முருகா… அழகா…! என்று சொல்வதன் உட் பொருள் என்ன…?

Muruga murugu

முருகா… அழகா…! என்று சொல்வதன் உட் பொருள் என்ன…?

 

ஒரு சமயம் ஆன்மீகப் பெரியவர் ஒருவரிடம் விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டு இருக்கின்றார்கள். அதற்கு என்ன அர்த்தம்…? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டேன்.

முருகனுக்குப் முன்னாடி மயிலைப் போட்டு வைத்து காலடியில் பாம்பைப் போட்டு வைத்து இருக்கிறது. இது என்னங்க..? என்றும் நாம் (ஞானகுரு) கேட்டேன்.

கேட்டவுடனே அந்தப் பெரியவர் எதை எதையோ சொல்லிக் கொண்டு வந்தார். தான் படித்த பாட நிலைகளைச் சொல்லிக் கொண்டே வந்தார்.

சுருக்கமாகச் சொல்லுங்கள் எனக்கு அர்த்தம் ஆகவில்லை. நான் படிக்காதவன்.. நீங்கள் படித்தவர்…! என்று சொன்னேன்.

அவரால் ஒன்றும் விளக்கமாகச் சொல்ல முடியவில்லை. அப்புறம் நான் விளக்கத்தைச் சொன்னேன்.

ஒரு வேதனைப்படுபவனை நான் பார்க்கின்றேன். பார்த்து அந்த வேதனையை நான் நுகர்கின்றேன். சுவாசித்த உடனே உயிர் அதை என்ன செய்கிறது…?

என் உடலுக்குள் வேதனையை உருவாக்கும் அணுவின் கருவாக உருவாக்குகிறது. கரு முட்டையாகி வெடித்து அந்த அணு உருவான பிற்பாடு என்ன செய்கிறது…?

உருவான அந்த அணு மீண்டும் வேதனைப்படச் செய்யும் உணர்வையே உணவாகத் தனக்குள் சேர்க்கிறது. அதன் வழியில் என்னை வேதனைப்படும்படியாகத் திருப்பித் திருப்பி எண்ணச் செய்கிறது.

வேதனை வேதனை என்று சுவாசித்து உடலுக்குள் வளர்த்துக் கொண்ட நிலையில் அதனின் கணக்கு அதிகமான பிற்பாடு எங்கே போகிறோம்…!

உடல் சிவமாகின்றது. வேதனையான உணர்வின் கணக்குக் கூடிய நிலையில் அடுத்து நம்மைப் பாம்பாக பிறக்கச் செய்கிறது நம் உயிர்.

1.அவன் இல்லை என்றால் அணுவும் அசையாது.
2.அதாவது இந்த உயிர் என்ற ஈசன் இல்லை என்றால் உடலான ஈசன் என்னாகும்…?
3.ஒன்றும் செய்ய முடியாது.

மூஷிகவாகனா அதாவது எலியை வாகனமாகப் போட்டுள்ளார்கள். இப்போது நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தேன். அதைச் சுவாசித்தேன். உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்று எண்ணி வந்தேன்.

அந்த உயர்ந்த ஞானத்தைக் கேட்டு உயர்ந்த வழியில் நான் சிந்தனை செய்தால் அது கணங்களுக்கு (உடலில் உள்ள குணங்களுக்கு) அதிபதியாகிறது.

விநாயகர் அருகிலே வேப்ப மரத்தை வைத்தார்கள் என்கிற போது மனித வாழ்க்கையில் ஒருவன் சிரமப்படுகின்றான் என்று பார்க்கின்றோம். அவன் படும் வேதனையை நுகரப்படும் போது அது மாறி நமக்குள் தாயாக வந்து விடுகிறது.

நம்முடைய நல்ல குணத்தைக் கொண்டு தான் மற்றவர்களைப் பார்க்க வேண்டும். ஆனால் அந்த நல்ல குணத்தைக் கொண்டு நாம் பார்க்கும் போது பிறர் படும் வேதனையான உணர்வுகள் அந்த அணுக்கள் நம் உடலுக்குள் புகுந்தவுடனே என்ன செய்கிறது…?

1.பூமிக்குள் (தரையில்) எலி எப்படி வங்கு போடுகிறதோ இதே மாதிரி
2.நம் உடலுக்குள் வந்த அந்த வேதனைபப்டும் அணு நம் நல்ல குணத்தை எல்லாம் வங்கிட்டு விடுகின்றது.

சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் “ஓ…” என்று இயங்கினாலும் அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் இதற்குள் சேரத்தவுடனே “ஓமுக்குள் ஓ…ம்” ஆகின்றது.

ஓ…ம் என்று ஜீவ அணுவாக உடலாக ஆனது. ஆனால் அதை அடக்கக்கூடிய வலிமை கொண்ட ஓங்காரமாக அந்த வேதனையான அணு இங்கே வருகிறது

1.இந்த ஓங்காரத் தன்மை வந்தவுடனே
2.நம்முடைய நல்ல சுருதிகள் குறைகிறது.
3.அப்போது அதை அடக்கி ஆளும் அந்த அணுவின் தன்மையாக வேதனை வருகிறது.

