணுகாதபடி எந்தத் தீய சக்திகளும் அணுகாமல் எந்தத் தீய சக்திகளுக்கும் அடிபணிந்து அடிமையாகாமல்
1.தன் எண்ணத்தில் எவன் ஒருவன் உயர்ந்து நிற்கின்றானோ
2.அவனை எந்தத் தீய சக்திகளும் தீமையான அணுக்களும் வந்து அணுகிடாதப்பா…!

ஏனென்றால்..
1.நலிந்தோன் இதயத்திற்கு மேலும் மேலும் நலிந்த நிலை தான் வந்து அண்டிடும்.
2.நல்லோன் இதயத்திற்கு நல்ல நல்ல நிலைகள் தான் வந்து அணுகிடும் அப்பா…!

ஒருவன் எண்ணத்தில் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் உள்ள அணுக்கள் தான் அவனை வந்து தாக்கிடும். (பூவின் வாசனை கருவாடு வாசனை கதை போல் தான்…!)

மனித உடலில் உள்ள பொழுதே இப்பொழுது நாம் உண்ணும் உணவும்.. உடுக்கும் உடையும்… வாழும் வாழ்க்கையும்… அன்றன்று மறைவது தான்..! என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றி நாம் சேமிக்கும் சொத்தெல்லாம் நம் ஆத்மாவுக்கு எந்த நிலை…? என்று புரிந்து சேமித்து வைக்க வேண்டுமப்பா…!

1.நாம் வேறு நம் ஆத்மா வேறு.
2.அந்த ஆத்மாவில் ஆண்டவன் தான் கலந்துள்ளான்.
3.நம் உடலில் அந்த ஆத்மாவுடன் அவ்வாண்டவன் கலந்து குடியிருக்கின்றான் என்ற எண்ணம் மட்டும் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்திருக்க வேண்டுமப்பா..!

காலம் அழிந்தாலும் நம் ஆன்மா அழிவதில்லை. இந்த உடலில் நாம் அந்த ஆத்மாவிற்கு எந்த நற்காரியத்தைச் சேர்த்து வைக்க முடியுமோ அந்த நற்பயனை நாம் சேமித்து வைத்திட வேண்டுமப்பா…!

Leave a Reply