மின்னலைப் பேரொளியாக மாற்றிக் கொள்ளும் பயிற்சி

Lightning spiritual bolt

மின்னலைப் பேரொளியாக மாற்றிக் கொள்ளும் பயிற்சி

 

மின்னல் ஒரு மனிதனைத் தாக்கினால் அந்த உடல் கருகி விடுகின்றது. ஆனால் உயிர் கருகுவதில்லை. அது துடித்துக் கொண்டே தான் இருக்கும். (உயிருக்கு அழிவே இல்லை…!)

பின் உடலை விட்டுச் சென்ற பின் இந்தக் கருகிய உணர்வு கொண்டு மீண்டும் புழுவாகப் பூச்சியாகத் தான் அது பிறக்கும். மனித உருவுக்கு வர முடியாது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் வலு ஏற்றிக் கொண்டால்
1.அந்த மின்னலையும் நமக்குள் மின் கதிராக மாற்றி
2.மின்னலில் வரும் எதிர் நிலையை மாற்றி நமக்குள் தீமைகளை வென்றிடும் சக்தியாகப் பெற முடியும்.

அதாவது மின்னல் பட்ட பின் உடலையோ மரத்தையோ மற்றதைக் கருகச் செய்கிறது. மின்னல் பூமியின் நடு மையம் ஊடுருவிச் சென்றால் அங்கே கொதிகலன்களாக மாறி பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

அத்தகைய மின்னலின் தன்மையும் தனக்குள் கவர்ந்து எதனையுமே வென்றிடும் அருள் சக்தியாகப் பெற முடியும். அத்தகைய பேரருள் உணர்வைத்தான் ஞானத்தின் உணர்வாக உங்களுக்குள் பதியச் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

பேரருள் என்றால் “அனைத்தையும் இயக்கக்கூடிய.. அறிந்து கொள்ளக்கூடிய சக்தி…!” என்று பொருள். அப்படி ஆனது தான் துருவ நட்சத்திரமும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் வளரும் சப்தரிஷி மண்டலமும்.

சூரியன் எப்படி மற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் தன்னுடன் இணைந்து வாழச் செய்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் அரவணைப்பில் சென்று நாமும் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
1.இனம் இனத்தைத் தான் சேரும்.
2.இனம் இனத்தைத்தான் வளர்க்கும்.

வேதனை என்ற உணர்வை விளைய வைத்தால் அந்த வேதனைப்படுத்தும் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த இனத்தின் ரூபத்தைப் பெற உயிர் அங்கே அழைத்துச் சென்று அந்த உடலைப் பெறச் செய்கிறது.

அதைப் போல துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும்
1.பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டால்… அதன் வலுவைப் பெற்றால்
2.அந்த இனத்தோடு நாம் சேர்க்கப்பட்டு
3.நம் உடலில் வரும் இருளை அகற்றி மெய் வாழ்க்கை வாழ முடியும்.

உங்களை நம்புங்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் உங்களை அதுவாகவே உருவாக்குகின்றது அதன் வழியே உங்களை வழி நடத்துகின்றது. பேரருள் பெற்றுப் பேரொளியாக மாறுங்கள்…!

Leave a Reply