வசி…வசி…! என்று வசிய மந்திரம் சொல்பவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Vasiya mantram.jpg

வசி…வசி…! என்று வசிய மந்திரம் சொல்பவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே மும்மூர்த்தியின் வடிவம் என்ன…? என்ற ஒரு அன்பரின் கேள்விக்கு ஈஸ்வரபட்டர் அளித்த பதில் இது.

எட்டுத் திசையை நோக்கி எட்டுத் திசையிலும் உள்ள பாலரை வசியம் செய்து உன்னுள் ஈர்க்கப் பார்க்கின்றாய்.
1.”ஈஸ்வர சக்தி” உன்னுள் இருப்பதை அறியாமல்
2.பல பாலரை ஏனப்பா உன் வசியத்தில் ஈர்க்கிறாய்…?

இது ஆவியின் நிலையில் மந்திரவாதிகள் மந்திரிக்கும் ஜெபமப்பா…! ஆவிகளை எல்லாம் தன் வசம் இழுப்பதற்காக இந்த நிலையில் வசியப்படுத்துவான்.
1.உன்னையே நீ யார்…? என்று புரிந்து கொள்ளாமல்
2.பல ஆவிகளை ஏன் இழுக்கின்றாய் உன் வசியத்திற்கு…?

ஆவிகளின் நிலை எல்லாம் தன் எண்ணத்திற்கு… தன் பசிக்கு… எங்கு அதற்கு ஆகாரம் கிடைக்கின்றதோ அந்த நிலைக்கு வந்துவிடும். ஆவிகளை வசியப்படுத்திக் கொண்டு தான் மந்திரவாதிகளின் வேலை எல்லாம் நடக்கின்றதப்பா. நடுத் தெருவிலும் நடுஜாமத்திலும் அவர்கள் செய்யும் வேலை எல்லாம் இது தானப்பா..!

குடுகுடுப்பை அடித்துக் கொண்டு வருபவன் நடுஜாமத்தில் மயானக் காட்டில் அமர்ந்து தன் வசியத்திற்கு ஆவிகளை அழைப்பான். இந்நிலையில் ஜெபித்துத்தான் அந்நிலையில் அந்த ஆவிகளுக்குப் பிடித்த ஆகாரத்தை அளிப்பான். பல உண்மைகளை அந்த ஆவிகள் இவனுக்கு உணர்த்திடும்.

நடுநிசியிலே அந்தக் குடுகுடுப்பாண்டி நடந்து வீதி உலா வந்திடுவான். அவன் நடப்பதுவும் அவன் சொல்வதும் அவனுக்கு ஒன்றும் தெரியாதப்பா. அந்த ஆவிகள் தான் அவன் உடலில் அவன் வசியப்படுத்திய வழியில் வந்து ஒவ்வொரு இல்லத்திற்கும் சொல்லிக் கொண்டே செல்கிறது.

1.ஆனால் ஈஸ்வர சக்தியின் அருளைப் பெற்றவர்களின் இல்லத்திற்கு
2.இந்த ஆவிகள் சொல்லும் வாக்கெல்லாம் வந்து தாக்காதப்பா…!

நீ வசிய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த ஆவிகளின் நிலையிலிருந்து எப்பொழுது தான் மீளப் போகின்றாய்..? ஜெப நிலையே இன்னும் நீ புரிந்து கொள்ளவே இல்லையப்பா..!

மந்திரக்காரர்ளும் மாந்திரீகம் செய்பவர்களும் அவர்கள் ஜெபிக்கும் இடத்தில் பல வாசனைத் திரவியங்களைப் போட்டுப் புகை மண்டலத்தை எழுப்பிப் பல வகை உணவுப் பதார்த்தங்களையும் ஜீவராசிகளின் உணவுகளையும் வைத்து மந்திரம் ஜெபிக்கின்றார்கள்.

அந்த மந்திரத் தன்மையில் ஜெபிக்கும் பொழுது அதன் நிலைக்குகந்த ஆவிகள்… தீட்சண்ய ஆவிகள்… அகால மரணமடைந்த ஆவேச ஆவிகள்… தற்கொலை செய்த ஆவிகள்… பிறரினால் கொலை செய்யப்பட்ட ஆவிகள்… இந்த நிலையில் உள்ள ஆவிகள் எல்லாம் இவர்கள் படைக்கும் உணவுக்காக வரும்.

இவர்கள் ஜெபிக்கும் ஜெபத்தில் ஜெபம் என்றால் என்ன என்று எண்ணுகிறாய்…?

ஆவிகளுக்குண்டான உணவை எல்லாம் படைத்துப் புகை மண்டலங்களை எழுப்பி வசி…வசி…! என்று அந்த ஒலியின் நாமத்தை துர்மரண ஆவியின் நாமத்தை வைத்து வசி…வசி…! என்று வசியப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.மந்திரம் சொல்வதும் தகட்டில் எழுதுவதும் ஓலையில் எழுதுவதும் எல்லாமே அந்த ஆவிகளின் வசியத்தின் மூலமாகத் தான்.
2.தன் பிழைப்புக்காக தன் உயிர் நிலையையே மாற்றிக் கொண்டு பல ஏவல்கள் செய்வதெல்லாம் அந்த ஆவிகள் தான்.