நம் உயிர் ஓ என்று இயக்கிக் கொண்டிருந்தாலும் நாம் எண்ணியதை எல்லாவற்றையும் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகிறது.

ஓமுக்குள் ஓமாகி… அந்த ஓமுக்குள் ஓ…ம் வேதனை வரப்போகும் போது உடலிலே எப்படி மாற்றம் ஆகிறது…? என்பதைக் காட்டுவதற்குத் தான் எலியை போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

புறத்திலிருந்து நாம் சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் குடி புகுந்து நல்ல குணங்களை வங்கு போட்டுத் தன் இருப்பிடமாக்குகிறது என்பதைச் சாதாரண மனிதனும் புரிந்து கொள்வதற்காக அப்படிக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்.

அதாவது நாம் நல்ல குணம் கொண்டு வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அந்த வேதனையை நுகர்ந்தால் நம் நல்ல குணத்தை அது வங்கு போட்டுக் குடி கொள்ளும் என்றனர் ஞானியர்.

அந்த அரத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் எலிக்கு அபிஷேகம் செய்து எலிப் பாடல்கள பாடி விநாயகரைத் தூக்கி அவன் சுமந்தான் என்ற நிலையில் அத்தனை பெரிய சரீரம் எலி மேல் உட்கார்ந்தால் என்ன ஆகும்…?

நசுங்கிப் போகும் அல்லவா…! இதையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமா இல்லையா…?

வேதனை உணர்வு நுகர்ந்த பின் அந்த விஷத்தின் தன்மை நம்மை ஆட்கொள்கின்றது. அதை அடக்க என்ன செய்ய வேண்டும்…?
1.உடனே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
3.உடலுக்குள் பல முறை செலுத்தப்படும் போது அந்த வேதனையை ஒடுக்குகின்றது.

ஏனென்றால் நஞ்சினை அடக்கி அதை ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் மகரிஷிகள். அவர்கள் அருள் சக்தியை எடுக்க்கப்படும் பொழுது நம் உடலுக்குள் அறியாது வந்த நஞ்சை அடக்குகின்றது.

அதற்கு அடுத்து யாரைப் பார்த்து நாம் வேதனைப்பட்டோமோ அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் நன்றாக வேண்டும் என்ற எண்ணத்தை நாம் எண்ணுதல் வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்…
2.நோயிலிருந்து விடுபடுவாய்.
3.உனக்கு நோய் இல்லை நீ நன்றாக இருப்பாய் என்று அவரிடமும் சொல்லாகச் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லப்படும் பொழுது நமக்குள்ளும் மகிழ்ச்சி தோன்றுகிறது. அவரையும் மகிழச் செய்யும் உணர்வாக வருகிறது.
1.அப்போது அந்த விஷம் நமக்குள் ஒடுஙகுகின்றது.
2.அவரும் அதை எண்ணினால் விஷம் அங்கேயும் ஒடுங்குகின்றது.

கருணைக் கிழங்கு இருக்கிறது என்றால் மாடு அதை முகர்ந்து பார்த்து விட்டு விலகிப் போய்விடுகிறது. ஆனால் மனிதனான நாம் என்ன செய்கிறோம்…?

அதை வேக வைத்து விஷத் தன்மையை ஒடுக்குகிறோம். புளியைக் கரைத்து ஊற்றினோம் என்றால் விஷத்தின் அரிப்பை ஒடுக்குகின்றது. மிளகாயைக் கலந்த பின் உணர்ச்சியைத் தூண்டுகிறது. உப்பு கைப்பாக இருக்கிறது. இதையும் சேர்த்தவுடனே அங்கே சுவை வருகின்றது.

விஷமான கருணைக் கிழங்காக இருந்தாலும் அதை எல்லாம் முறித்து விட்டுச் சுவையாக உருவாக்குகின்றோம். மாற்றி அமைக்கின்றோம்…!

முருகனுக்கு “முருகு…” என்று ஒரு பேர் உண்டு. ஏனென்றால் மனிதனான பின் மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவின் சக்தியை முருகு என்று காட்டுகின்றார்கள் ஞானிகள். இதெல்லாம் சந்தர்ப்பம்.

அடுத்தாற்போல அந்தக் கருணைக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் ருசி வருகின்றது. நமக்குள் மகிழ்ச்சி வருகிறது. ஆகவே நஞ்சை ஒடுக்கி அழகுபடுத்தும் நிலையாக வருகின்றது. அதற்குத்தான் மயிலின் காலடியில் பாம்பைப் போட்டுள்ளார்கள்.

முருகா… அழகா…! என்று காரணப் பெயர் வைத்து இதை நமக்குத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

Leave a Reply