தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தியை எப்படிக் கூட்டிக் கொள்வது…?

 

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தியை எப்படிக் கூட்டிக் கொள்வது…?

 

குருவின் துணையால் அகஸ்தியன் துருவனாகி அந்தத் துருவ நட்சத்திரமான அதனின் பேரருள் பேரொளியைப் பெறுவோம். இந்த உணர்வுடன் இப்பொழுது எண்ணி ஏங்கி தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.

ஏனென்றால், இதைத் தாண்டித்தான் (புருவ மத்தியைத் தாண்டித்தான்) உயிருக்குள் மோத வேண்டும்.

காலையிலிருந்து வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் என்று எடுக்கும்போது எல்லாம் முன்னாடி தான் இருக்கின்றது.

அப்பொழுது இத்தகைய வலுவான உணர்வை (துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்) எடுக்கும்போது அதைப் போகவிடாமல் தடுக்கின்றீர்கள்.

தடுத்துக் கொண்டபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும், எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உணர்வை வேகமாகப் பாய்ச்சுங்கள்.

1.அவன் இப்படிச் செய்தான்,
2.இவன் அதைச் செய்கின்றான்
3.கொடுத்தவன் கொடுக்க மாட்டேன் என்கிறான் என்று
4.வெறுப்பு வேதனையாகக் காலையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உள்ளுக்குள் சேர்த்து வலுவானபின் அனாதையாகி விடுகின்றது.

தீமை செய்யும் உணர்வுகள் அனாதையான பின்
1.சூரியனின் காந்தப் புலனறிவுகள் எடுத்துச் சென்றுவிடுகின்றது.
2.நம் ஆன்மா சுத்தமாகின்றது.
3.ஆன்மாவைச் சுத்தமாக்கும் முறைதான் இது.

உங்களை இப்படிச் சுத்தப்படுத்தாதபடி பையனுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவன் நோய் அனைத்தும் நீங்க வேண்டும் உடல் நன்றாக வேண்டும் என்று சொல்லி இந்த இராகம் பாடினால் அந்த நோய்தான் உங்களுக்கு வரும். அதை நீக்க முடியாது.

சிலர் படித்துக் கொண்டபின் நான் இப்படித்தான் பண்ணினேன், என் பையனுக்கு நோய் நீங்க வேண்டும் நோய் நீங்க வேண்டும் என்றுதான் தியானம் செய்தேன் என்று சொல்வார்கள்.

ஏனென்றால் இப்படி எண்ணி இந்த உணர்வை நுகர்ந்தால் வேதனைதான் வரும். இங்கேயும் நோய் வரும் அங்கேயும் நோய் வரும்.

அதே மாதிரி பையனை எண்ணி அவன் படிக்கவில்லை, படிக்கவில்லை என்று சொல்வார்கள். அவன் இந்த மாதிரி படிக்காமல் இருக்கின்றானே படிக்காமல் இருக்கின்றானே என்று இதைத் தியானம் செய்வார்கள்.

ஆக, அவன் மேல் வெறுப்பின் தன்மையை எடுத்துத் தியானம் செய்வார்கள். இதுவெல்லாம் முறையற்றது.

தியானத்தில் அமர்ந்திருக்கும்போது அவன் உணர்வுகளெல்லாம் அதிகமாக இருக்கும். வலு இல்லை. அப்படி இருக்கும் போது பையன் இப்படிச் செய்கின்றானே இப்படிச் செய்கின்றானே என்று எண்ணுவார்கள்.

1.அப்புறம் என்ன செய்வார்கள்?
2.அப்படி இப்படி என்று பார்ப்பார்கள்.
3.நெளித்துப் பார்ப்பார்கள். பிறகு முடியாது.
4.பையன் உணர்வுதான் முன்னாடி வரும்.
5.அப்பொழுது நீங்கள் என்ன செய்யவேண்டும்?

உடனே கண்களைத் திறந்து நேராக அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.

எதை?

உங்கள் நினைவை அங்கே துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி அப்படியே கண்களை மூடுங்கள், உள்ளுக்குள் செலுத்துங்கள்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் பெறவேண்டும் அவன் உடல் முழுவதும் படரவேண்டும் அவன் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும். அவன் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

இப்படி நமக்குத் தொல்லை கொடுக்கும் உணர்வுகள் வெறுப்போ, வேதனையோ, வேதனைப்படுவோரின் உணர்வுகளோ வந்தால் உடனே என்ன செய்யவேண்டும். தியானிக்கும்போது வேறு எண்ணம் வந்தால்

1. கண்களைத் திறங்கள்
2. நேராக துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள்
3. அந்த உணர்வின் தன்மை கண் வழி கவருங்கள்
4. கண்களை மூடுங்கள்
5. உயிர் வழி உள்ளுக்குள் செலுத்துங்கள்
6. துருவ நட்சத்திரத்தின் உணர்வை உள்ளே அனுப்புங்கள்

இந்த முறைப்படி நீங்கள் செய்து பாருங்கள். இந்தத் தியானத்தில் அந்தச் சக்தி நிச்சயம் கிடைக்கும்.

ஏனென்றால் உள்ளுக்குள் அழுக்கு அதிகம் இருக்கின்றது. அதை மாற்றுவதற்கு இப்படித்தான் செய்ய வேண்டும்.

உங்களால் இது முடியும். சிறிது நாள் முயற்சி எடுத்தால் பழையது எல்லாம் மாறும். ஒரு புதுமையான சக்தியை நாம் பார்க்கலாம்.

நல்ல நிலையில் இருக்கும் போது நன்மை செய்யும் போது பிறருடைய தீமைகளைக் கேட்டறிந்த பின் நமக்குள் அழுக்கான நிலைகள் வந்து நோயாகித் தீமைகள் விளைவிக்கின்றது.

இதே போல தீமையை நீக்கிய உணர்வின் தன்மை அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் எடுக்க வேண்டும். இதுதான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நாம் “தீமைகளை நீக்க வேண்டிய முறை…!”

Leave a Reply