மாந்திரீகர்களின் மண்டை ஓட்டை வைத்து ஜெபிப்பது என்ன என்றால் எந்த ஆவியைத் தான் வசியம் செய்து வைத்துள்ளானோ அந்த ஆவியை தன் உடல் பின்னமாகி எந்த நிலையில் எங்கு அதனின் உடலின் மண்டை ஓடு உறுப்புகள் உள்ளது என்ற நிலையைச் சொல்லிவிடுகிறது.

அதை எடுத்துக் கொண்டு வந்து அவன் ஜெபிக்கும் பொழுது இன்னும் பன்மடங்கு அவனுக்கு அந்த ஆவிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறது.
1.மாந்திரீகர்கள் அவர்கள் செய்யும் வேலைகளும்
2.இந்த மண்டை ஓடுகளும் மற்ற எலும்பு உறுப்புகளும்
3.பிறருக்குத் தெரியாத நிலையில் இருக்குமப்பா…!

மன நிலையில் சோர்வுள்ளவர்கள் மகான் என்று எண்ணி அவன் போட்டிருக்கும் சாமியார் வேஷத்தை நம்பி அவனை அணுகுகின்றார்கள்.

மனச் சோர்வடைந்த மக்கள் அவனை நாடிச் செல்லும் பொழுது
1.விபூதி வரவழைத்தோ புஷ்பம் வரவழைத்தோ இப்படிப் பல பல பொருள்களை வரவழைத்துக் கொடுப்பான்
2.மக்கள் அவன் அளிப்பதை நம்பி வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலே வைக்கின்றார்கள்.

இல்லத்திற்குள் வைத்தவுடன் எல்லாமே நல்லதாகத்தான் நடப்பதாகத் தெரியும். ஆனால் அதன் வேலை எல்லாம் இவன் உடலில் உள்ள அணுக்களை தன் நிலைக்குத் திசை திருப்பி அவன் உடலில் உள்ள அணுக்களைத் தன் வசப்படுத்த அவன் மன நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அந்த ஆவி தன் நிலைக்குகந்த ஆகாரத்தையோ தன் நிலைக்குகந்த எண்ணத்தையோ அவனை எண்ண வைத்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஆவிகளின் நிலை எல்லாம்
1.அவன் உயிரணுவுக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்து அவன் நிலையில் அவனை இருக்க விடாமல்
2.அவனையே தன் வசப்படுத்திக் கொண்டு அவனுக்குள் வந்து குடி அமர்கிறது அந்த ஆவி.

தன்னுள் இருக்கும் சக்தியை புரியாமல் மாந்திரீகரிடம் சென்று பல தீட்சண்ய ஆவிகளுக்குத் தன் நிலையையே விற்று விடுகின்றார்கள் புரியாத பாமர மக்கள்.

1.தேவர்களின் தேவனப்பா மனிதர்கள் எல்லாம்.
2.இந்த மனித உடலைப் பெறுவதே பெரும் பாக்கியமப்பா…! என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திடுங்களப்பா…!
3.மந்திர மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளின் இயக்கத்திலிருந்து விடுபடுங்களப்பா…!

தியானம் எப்படிச் செய்வது… என்று தெளிவாகத் தெரிய விரும்புபவர்களுக்கு – கேள்வி பதில்


நல்லதை வசியப்படுத்தும் தியானம் VIDEO


ANDROID APP (free) – “ESWARAPATTAR” – மறைக்கப்பட்ட உண்மைகள்

ஞானகுருவின் உபதேசக் கருத்துக்களை எல்லோரும் படித்து அதன் மூலம் தங்களுக்குள் மெய் ஞானிகளின் அருள் உணர்வை ஆழமாகப் பதிவு செய்து விண் செல்லும் ஆற்றல் பெற்று மகரிஷிகள் சென்றடைந்த சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்பதற்காகவும் ஈஸ்வரபட்டர் வெளிப்படுத்திய ஞானிகளால் வெளிப்படுத்திய மறைக்கப்பட்ட உண்மைகளை எல்லோருக்கும் உணர்த்திடவும் ஆன்ட்ராய்ட் மொபைல் ஆஃப் ANDROID MOBILE APP – “ESWARAPATTAR” என்ற பெயரில் Google Play Storeல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உபயோகித்துப் பதிவிறக்கம் செய்து உங்கள் ANDROID SMART PHONEல் INSTALLATION செய்து கொள்ளுங்கள்.

“Google play store search” மூலமாக ESWARAPATTAR APP download செய்து கொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.app.eswarapattar

Leave a Reply