சுவாச நாடிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

kundalini sakthi rakasiyam

சுவாச நாடிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காலச்சக்கரம் சுழல்கின்ற இயற்கைத் தன்மையில் எண்ணம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் அறிவின் ஞானத்தால் முதன்மையாகத் தன்னை உணர்ந்து கொண்டு
1.பின் மெய்யின் மூலத்தை உண்மை ஞானமாக்கும் உயர் ஞான வளர்ச்சிக்குச் செயல் கொள்ள
2.”சுய முயற்சி…” என்ற ஊக்கத்தால் தான் நல்லாக்கம் பெறுகின்றான்.

வானை நோக்கி ஏகி உயர் ஞானத்தினால் வான இயலின் கருத்தை அறிய வேண்டிய செயலில் நம் பிரபஞ்சத்தில் உள்ள நவக் கோள்களும் சூரியனை மையப்படுத்திச் சுழன்றே ஓடிடும் ஓட்ட கதியில் நவஜோதித் தத்துவமாக ஈர்த்தெடுத்து உயிராத்ம சக்தியையே நீல வண்ண இராமனாகக் காட்டியதுவும் அதற்குத்தான்.

கால நேரம் இரவு பகல் என்ற செயல்களை மனிதன் அறிந்து கொள்ள விநாடி நிமிடம் மணி என்று அறிவுப் பூர்வமாக உபகரணங்கள் கொண்டு காலத்தைக் கணித்தாலும் பண்டைய காலத்தில் வாழ்ந்த சித்தன் காலத்தை எப்படிக் கணித்தான்…? எதைக் கொண்டு காட்டினான்…?

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தை அளந்தான்.
1.பிண்டமாகிய இந்தச் சரீரத்தில்
2.சுவாசத்தின் ஓட்ட கதியில் உயர் ஞானத்தைச் செலுத்தி அறிந்து கொண்டான்.

தன்னை உணர்ந்த நிலையில் இந்தச் சரீரத்தின் உள்ளே நடக்கும் சகல காரியங்கள் கொண்டே வான இயலையும் உலக வாழ்க்கைக்குகந்த நல் நெறிகளையும் உலகினுக்கு ஈந்தான்.

நாழிகை என்று அன்று காட்டியது சொல் நாமத்தில் தான் இன்றைய மாறுபாடு. அறுபது நாழிகையை ஒரு நாள் என்று தன் சுவாசத்தைக் கொண்டே காலத்தைக் கணித்தான் அன்றைய சித்தன்.

சுவாசத்தையே சூரியன் என்றும் சந்திரன் என்றும் அக்கினி என்றும் வகைப்படுத்தி அதன் செயல்பாட்டைக் “கலைகள்…” என்றும் காட்டினான்.

1.நாசியின் இடது துவாரத்தைச் சந்திரனாகிய இடகலை என்றும்
2.நாசியின் வலது துவாரத்தைச் சூரியன் பிங்கலை என்றும்
3.இந்த வகைகளில் ஓடிடும் சுவாசத்தின் வேகத்தை உஷ்ண அலை கொண்டு மறைமுகமான அந்தச் சுவாசத்தையே
4.மறைமுகமான அக்கினி – சுழுமுனை என்றும் பெயர் வைத்தான்.

சுவாசங்களின் ஓட்டத்தைக் கொண்டே அனுபவ ஞான அறிவினால் தெளிந்து உலகோதய நடைமுறைச் செயல்களுக்கும் மெய் ஞானத்தைப் பெறும் வழிகளுக்கும் அதனின் சூட்சமங்களை உணர்த்திக் காட்டினான்.
1.சமமாக ஓடும் சுழுமுனைச் சுவாசமே (உயிர் வழிச் சுவாசம்)
2.”யோக சுவாசம்…” என்று சொன்ன சொல்லிலும் உண்மை உண்டு.

சூரிய கலையில் ஓடும் சுவாசத்தையும் சந்திர கலையில் ஓடும் சுவாசத்தையும் கொண்டு உட் சென்று வெளி வரும் சுவாசங்களில் முழுமையை மாத்திரம் கணக்கிட்டு அக்கினி என்ற சுழுமுனை சுவாசத்தை விலக்கி உலக வாழ்க்கையில் நன்மை தீமை என்ற காரியார்த்த நடைமுறைகளுக்கு பயனுறும் விதமாக மூச்சலைகளின் எண்ணிக்கை கொண்டு காலத்தைக் கணித்து அறுபது நாழிகை ஒரு நாள் என்று காட்டினான்.

மூலம் குறி நாபி இருதயம் கண்டம் அறுகோண கருவறை உச்சி என்றும் உச்சியின் மேல் பகுதி சிரசைக் கடந்த ஆகாயம் என்ற சூட்சமச் செயல்களை உணர்வதோடு அல்லாமல்
1.இந்தச் சரீரத்தில் ஓடிடும் சகல நாடிகளையும் அறிந்து
2.அவற்றில் பத்தைத் தெளிந்து
3.அவற்றிலும் சிறப்பு மூன்று என்று காற்று நூலை அறிந்துணர்ந்தான் சித்தன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply