“நினைவு நாள்” அன்று எதை நினைக்க வேண்டும்…?

auspicious day

“நினைவு நாள்” அன்று எதை நினைக்க வேண்டும்…? 

 

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் வருடா வருடம் நினைவு நாள் வைத்து வணங்குகிறோம். ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் அதைச் செய்கின்றோமா…?

நினைவு நாள் அன்றைக்கு அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தோ மற்ற அவர்களுக்கு விருப்பமானவற்றைப் படைத்து வைத்து அவர்களைக் கூப்பிடுகின்றோம்.

அப்படிக் கூப்பிட்டுக் கவர்ந்தோம் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்கள் நம் உடலில் தான் வந்து சேரும்.
2.அவர்கள் கடைசிக் காலத்தில் அவர்கள் உடலில் அனுபவித்த நோய்களும் நமக்குள் வந்து சேரும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அவர் அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று ஏகோபித்த நிலையில் விண்ணிலே உந்தித் தள்ள வேண்டும்.

இப்படி எல்லோரும் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை அந்த சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் உந்தித் தள்ளினால் அவர் உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கு கரைக்கப்படுகின்றது. அவர் அங்கே ஒளி உடல் பெறுகின்றார். இது தான் ஞானிகள் காட்டிய வழி.

1.அவர் ஆன்மா ஒளி உடல் பெற்று சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து வந்தாலும்
2.வருடா வருடம் நாம் நினைவு நாள் கொண்டாடினாலும் இதே முறைப்படித்தான் செய்ய வேண்டும்.

ஏன்…?

அவருடன் நாம் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ வகையான வேதனைகள் வெறுப்புகள் இருக்கும். அதே சமயத்தில் கடைசி நிமிடத்தில் அவர் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நேரத்திலும் கடும் விஷத் தன்மையாகி மடிந்தபின்தான் அந்த ஆன்மா வெளியேறுகின்றது.
1.இதை எல்லாம் நமக்குள் அவர் உணர்வாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா…!
2.அவருடைய நினைவு நாள் என்று அவரை எண்ணி ஏங்கும் பொழுது
3.அவரின் உணர்வுகள் நம் உடலுக்குள் இருப்பதற்கு மீண்டும் ஜீவன் கிடைத்து
4.அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கும்.

பின் அவர் எப்படி சிரமப்பட்டு நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வேதனையுடன் பிரிந்தாரோ அதே நிலை தான் நமக்கும் ஏற்படும்

மாறாக நாம் நினைவு நாள் அன்று கூட்டுத் தியானங்களை அமைத்து
1.அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த அந்த உணர்வை ஏங்கிப் பெறும் போது
2.அது நம் இரத்த நாளங்களில் கலந்து
3.நம் உடலில் அவர் உடலில் சேர்த்த தீய வினைகள் நமக்குள் வளராது தடுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அவர்கள் உணர்வுடன் பழகிய அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் இருந்தால்
1அந்தப் பேரருள் என்ற அந்த ஒளியான உணர்வினை
2.நம் உடலுக்குள் இருக்கும் அவரின் உணர்வு அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றோம்.

திரும்பச் சொல்கிறோம் என்று எண்ண வேண்டாம்…!

முதலிலே… அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இந்த நஞ்சின் உணர்வைக் கரைத்து விட்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக உருவாக்கி விடுகின்றோம். நாம் தியானித்த உணர்வின் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் சப்தரிஷி மண்டலங்களாக ஆகிவிடுகின்றனர்.

பின் அவர்களும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வருவதை உணவாக உட்கொண்டு அந்த உணர்வினை அவர்களுக்குள் வளர்த்து அழியாத ஒளி உடலாக அவர்கள் வாழ்ந்து வரத் தொடங்குகின்றர்கள்.

அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வினை நாம் குரு காட்டிய வழியில் நாம் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கும் போது அவர் ஒளியின் உடல் பெற்ற அந்த உணர்வுகளை நுகர்கின்றோம்.

அவருடன் வாழ்ந்த காலங்களில் வெறுப்போ வேதனையோ சலிப்போ நோயோ இதைப் போன்ற உணர்வுகள் அவருடைய உணர்வு நமக்குள் இருப்பதனால் அந்தப் பேரருள் என்ற ஒளிச் சரீரம் பெற்ற அவருடைய உணர்வை நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது தீமைகளை நீக்கிடும் உணர்வின் உணர்வாக நாம் பெறுகின்றோம்.
1.அது தான் நினைவு நாள் என்பது.
2.நினைவு நாள் அவருக்காக அல்ல.
3.நமக்குள் இருக்கும் அவர் உணர்வின் அணுக்கள் ஒளியாக மாற வேண்டும்
4.சப்தரிஷி மண்டலங்களில் அவர் ஒளியாக வாழ்வது போல் நாமும் பேரொளியாக வேண்டும்
5.இந்த உடலுக்குப் பின் நாமும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்பதற்குத்தான்.

ஆகவே உடல் பெறும் உணர்வுகளை அது உணவாகக் கொடுக்கும் போது நோய்களாக வருகின்றது. ஒளியாக மாற்றிய உணர்வுகளை உணவாகக் கொடுக்கும் பொழுது பேரொளியாகின்றது. அழியாத நிலைகள் அவர்களும் பெறுகின்றார்கள். நாமும் பெறுகின்றோம்.

Leave a Reply